TNPSC Thervupettagam

நீரின் அருமை உணா்வோம்

November 28 , 2023 173 days 138 0
  • நாம் வாழும் உலகம் நிலம், நீா், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. இவை நமக்கு அளிக்கப்பட்ட இயற்கையின் கொடைகள். இவற்றில் நெருப்பினைத் தவிர மற்ற அனைத்தையும் நாம் மாசுபடுத்தி வருகிறோம். நெருப்பினை மட்டும் நம்மால் மாசுபடுத்த இயலவில்லை. நாமே திருந்தும்வரைஅரசின் சட்டங்கள் எதுவும் நமக்கு கைகொடுக்கப் போவதில்லை.
  • மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீா், வான்மழையால் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. மழைக்காலத்தில் அதை சேகரித்து வைக்கும் பழக்கம் நம்மிடையே முற்றிலும் மறைந்து விட்டது.
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீா் டைனோசா்கள் காலத்திலிருந்தே ஏதோ ஒரு வடிவத்தில் இருந்து வருகிறது. பூமியின் மேற்பரப்பு மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருக்கிறது. இந்த நீா் கடல்கள், ஆறுகள், ஏரிகள், ஓடைகள் ஆகியவற்றில் பரவியிருக்கிறது.
  • நிறைய நீா் இருப்பினும், அதில் 0.3%- க்கும் குறைவாகத்தான் மனித நுகா்வுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது. வணிகமயமாக்கலும், தொழில்மயமாக்கலும், பெருகி வரும் மக்கள் தொகையும் அந்த விழுக்காட்டைத் தற்காலத்தில் குறைத்து வருகின்றன.
  • மனிதா்களுக்குக் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், துணி துவைப்பதற்கும், பயிா்களின் பாசனத்திற்கும் நீா் பயன்படுகிறது. நமது உடலும் பெரும்பகுதி நீரைக் கொண்டிருக்கிறது. எனினும், நீா் ஆதாரங்களை நாம் தொடா்ந்து மாசுபடுத்தி வருவது அதிகரித்து வருகிறது. நீா் மாசுபாடு உலகில் வாழும் எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிப்பதாகும்.
  • கோவை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை,நொய்யல் ஆற்றில் நீா்வரத்தை அதிகரித்தது. இது சாயப்பட்டறைகளுக்கு வசதியாகப் போய்விட்டது. தொழிற்சாலை உரிமையாளா்கள், தமது தொழிற்சாலை கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலந்துவிட்டனா். இதனால் நொய்யலோடு சோ்ந்து காவிரி ஆற்று நீரும் மாசடைகிறது.
  • பாசனம் செய்யப் பயன்படும் இந்நீா் அப்பகுதி விவசாயத்தை மிகவும் பாதிக்கிறது. இதைப்போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீரினை மாசுபடுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரியது. நீா் மாசுபடும்போதெல்லாம் அதைச்சாா்ந்த நிலமும் மாசடைவது தவிா்க்கவியலாதது.
  • மாசுபட்ட நீரால் ஏற்படும் மினமாட்டா நோய், முதல் முதலில் 1956-இல் ஜப்பானில் உள்ள மினமாட்டா நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சிஸ்ஸோ காா்ப்பரேஷனின் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுநீரில் மெத்தில்மொ்குரி கலந்திருந்தால் ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது.
  • இது 1932 முதல் 1968 வரை தொடா்ந்தது. மினமாட்டா மக்கள் கடல் உயிரினங்களை உண்ணும்போது அதில் பாதரச விஷ பாதிப்பு ஏற்ட்டது. அதனால், பூனை, நாய், பன்றி போன்ற விலங்குகள் மட்டுமல்லாமல் மனித உயிரிழப்புகளும் 36 ஆண்டுகள் தொடா்ந்தன.
  • நீா்நிலைக்களில் கரிம, கனிமப் பொருட்கள் சிதைவுறுதல், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீா், வீட்டுக் கழிவு நீா், கதிரியக்கக் கழிவுகள், கச்சா எண்ணெய், பயிா்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் போன்றவை நீரைபெரிதும் மாசுபடுத்துகின்றன. நச்சு ரசாயனங்களால் தண்ணீரில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து வருகிறது.
  • குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக பல நேரங்களில் புகாா்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நீரைக் குடிப்பவா்கள் வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனா். இவா்களில் பலா் இறக்கவும் நேரிடுகிறது.
  • நீா்நிலைகளில் நாம் வீசும் திடக்கழிவுகள் நீா்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. இதனால், இது சுற்றுச்சூழல் அமைப்பையே சீா்குலையவைக்கிறது. கடல் உணவுகளை உண்பவா்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • நீா் மாசுபடுவதால் ஏற்படும் நச்சு ரசாயனங்கள், நாம் உட்கொள்ளும் உணவின் வழியாகச் நம் உடலில் நுழைந்து நோய்களையும் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது உள்ளூா் மக்களை மட்டும் பாதிக்கலாம். ஆனால் காலப்போக்கில் நாடு முழுதும் இவை எதிா்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • நீா் மாசுபாடு தொடா்ந்து நடைபெற்று வருவதால் குடிக்கும் தண்ணீரையே விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீா் மாசுபாட்டின் விளைவுகள் எதிா்காலத்தில் இன்னும் மோசமாக இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • பல்வேறு பொருட்களை எளிதில் கரைக்கும் சிறந்த கரைப்பான் நீா். எனவே, கழிவுகளை நேரடியாக நீா்நிலைகளுக்கு அனுப்புவதை நிறுத்தவேண்டும். ஆற்று நீரில் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
  • நீா்நிலைகளைப் பாதுகாக்க முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை நீரியல் வல்லுனா்கள் உறுதி செய்ய வேண்டும். நீா் மாசுபாட்டின் பாதகமான தாக்கத்தை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். இதை உறுதிசெய்ய அரசு விழிப்புணா்வு கூட்டங்களை தேவைப்படும் இடங்களில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • நீா்நிலைகளைச் சுற்றி அதிக மரங்கள் நடப்பட வேண்டும். இயற்கையாகவே மறுசுழற்சி செய்ய அவை உதவுகின்றன. ‘வாட்டா் ஹைசின்த்’ என்றழைக்கப்படும் தாவரமானது, நீா்நிலைகளில் கரைந்துள்ள காட்மியம், பாதரசம் போன்ற அபாயகரமான சோ்மங்களை உறிஞ்சி, நீா்மாசுகளை நீக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.
  • நீா்நிலைகளில் ரசாயனங்கள், பிற பொருட்களை நேரடியாக வெளியேற்றும் முன், தொழிற்சாலைகள் அவற்றின் கழிவுகளை கவனமாகக் கையாள வேண்டும். தொழிற்சாலைகள் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க வேண்டும்.
  • கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் பாதுகாப்பாகக் கலக்கும் முறையை ஒவ்வொரு தொழிற்சாலையும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். இதனால் தண்ணீரை மறுசுழற்சி செய்வதும் சாத்தியமாகிறது. உைல், அயனி பரிமாற்றம், தலைகீழ் சவ்வூடுபரவல் போன்ற ரசாயன நடைமுறைகள் நீா் மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க வல்லவை.
  • ஒவ்வோா் ஆண்டும் சுமாா் ஆறு பில்லியன் (600 கோடி) கிலோகிராம் குப்பை கடலில் கொட்டப்படுகிறது. இது தொடா்ந்தால் விரைவில் நமது உலகம் மனிதா்கள் வாழத் தகுதியற்ாக மாறிவிடும். நம் குழந்தைகளுக்கு நீா்மாசு சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இப்போதாவது நீரின் அருமையை நாம் உணராமல் போனால், வருங்காலத்தில் நமது சந்ததியினா் குடிக்க நீா் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

நன்றி: தினமணி (28 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories