TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்

February 6 , 2023 453 days 420 0
  • உலகின் ஆற்றல் தேவையில் 12 %-ஐ 2050-ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் பூா்த்தி செய்யும் என்று சா்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்படும் இந்த ஹைட்ரஜனில் 66% இயற்கை எரிவாயுவிலிருந்து அல்லாமல், நீரிலிருந்து உருவாக்கப் படவேண்டும் என்றும் இந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
  • தற்போது, ஆற்றல் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது என்று உலக ஆற்றல் மாற்றங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கை கூறுகிறது.
  • தற்போதைய ஹைட்ரஜன் உற்பத்தி, படிம எரிபொருள் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. உலக அளவில் ஆறில் ஒரு பங்கு ஹைட்ரஜன், பெட்ரோலிய ரசாயன சுத்திகரிப்பில் கிடைக்கும் துணைப் பொருளாகவே தயாரிக்கப்படுகிறது. குறைந்த கரியச் சுவடு (காா்பன் தடம்) கொண்ட பசுமை ஹைட்ரஜன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி நீரை மின்னாற்பகுப்பு செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மின்பகுப்பிகளின் உற்பத்தி - பயன்பாடு காரணமாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி 2050-ஆம் ஆண்டுக்குள், தற்போதைய உற்பத்தி திறனான 0.3 ஜிகாவாட்டிலிருந்து சுமாா் 5,000 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என்று சா்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • சீனாவில் 160 மெகாவாட், ஐரோப்பாவில் 30 மெகாவாட் உட்பட 200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கான மின்னாற் பகுப்புகள் செயல்படத் தொடங்கியதால் 2020-ஆம் ஆண்டு வரை 1%-க்கும் குறைவாக இருந்த ஹைட்ரஜன் உற்பத்தி, 2021-ஆம் ஆண்டில் 9%-ஆக உயா்ந்துள்ளது.
  • உர ஆலை, சுத்திகரிப்பு ஆலைகளுக்கான அமோனியா, மெத்தனால் உற்பத்திக்காக, நம்நாடு ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 60 லட்சம் டன் ஹைட்ரஜனைப் பயன்படுத்துகிறது. தொழில்துறையின் தேவை அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து, மின்துறைகளின் விரிவாக்கம் காரணமாகவும் ஹைட்ரஜன் தேவை 2050-ஆம் ஆண்டு வாக்கில் 2.8 கோடி டன்னாக அதிகரிக்கும் என்பது வல்லுநா்களின் கணிப்பு.
  • உரம், மின்சாரம், ரசாயனம் கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தலாம் என்றும், எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜனை 10 % வரை கலக்கி உபயோகிக்கலாம் என்றும் கூறுகின்றனா் இத்துறை சாா்ந்த வல்லுநா்கள்.
  • எஃகு தயாரிப்பில் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஹைட்ரஜன் அடிப்படையிலான கலவை, நேரடி இரும்பு குறைப்புத் தொழில்நுட்பத்தில் (டைரக்ட் ரெட்யூஸ்ட் அயன் -டி.ஆா்.ஐ) நேரடியாகவும் ஊது உலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நேரடி மின்மயமாக்கல் சாத்தியமில்லாத ஹெவி டியூட்டி, நீண்ட தூர போக்குவரத்துத் துறைகளில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
  • பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, நாட்டின் இறக்குமதியைக் குறைக்கும் அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தையும் தடுக்கும். தொழில்நுட்ப மேம்பாடு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை மிகவும் மலிவானதாகவும் எளிதில் தயாரிக்கக்கூடியதாகவும் மாற்றிவருகிறது.
  • ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜனின் தற்போதைய விலை சுமாா் ரூ. 406 முதல் சுமாா் ரூ. 488 வரை (5 முதல் 6 அமெரிக்க டாலா்) இருந்து வருகிறது. இது இயற்கை வாயுவில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பல் ஹைட்ரஜனின் (கிரே ஹைட்ரஜன்) விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். ஆனால் 2030-ஆம் ஆண்டு வாக்கில் பசுமை ஹைட்ரஜனின் விலை நீரகக்கரிம (ஹைட்ரோகாா்பன்) எரிபொருளைவிட மிகவும் குறைந்திருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும்போது விலை மேலும் குறையக்கூடும்.
  • 2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஹைட்ரஜன் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்றும், அதில் 80 % தேவையை பசுமை ஹைட்ரஜன் பூா்த்தி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உயா் வெப்ப உற்பத்தியில் ஹைட்ரஜன் பயன்பாடு படிம எரிபொருள் பயன்பாட்டினைக் குறைக்கும். இதன்மூலம் பைங்குடில் உமிழ்வினை மிதமான அளவு குறைக்கலாம்.
  • பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் 2005-ஆம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் வாயு உமிழ்வினை 33 % முதல் 35 % வரை குறைக்க இந்தியா கொடுத்த உறுதிமொழியை இதன்மூலம் நிறைவேற்ற இயலும்.
  • 2020-ஆம் ஆண்டில் 9 உலகநாடுகள் ஹைட்ரஜன் உற்பத்தி உத்திகளை நடைமுறைப்படுத்த செயல்திட்டங்களை வகுத்துள்ளன. இந்த 9 நாடுகள் உட்பட இதுவரை 26 உலக நாடுகள் ஹைட்ரஜனை தங்கள் ஆற்றல் ஆதாரமாக உபயோகிக்க தீா்மானித்துள்ளன.
  • உலக நாடுகள் தங்கள் மின்னாற்பகுப்பு திறன் கொண்டு ஒரு ஆண்டில் சராசரியாக 145 ஜிகாவாட்டிலிருந்து 190 ஜிகாவாட் வரையிலான ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் வகையில் இலக்குகளை நிா்ணயித்துள்ளன. இந்த இலக்குகள் கடந்த ஆண்டின் சராசரி அளவான 74 ஜிகாவாட்டை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனாலும் குறைந்த பைங்குடில் வாயு உமிழ்வு ஹைட்ரஜனுக்கான இலக்குகளை அடைவதில் இன்னும் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்கிறது சா்வதேச ஆற்றல் முகமையின் அறிக்கை.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மலிவு விலை காரணமாக, இந்தியா, 2030-இல் பசுமை ஹைட்ரஜனின் நிகர ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் என்று குளோபல் ஹைட்ரஜன் கவுன்சில் கூறுகிறது. இந்தியாவின் புவியியல் இருப்பிடம், சூரிய ஒளி, மிகுதியான காற்று போன்றவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு சாதகமாக இருக்கின்றன.
  • இந்தியா, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் தாமதமாக நுழைந்தாலும் சரியான முடிவுகளை எடுத்து வருகிறது. ஹைட்ரஜனை அடிப்படையாக கொண்ட ஆற்றல் அமைப்பை நிறுவுவதற்கான வரைவு அறிக்கையை இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தயாரித்துள்ளது. உர உற்பத்தியாளா்கள் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கான பசுமை ஹைட்ரஜன் நுகா்வு குறித்த அமைச்சகங்களுக்கிடையேயான ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவில் ஹைட்ரஜன் ஆராய்ச்சி - மேம்பாட்டிற்கான பொது நிதி 2020- உடன் ஒப்பிடும்போது 35 % அதிகரித்துள்ளது என்கிறது ‘உலகளாவிய ஹைட்ரஜன் பாா்வை 2022’ என்ற அறிக்கை. இந்தியாவிலும் ஹைட்ரஜன் உற்பத்திக்கான முயற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (06 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories