TNPSC Thervupettagam

நிரந்தரமானவர், அழிவதில்லை

May 19 , 2021 1086 days 537 0
  • நேற்று முன்தினம் (மே 17) மாலை நான்கு மணிக்கு எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் புதல்வர் பிரபி மூலமாக கி.ரா. அனுப்பிய கூரியர் தபால் ஒன்று வந்தது. அதில் கி.ரா. எழுதிய "கோபல்லபுரத்து மக்கள்', "கோபல்ல கிராமம்' ஆகிய இரு புத்தகங்கள் இருந்தன.
  • அந்தப் புத்தகங்கள் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கின்ற தமிழ் இருக்கைக்கு அனுப்ப வேண்டியவை என்று ஏற்கெனவே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சந்தித்தபோது என்னிடம் கி.ரா. சொல்லியிருந்தார்.
  • அதில் "ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு' என்று எழுதி அவர் கையொப்பமும் இட்டிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவரின் கையெழுத்து மிக நேர்தியாக இருந்தது.
  • இதுதான் அவர் இறுதியாக இட்ட கையொப்பமும் எழுத்துமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
  • அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றபோதும், உடல் நலிவுக்கு மத்தியிலும் தான் எடுத்துக் கொண்ட கடமையைச் சீராகச் செய்திருக்கின்றார்.

கரிசல் மண்ணில் சங்கமம்

  • தான் சொன்னதைச் சொன்னபடி செய்துவிட்டுத்தான் அன்று இரவு அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். அவரது மரணம் மனதை மிகவும் வாட்டுகின்றது.
  • நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கி.ரா. மறைந்து விட்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. இரவு முழுவதும் அவருக்கு அரசு மரியாதை செய்யக்கூடிய பணிகளை கவனிக்க வேண்டி இருந்தது.
  • நடிகர் சிவகுமார், அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றவர்களோடு இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
  • கி.ரா. ஒரு விவசாயி, ஒரு பொதுவுடமைவாதி, இலக்கிய கர்த்தா, சாதாரண மக்களுடைய பாடுகளை பேசக்கூடியவர், மனிதநேய மிக்கவர் என்ற பல்வேறு கோணத்தில் அவரைப் பார்க்க வேண்டும்.
  • கி.ரா. இன்னும் ஓராண்டு இருந்திருந்தால் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று பல திட்டங்களை நாங்கள் அமைத்திருந்தோம். எதிர்பார்க்காத வகையில் இந்த செய்தி எட்டியது.
  • கி.ரா. எந்த மண்ணின் பாடுகளை எழுதினாரோ அதே கரிசல் மண்ணில் சங்கமம் ஆகின்றார்.

கி.ரா. ஒரு வரலாறு

  • கி.ரா. இலக்கியத் தளத்தில் ஒரு வரலாறு. தனது இளமைப் பருவத்தில் ரசிகமணி டி.கே.சி., காருகுறிச்சி அருணாசலம், விளாத்திக்குளம் சுவாமிகள், கு. அழகிரிசாமி போன்றோரை நண்பர்களாக மட்டுமல்ல வழிகாட்டிகளாகவும் கொண்டவர்.
  • அவர் குறித்து பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அவருடைய நினைவுகளாக மிதந்து கொண்டிருப்பதில் எதைச் சொல்வது எதைத் தள்ளுவது என்றே தெரியவில்லை.
  • கி.ரா.வின் ஆளுமையும் அவரது அணுகுமுறையும் சற்று மாறுபட்டவை. ரசிகமணி டி.கே.சி.யிடம் இதே பாணி இருந்தது.
  • கள்ளம் கபடமற்ற முகபாவம், வெள்ளந்தியான சிரிப்பு, எதையும் ஒரு ரசனையோடு, ஈடுபாட்டோடு பேசும் விதம் - இவைதான் அவரது அணுகுமுறை.
  • கி.ரா. இடைச்செவலில் வாழ்ந்த காலங்களில் வட்டார வழக்கு அகராதியை கொண்டு வந்த சிறப்புக்குரியவர். ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வட்டார வழக்கு அகராதி தயாரிப்பது என்பது சாதாரண வேலை அல்ல.
  • அந்தத் தயாரிப்பு பணிக்கு தேவையான பேனா மை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கான தாள்கள் வாங்க வேண்டும் என்றாலும் கூட கோவில்பட்டிக்குத் தான் செல்ல வேண்டும்.
  • சின்ன கிராமத்தில் இருந்து கொண்டு கோவில்பட்டி மாரீஸ் போன்ற தோழர்களோடு சேர்ந்து கொண்டு அந்த பணியை செய்து முடித்தார் கி.ரா.
  • கரிசல் காட்டின் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளையும் கொண்டு வந்தார்.
  • இதுவும் தமிழகத்தில் ஒரு முன்முயற்சிதான். இப்படிப்பட்ட ஒரு முயற்சிக்கு, கு. அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் கரிசல் இலக்கியத்தை முன்வைத்து அடித்தளம் அமைத்தார்கள்.

கி.ரா.'வும் கம்யூனிஸ்ட் கட்சியும்

  • குன்று ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்தால் மரமும் செடியும் மண்ணும் சூழ்ந்த மாதிரி இருக்கும். அருகில் சென்று பார்த்தால்தான் அதில் உள்ள பல்வேறு வகையான மூலிகைச் செடிகளும் அபூர்வமான பழங்களும் பூக்களும் நம் கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் கி.ரா.வும்.
  • கி.ராவுடன் எனக்குள்ள தொடர்பு 45 ஆண்டுகளுக்கும் மேலானது. நெருங்கிய தொடர்பு என்று வைத்துக் கொண்டால் எழுபதுகளில் தொடங்கிறது.
  • நான் சென்னையிலிருந்து எனது கிராமத்திற்கு சென்றால், இடைச்செவலுக்குச் சென்று அவரைப் பார்க்காமல் ஒருபோதும் திரும்பியதில்லை.
  • அவரது கையெழுத்து நேர்த்தியாக இருக்கும். அதேபோல் அவரது எழுத்துகளில் கரிசல்காட்டின் பேச்சு வழக்கு இயல்பாக இருக்கும்.
  • "தனித்தமிழ் தேவைதான் என்றாலும், வட்டார மொழி, வட்டார வழக்கு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றையும் நாம் கவனிக்க வேண்டும்' என்று அவர் சொல்வார்.
  • உழைக்கும் மக்களின் பாடுகளைச் சொல்லக்கூடிய பல கட்டுரைகளையும் கி.ரா. எழுதியுள்ளார்.
  • "கரிசல் காட்டுக் கடுதாசி'யை அவர் ஓர் இதழில் தொடராக எழுதியபோது கரிசல்காட்டு வட்டார வழக்கு உலக தமிழ் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.
  • இப்படியான பல்வேறு கோணங்களில் கி.ரா.வைப் பார்க்கவேண்டும். கி.ரா. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஒருமுறை கோவில்பட்டி சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது குமாரசாமி ராஜா சென்னை ராஜதானியின் முதலமைச்சர்.
  • ரசிகமணி டி.கே.சி. முதலமைச்சரிடம் பேசிய பிறகு கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
  • மறைந்த கோவில்பட்டி அழகிரிசாமி, நல்லகண்ணு, படைப்பாளியும் வழக்குரைஞருமான நா. வானமாமலை போன்ற நெல்லை வட்டார கம்யூனிஸ்ட் தோழர்களோடு கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இருந்தவர்.
  • 1970-களில் விவசாயிகளுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைக்கு ஸ்தாபன காங்கிரúஸாடும், நாராயணசாமி நாயுடுவோடும் இணைந்து போராடினார்.

மக்கள் சார்பாக நன்றி

  • வெறும் இலக்கியகர்த்தாவாக மட்டுமல்லாமல் இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காலத்திலும் மக்களின் நலனுக்காகச் செயல்பட்டவர்.
  • அவரது இடைச்செவல் கிராமத்திலிருந்து வெளியூர் செல்ல பேருந்து பிடிக்க வேண்டுமென்றால் கோவில்பட்டி - திருநெல்வேலி பிரதான சாலைக்கு வந்துதான் பேருந்து பிடிக்க வேண்டும்.
  • அப்படிப்பட்ட கிராமத்திலிருந்து தமிழகத்திற்கு இலக்கியகர்த்தா கிடைத்தார் என்றால் அது நமக்குப் பெருமைதான். கேரளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளை போன்று தமிழகத்தில் கி.ரா.வை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். "மக்கள் தமிழ்' என்ற பேச்சுத் தமிழோடு மொழியும் வளர வேண்டும் என்றார்.
  • விளாத்திகுளம் சுவாமிகள் மட்டுமல்ல, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையுடனும் இவருக்குத் தொடர்பு உண்டு. அவரையும் அடிக்கடி சந்திப்பார்.
  • அதேபோன்று திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவும் இவரோடு நெருக்கமான நட்பில் இருந்தார். கி.ரா. இசைப்பிரியர். அது மட்டுமல்ல, உணவுப் பிரியரும் கூட.
  • அவர் நடத்திவந்த "கதை சொல்லி' இதழை நான்தான் எடுத்து நடத்த வேண்டும் என்று சொன்னார்.
  • நண்பர் கழனியூரனும் நானும் சேர்ந்து ஆரம்ப காலங்களில் கதைசொல்லியை நடத்தினோம். அந்த இதழ் தற்போது இலவசமாக காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
  • கி.ரா. மருத்துவமனையில் இருந்தபோது என்னிடம் சொன்னார், ""இந்த "கதை சொல்லி' குறிப்பில் உங்களைப் பற்றி நான் எழுதியுள்ளேன்.
  • இனிமேல் எனக்கு எழுத வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை''. அப்படி அவர் சொன்னபோது எனக்கு வேதனையாக இருந்தது.
  • பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழர்கள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்காக தமிழக தலைவர்கள் அத்தனை பேரும் சென்றிருந்தார்கள்.
  • அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லும்போது என்னை நெகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்.
  • "இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் செல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. இப்போது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி' என்றார்.
  • இப்படி என் பால் அன்பு கொண்ட கி.ரா., என்னை சொந்த மகனைப் போல எண்ணி தனது சொந்த விசயங்கள் அனைத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார். இப்படியாக கி.ரா.வைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
  • அவருடைய படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • எல்லாத் தகுதிகளும் கொண்ட அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை.
  • கி.ரா.வின் 60-ஆவது ஆண்டு மணிவிழாவை மதுரை காலேஜ் ஹவுஸில் நடத்திய கவிஞர் மீரா, வட்டார வழக்கு அகராதியையும் கரிசல்காட்டு எழுத்தாளர்களுடைய தொகுப்பையும் வெளியிட்டார். அவரது எழுபதாவது பிறந்த நாளை சென்னையில் நான் நடத்தினேன்.
  • பின்னர் நான் நடத்திய அவரது 85ஆவது பிறந்தநாள் விழாவில் வைகோ போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
  • அவரது 90-ஆவது பிறந்தநாளை "தினமணி' நாளிதழோடு இணைந்து தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. 95-ஆவது பிறந்தநாள் விழாவை புதுவையில் சிறப்பாக நடத்தினோம்.
  • நூறாவது பிறந்தநாள் விழாவை எழுத்தாளர் நாஞ்சில் நாடன், திரைப்பட நடிகர் சிவகுமார் போன்றோர் நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டிருந்த நிலையில் கி.ரா. நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்.
  • ஆனாலும் அவர் தனது படைப்புகள் மூலம் என்றும் நம்முடன் வாழ்வார்.
  • மறைந்த கி.ரா.வின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரை கௌரவிக்கும் தமிழக அரசுக்கு கரிசல் மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நன்றி: தினமணி  (19 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories