TNPSC Thervupettagam

நிரந்தரப் பாதுகாப்புக்கு முன்கூட்டித் திட்டமிடுக

May 26 , 2021 1074 days 468 0
  • அரபிக் கடலில் உருவான சமீபத்திய டவ் தே புயலுக்கும், இதுபோன்று அடிக்கடி புயல்கள் உருவாவதற்கும் அரபிக் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பே முக்கியக் காரணம் என்ற வானிலையாளர்களின் எச்சரிக்கை உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
  • டவ் தே புயலானது குஜராத்தில் கரையைக் கடந்தபோது கடுமையான சேதங்களையும் உயிரிழப்புகளையும் விளைவித்தது.
  • கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரத்தில் கடுமையான காற்றுடன் கூடிய கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
  • அதையடுத்த மிகச் சில நாட்களுக்குள்ளாகவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் யாஸ் புயலானது ஒடிஷா மற்றும் வங்க மாநிலங்களையொட்டி பலத்த வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பேரிடர் பாதுகாப்புக்கான திட்டமிடலில், பருவக்காற்றுக் காலத்துக்கு முந்தைய புயல்களுக்கும் இனி நாம் தயாராக வேண்டியிருக்கிறது என்பதே இந்தப் புயல்கள் உணர்த்தும் செய்தி.
  • புயலின்போது கடல் அலைகளின் சீற்றத்தால் கரையோரப் பகுதிகள் கடுமையாகச் சேதமடைகின்றன.
  • கரையோரத்தில் உள்ள மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. மரங்கள் விழுவதால் போக்குவரத்தும் நிறுத்தப் படுகிறது.
  • கனமழையால் அணைக்கட்டுகளின் நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கரையோர மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது.
  • மேற்குக் கடற்கரையின் புயல் பாதிப்புகளில் நிலச்சரிவும் தவிர்க்கவியலாத ஒரு அம்சமாக மாறிவிட்டது. அரபிக் கடலில் ஒவ்வொரு முறை புயல் உருவாகிறபோதும் மும்பைப் பெருநகரம் மறுவுயிர் பெற்று மீள வேண்டியிருக்கிறது.
  • உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஏழாவது நகரமான மும்பை மிகக் குறைவான நேரத்தில் அதிக மழைப்பொழிவுக்கு ஆளாவது ஆண்டுதோறும் வழக்கமாகி விட்டது.
  • வழக்கமாக, குளிர்ச்சித்தன்மையுடன் காணப்படும் அரபிக் கடல் சமீப காலங்களில் கோடைக் காலத்தில் வழக்கத்தைக் காட்டிலும் 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கூடுதலாகக் கொண்டதாக இருக்கிறது.
  • நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கடுமையான புயல் பாதிப்புகள் ஏற்பட்டுவந்தன. தற்போது புவிவெப்பமாதல் காரணமாக புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்துவருகின்றன.
  • ஒப்பீட்டளவில் அரபிக் கடலைவிட வங்கக் கடலிலிருந்தே அடிக்கடியும் தீவிரமானதாகவும் புயல் காற்றுகள் உருவாகின்றன.
  • வங்கக் கடலில் கலக்கும் ஆறுகளின் நீர், கடல் நீரின் மேல்மட்டத்தை வெப்பமாக்கிக் காற்றில் நீராவியைத் தோற்றுவிக்கின்றன. எப்போதும் வெப்பநிலையிலேயே இருக்கும் வங்கக் கடல் எந்தவொரு புயல் உருவாவதற்கும் தயார் நிலையிலேயே இருக்கிறது.
  • அரபிக் கடல் நீரின் வெப்பநிலை இயல்பாகவே குளிர்ச்சியாக இருப்பதால் புயல் வலுவிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தகு நிலவமைப்புச் சூழல், வங்கக் கடற்பகுதிகளில் இல்லை.
  • தற்போது கடல் வெப்பநிலை வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே இருக்கிறது என்று வானிலையாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
  • பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில், பெருந்தொற்றுக்குக் கொடுக்கப்பட்டுவரும் முதன்மைக் கவனத்துடன் எதிர்பாராத புயல் பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மீதான கவனமும் சேர்ந்தே இருக்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories