TNPSC Thervupettagam

நான்கு சாதிகளின் உண்மை நிலைதான் என்ன

December 26 , 2023 144 days 110 0
  • இந்தியாவில் இப்போது நான்கு சாதிகள்தான் இருக்கின்றன என்பது பிரதமரின் பேச்சுக்குப் பிறகு ஒருவாராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது; ஆனால் உண்மையில் நான்கு வர்ணங்களும் எண்ணற்ற சாதிகளும்தான் (ஆயிரக்கணக்கில்) சமூகத்தில் இருக்கின்றன. அந்த நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். தீண்டத்தகாதவர்கள்என்று ஒதுக்கப்பட்ட மக்கள், சூத்திரர்களுக்கும் கீழே சாதியப் படிநிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்களை தலித்துகள்என்று அழைக்கின்றனர்.
  • வர்ணங்கள்தான் இந்தியாவின் சாபக்கேடு, சமூக நலிவுக்கு மூலவேர் அவைதான் சமூகத்தில் சாதியப் படிநிலைகளை உருவாக்கிவிட்டன, மக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு எதிராக - பாரபட்சமாக மற்றவர்கள் நடக்கக் காரணமாகத் தொடர்கின்றன, வேலைகளையும் சமூக அடிப்படையில் பகுத்துவி்ட்டன, மக்கள் முன்னேற முடியாமல் முடக்கிவிட்டன, வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கவே முடியாமல் மக்களில் கால்வாசிப் பேரை விலக்கியே வைத்துள்ளன.
  • எனவே, இந்தியாவில் இருப்பது நான்கு சாதிகள்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரித்திருப்பதை வரவேற்கிறேன் ஏழைகள், இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் என்று அவர் பகுத்திருக்கிறார். மற்றதையெல்லாம் புறந்தள்ளுங்கள், மோடியின் இந்தியாவில் அவர் குறிப்பிடும் இந்த நான்கு சாதியினர் எப்படி இருக்கின்றனர் என்று பார்ப்போம்.

ஏழைகள்

  • ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவு (யுஎன்டிபி) இந்தியாவில் 228 லட்சம் பேர், அதாவது 22.8 கோடி (மொத்த மக்கள்தொகையில் 16%) ஏழைகள் என்று மதிப்பிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கைகூட வறுமைக்கான அளவுகோலை மிகவும் குறைவாக நிர்ணயித்திருப்பதால் ஏற்பட்டது: நகர்ப்புறமாக இருந்தால் மாதத்துக்கு ரூ.1,286க்குக் குறைவாகவும் கிராமப்புறமாக இருந்தால் மாதத்துக்கு ரூ.1,089க்குக் குறைவாகவும் வருவாய் பெறுகிறவர்கள் மட்டுமே ஏழைகள்.
  • பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நடைமுறைகள் விலக்கப்பட்டதாலும், பொருளாதாரக் கொள்கைகளில் தாராளமயம் புகுத்தப்பட்டதாலும் 1991க்குப் பிறகு, கோடிக்கணக்கான மக்கள், தனிநபர் வருவாய் பெருகியதால் வறிய நிலையிலிருந்து தப்பித்து ஏற்றம் பெற்றனர்.
  • ஆனால், இப்போதுள்ள பிற தரவுகளைப் பரிசீலியுங்கள். இந்திய மக்கள்தொகையில் பொருளாதாரரீதியாக கீழ் நிலையில் இருக்கும் 50% மக்களிடம் நாட்டின் சொத்தில் வெறும் 3% மட்டுமே இருக்கிறது, நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 13% மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.
  • குழந்தைகளில் 32.1% அவர்களுடைய வயதுக்கேற்ற எடை இல்லாத எடை குறைந்தவர்கள், 19.3% வயதுக்கேற்ற வலிமை இல்லாதவர்கள், 35.5% பேர் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள். மகளிரில் 15 முதல் 49 வயது வரையுள்ளவர்களில் 50%க்கும் அதிகமானவர்கள் ரத்த சோகையால் அவதிப்படுகிறவர்கள். இந்தக் காரணங்களால் ஒன்றிய அரசு 81 கோடி மக்களுக்கு (மக்கள்தொகையில் 57%), ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ விலையில்லா உணவு தானியம் என்று அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்க முடிவெடுத்திருக்கிறது. அப்படியென்றால் பட்டினியும் ஊட்டச் சத்துக்குறைவும் நாடு முழுவதும் பரவலாக இருக்கிறது என்று பொருள்.
  • இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலைமை தொடர்பாக அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2023ஆம் ஆண்டுக்கு அளித்த அறிக்கையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் வேலையில் இருக்கும் தொழிலாளர் பற்றிய கணக்கெடுப்பும் கூறுவது எதையென்றால் 2017-18 தொடங்கி 2022-23 வரையில் நிலையான விலைவாசி அடிபபடையில், மூன்று வகைத் தொழிலாளர்களின் மாதாந்திர ஊதியம் தேக்க நிலையிலேயே இருக்கிறது. எனவே, மக்கள்தொகையில் 16% மட்டுமே ஏழைகள் என்பதுகூட உண்மை நிலவரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.

இளைஞர்கள்

  • இந்திய மக்கள்தொகையில் சரிபாதி 28 வயதுக்கும் குறைவானவர்கள். வேலைவாய்ப்பில் தொழிலாளர் பங்கேற்பு தொடர்பாக 2022 ஜூலை முதல் 2023 ஜூன் வரையிலான காலத்தில், 15 வயது முதல் 29 வயது வரையிலானவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் சராசரியாக 10.0% (கிராமப்புறங்களில் 8.3%, நகர்ப்புறங்களில் 13.8%).
  • இந்தியா முழுவதற்கும் வேலையில் இருப்போர் நிலைமை பற்றிய அறிக்கைப்படி 2023இல் 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 42.3%ஆக இருக்கிறது. நீண்ட காலமாக வேலைக்காக காத்திருந்து பிறகு வயது முதிர்ந்தவர்கள் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவதால் வேலையில்லாத் திண்டாட்ட சதவீதம் குறைந்துவிடுகிறது! 30 வயது முதல் 34 வயது வரையிலானவர்கள் இடையிலும் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 9.8%ஆக இருக்கிறது.
  • வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் என்பது வேலைதேடி உள்நாட்டிலேயே இடம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதிலிருந்தும், குற்றச்செயல்கள் எண்ணிக்கை, வன்செயல்கள், போதை மருந்துகளைப் பயன்படுத்துதல் ஆகியவை பெருகுவதிலிருந்தும் அறிந்துகொள்ள முடியும். ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அளித்த வாக்குறுதி, தேர்தல் கால பசப்புரை என்றாகிவிட்டது.
  • நாடாளுமன்றத்தில் 2023 ஜூலையில் அளித்த எழுத்து மூலமான பதிலில், 2022 மார்ச் நிலவரப்படி 9,64,359 காலியிடங்கள் அரசு வேலைவாய்ப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் இந்த அளவுக்குப் பெருகியது ஏன் என்பதற்கு அரசிடமிருந்து பதிலோ விளக்கமோ இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது குமுறும் எரிமலையைப் போல - என்றாவது ஒரு நாள் அது பயங்கரமாக வெடிக்கும்.
  • மகளிர்
  • நாட்டின் மக்கள்தொகையில் மகளிர், கிட்டத்தட்ட சரிபாதி. அவர்களுடைய நிலைமை பின்தங்கியிருப்பதற்குப் பல காரணங்கள்: ஆணாதிக்க சமுதாயம், பிற்போக்கான சமூக பண்பாட்டு நியதிகள், குறைந்த அளவிலான கல்வி, சொத்துகளே இல்லை என்ற நிலை, உயர் அளவிலான வேலைவாய்ப்பின்மை, பாலினரீதியாக கடைப்பிடிக்கப்படும் பாகுபாடு, மகளிருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் என்று பல.
  • தேசிய குற்றப் பதிவேடு அறிக்கையின்படி (2023 டிசம்பர்), 2021 உடன் ஒப்பிடும்போது 2022இல் குற்றச்செயல்கள் எண்ணிக்கை 4% அதிகரித்து 4,45,000 என்றாகியிருக்கிறது. மகளிருக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் அவரவர் குடும்ப உறுப்பினர்களாகவே இருக்கின்றனர். வீடுகளிலேயே பெண்கள் தாக்கப்படுகின்றனர், கொடுமைப்படுத்தப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர், வரதட்சிணைக்காகக் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
  • சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களைவிட பெண்களைத் தாழ்த்துவதும், ஊதியம் போன்றவற்றைக் குறைத்துக் கொடுப்பதும், சலுகைகளை மறுப்பதும், கேள்விக் கேட்க விடாமல் அச்சுறுத்துவதும் தொடர்கிறது.
  • அன்றாட ஊதிய அடிப்படையில், ஒரே மாதிரியான வேலைக்கு ஆண்கள், பெண்களைவிட 48% அதிக ஊதியம் பெறுகின்றனர், நிரந்தர வேலையில் பெண்களைவிட ஆண்களுக்கு 24% ஊதியம் தரப்படுகிறது.
  • மக்கள்தொகை அடிப்படையில் நகர்ப்புற பெண்கள் பங்கேற்பு 21.9%ஆகவும் ஆடவர் பங்கேற்பு 69.4%ஆகவும் இருக்கிறது. வேலைக்குச் செல்வதில் நகர்ப்புற மகளிர் விகிதம் 24.0%ஆகவும் ஆடவர் விகிதம் 73.8%ஆகவும் இருக்கிறது. உலக வங்கி அறிக்கையின்படி 2004-05 முதல் 2011-12 வரையிலான காலத்தில் 196 லட்சம் மகளிர், வேலையிலிருந்து நின்றுவிட்டனர்.
  • இந்த வேறுபாடுகளையெல்லாம் களைய எண்ணாமல் புறக்கணித்தால், இனி வரும் பல பத்தாண்டுகளிலும் பெண்கள் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள்.
  • விவசாயிகள்
  • தேசிய குற்றப் பதிவேட்டின் தரவுகள்படி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை 2014 முதல் 2022 வரையில் அதிகமாகி இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையையும் இதில் சேர்த்தால் 2020இல் - 10,600, 2021இல் - 10,881, 2022இல் - 11,290 என்று அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கோதுமை, நெல் சாகுபடியில் புதுப்புது சாதனைகளைப் படைத்துக்கொண்டேவருகிறார்கள். மத்திய தொகுப்பில் கொள்முதல் செய்து கையிருப்பில் வைக்கப்படும் உணவு தானியங்களின் அளவு தொடர்ந்து விரிவடைந்துகொண்டுவருவதே இதற்குச் சான்று. இருந்தும் விவசாயிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
  • வேளாண் பொருள்களின் விற்பனை விலை குறையும்போது விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. சந்தையில் விலை அதிகரிக்கும்போது பாஜக அரசு ஏற்றுமதிக்குத் தடை அல்லது கட்டுப்பாடுகளை விதித்துவிடுகிறது. விவசாயிகளின் துயரங்களுக்கு முக்கிய காரணங்கள்: ஒவ்வொரு விவசாயிக்கும் சொந்தமாக இருக்கும் நிலங்களின் அளவு மிகவும் குறைவு, இடுபொருள்கள் செலவு உயர்ந்துகொண்டேவருகிறது. குறைந்தபட்ச கொள்முதல் விலையானது சாகுபடிச் செலவை ஈடுகட்டக்கூட போதவில்லை, அரசின் உணவு தானிய ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையானது விவசாயிகளைவிட - நுகர்வோர்களின் நலனை மனதில் கொண்டே வகுக்கப்படுகிறது.
  • மழை, வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்றைச் சீற்றங்கள், பூச்சிகளால் பாதிப்பு, வளம் குன்றிய நிலத்தால் பயிர்கள் நாசமாவது என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்கதை; மகிழ்ச்சியான விவசாயியின் முகத்தைப் பார்ப்பது என்பது குதிரைக் கொம்புபோல அரிதானது. பயிர் காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்தவர்கள் பயிர் இழப்புக்காக அந்நிறுவனங்களை அணுகும்போது, அதற்குண்டான பணம் மறுக்கப்படுகிறது அல்லது பணமே இல்லை என்று கைவிரிக்கப்படுகிறது.
  • தங்களுடன் ஆலோசனை கலக்காமல் அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நிகழ்த்திய நீண்ட நாள் போராட்டம் அவர்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியது.
  • மோடி குறிப்பிட்ட அந்த நான்கு சாதிகளிலும் பெரும்பாலானவர்கள் ஏழைகளாகவும் மகிழ்ச்சி அற்றவர்களாகவும் அரசின் கொள்கைகளாலும் திட்டங்களாலும் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கின்றனர். பணக்காரர்களுக்குச் சாதகமாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது என்று அவர்களுக்குத் தெரியும். இது ஏனென்றால் அவர்கள் ஏழைகள் என்பதால் ஆட்சியாளர்களைத் தங்கள் பக்கம் திருப்பக்கூடிய செல்வாக்கோ அதிகாரமோ இல்லாதவர்கள், தங்களுடைய எதிர்காலம் குறித்துத் தொடர் அச்சத்திலேயே வாழ்பவர்கள்.

நன்றி: அருஞ்சொல் (26 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories