TNPSC Thervupettagam

நீதிமன்றங்கள் அனைத்திலும் ஒலிக்கட்டும் தமிழ்

December 1 , 2021 901 days 525 0
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவருவதாகச் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்திருப்பது, சட்டத் தமிழ் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ் வழியில் கற்கவும் தேர்வுகள் எழுதவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதனால் கீழமை நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவதற்கான சூழலை இன்னும் முழுமையாக உருவாக்கிவிட முடியவில்லை.
  • திமுக தனது சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாகக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கும் என்று தெரிவித்திருந்தது.
  • ஏறக்குறைய 25 ஆண்டுகளாக திமுக அவ்வப்போது இது குறித்துப் பேசிவருகிறது.
  • 2006-ல் தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்திலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது.
  • அத்தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காததைக் காரணம்காட்டி மத்திய அரசு மறுத்து விட்டது என்றபோதும் திமுக அக்கோரிக்கையைத் தொடர்ந்து இன்னமும் வலியுறுத்திவருகிறது.
  • கீழமை நீதிமன்றங்களிலேயே வழக்காடவும் தீர்ப்புரைக்கவும் தமிழ் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு தடையாக உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்திலும் தமிழ் என்பது வெறும் அரசியல் முழக்கமாகவே முடிந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது.
  • தமிழில் வழக்காடுவது என்பது வழக்கறிஞர்களின் விருப்பமாகவும் தமிழில் தீர்ப்புரைப்பது நீதிபதிகளின் தேர்வாகவும் இருக்கலாம்.
  • ஆனால், சட்டத் தமிழில் துல்லியமும் இலகுவான பயன்பாடும் இல்லாமல் அதைக் கட்டாயமாகச் சுமத்த முடியாது.
  • தமிழை வழக்காடும் மொழியாக நடைமுறைப்படுத்திட மாநில அரசும் சட்டத் துறையும் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
  • நீண்ட காலமாகச் செயல்படாதிருந்த சட்டமொழி ஆணையம் மீண்டும் செயல்பட வேண்டும் என்றும் கேரளத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மொழிபெயர்க்கப்படும் சட்டங்களின் எண்ணிக்கை குறைவு என்றும் கடந்த அதிமுக ஆட்சியில், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எஸ்.செம்மலை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
  • அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நான்காவது ஆட்சிமொழி ஆணையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • திமுக தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, நடப்பாண்டு மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இ.பரந்தாமன், சட்டத் தமிழ்ச் சொற்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட சொற்களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், சட்டப் பல்கலைக்கழகத்தின் பாடநூல்களைத் தரம் உயர்த்த வேண்டும் என்றும் சட்டம் தொடர்பான முக்கிய நூல்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மொழிபெயர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
  • சட்டத் தமிழ் ஒரு இயக்கமானால் மட்டுமே நீதிமன்றங்கள் அனைத்திலும் தமிழ் ஒலிக்கின்ற நிலை உருவாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories