TNPSC Thervupettagam

பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறித்த தலையங்கம்

February 15 , 2022 824 days 423 0
  • அடுத்த நிதியாண்டின் பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறித்து சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. அவை தவறான புரிதலின் அடிப்படையிலானவை.
  • 2022-23-க்கான ரூ.83,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு என்பது, நடப்பு நிதியாண்டின் ரூ.71,269 கோடியைவிட 16.5% அதிகம். நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட ஒதுக்கீடான ரூ.82,920 கோடியைவிட 0.1% அதிகம்.
  • திருத்தப்பட்ட ஒதுக்கீடு கொவைட் 19 தடுப்பூசித் திட்டம் காரணமாக அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டைவிட 16.5% அதிகரித்த ஒதுக்கீட்டைக் குறைகாண வழியில்லை.

பெரிய குறைபாடு

  • கல்விக்கும் சுகாதாரத்துக்கும் எவ்வளவுதான் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் போதாது என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.
  • கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருவதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.
  • 2014-15-இல் ரூ.30,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போது இரட்டிப்பாகி இருக்கிறது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, ஒதுக்கீடு குறைந்துவிடவில்லை என்கிற அளவில் நாம் ஆறுதல் அடையலாம்.
  • 2017-இல் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கையை ஓரளவுக்கு பிரதிபலிக்கிறது 15-ஆவது நிதிக்குழு. அதன்படி, சுகாதாரத்துக்கான அரசின் பங்களிப்பு ஜிடிபியில் 2.5% இருக்க வேண்டும்.
  • அதாவது, மத்திய அரசு 1%-மும், மீதமுள்ள 1.5% மாநிலங்களும் செலவழிக்க வேண்டும் என்கிறது நிதிக்குழு. 2021-22-க்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, சுகாதாரத்துக்கான மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீடு ஜிடிபியில் 2.1%. இதுவே 2019-20-இல் 1.3%-ஆகத்தான் இருந்தது.
  • 2017-18-இல் மத்திய - மாநில அரசுகள் ரூ.2.43 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தன என்றால், 2021-22-இல் அது ரூ.4.72 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.
  • இந்த அதிகரிப்புக்கு கொள்ளை நோய்த்தொற்று முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • தேசிய பொருளாதாரக் கொள்கை அறிவுறுத்துவதுபோல, இதே அளவிலான ஒதுக்கீடுகள் தொடருமானால் சுகாதாரக் கட்டமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும்.
  • மாநிலங்கள் தங்களது சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை குறைந்தது 8%-ஆக அதிகரிக்க தேசிய சுகாதாரக் கொள்கை வலியுறுத்துகிறது. 2018-19 நிதிக்குழு திட்டமதிப்பீட்டின்படி, அது சுமார் 5% அளவில்தான் காணப்படுகிறது.
  • ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே சுகாதாரக் கட்டமைப்பு மேம்பட்டுவிடும் என்கிற கருத்து தவறானது. முறையான திட்டங்களும், இலக்கு நிர்ணயித்து அவை நிறைவேற்றப்படுவதும் அவசியம்.
  • தேசிய சராசரியான 5.18% விட குறைவாகவே செலவிடுகின்றன ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள்.
  • சுகாதாரத்திற்காக தேசிய சராசரியைவிட அதிகமாக செலவழிக்கும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா, மேற்கு வங்கம் மாநிலங்களை விடக் குறைவாக செலவழிக்கும் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது.
  • பெரும்பாலான மத்திய - மாநில திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. அந்தத் திட்டங்களின் கணக்குத் தணிக்கை தனியார் நிறுவனங்களிடம் தரப்படுவதால் அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் கிடைப்பதில்லை. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டாலும்கூட, அவை குறித்த பொறுப்பேற்பு இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறைபாடு.

உறுதிப்படுத்துவதிலும் பலவீனம்

  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு இலக்கு நிர்ணயித்து ஒதுக்கீடு வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்பது 15-ஆவது நிதிக்குழுவின் முக்கியமான பரிந்துரை.
  • அதனடிப்படையில், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை சில ஒதுக்கீடுகளை செய்து வருவது வரவேற்புக்குரியது.
  • 19 மாநிலங்களில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் ரூ.8,453.92 கோடி ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது மத்திய செலவினங்கள் துறை.
  • 15-ஆவது நிதிக்குழுவின் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2021 - 26) ரூ.70,051 கோடி இதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிகப் பெரிய வாய்ப்பாக இந்த ஒதுக்கீடு அமையக்கூடும்.
  • 1992-இல் கொண்டுவரப்பட்ட 73-ஆவது, 74-ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அடிப்படை சுகாதார சேவையின் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • அதன் மூலம் ஒதுக்கப்படும் நிதி முறையாகவும், சேதாரமில்லாமலும் தொடர்புடைய அமைப்புகளுக்கு நேரிடையாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.
  • அதனால், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேசிய திட்டங்களின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார வசதிகளுக்கான நிதியுதவி பெற முடிகிறது.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புறங்களைவிட நன்றாக இயங்குகின்றன என்பது வியப்பளிக்கக்கூடும். ஊரகப் பகுதிகளில் உள்ளதில் ஆறில் ஒரு பங்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் நகர்ப்புறங்களில் இயங்குகின்றன.
  • அதனால் 15-ஆவது நிதிக்குழுவின் சுகாதார ஒதுக்கீடு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
  • இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்புக்கு கூடுதலான அரசு நிதி ஒதுக்கீடு தேவை என்பதில் சந்தேகமில்லை.
  • அதே நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் பலவீனம் காணப்படுகிறது.

நன்றி: தினமணி (15 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories