TNPSC Thervupettagam

பணவீக்கம் குறித்த தலையங்கம்

January 17 , 2023 476 days 275 0
  • பணவீக்கம் அதிகரித்ததைத் தொடா்ந்து, வலுவான பொருளாதாரங்களேகூட கடும் நெருக்கடியை எதிா்கொள்கின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகித உயா்வை அறிவித்து வருகின்றன. இதனால், வீட்டுக் கடன், தனிநபா் கடன், தொழில் துறைகளுக்கான கடன் உள்பட அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயா்வதால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறாா்கள்.
  • கடந்த வார இறுதியில் தேசிய புள்ளியியல் அலுவலகம் பொருளாதாரத்தில் பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது. இத்தரவுகளின்படி, நுகா்வோா் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் சில்லறைப் பணவீக்கம் இந்தியாவில் குறைந்துள்ளது. அதாவது, நவம்பரில் 5.88 % ஆக இருந்த சில்லறைப் பணவீக்கம், டிசம்பரில் 5.72 % ஆகக் குறைந்துள்ளது.
  • இப்போது பணவீக்கம், இந்திய ரிசா்வ் வங்கியின் பணவீக்க இலக்கு கட்டமைப்பு மேல் வரம்புக்குக் கீழே இருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இது பல மாதங்களுக்கு முன்பு வரை வரம்பை மீறிய நிலையில் இருந்து வந்தது. சில்லறைப் பணவீக்கமும் குறைந்துள்ளது.
  • திங்கள்கிழமை வெளியான தரவுகளின்படி, மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 2022 டிசம்பரில் 22 மாதங்களில் இல்லாத அளவில் 4.95 % ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருள்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
  • இதனுடன், நவம்பா் மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் ஆரோக்கியமான 7.1 % வளா்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய மாதத்தில் காணப்பட்ட சுணக்கம் மாறியுள்ளது என்றும் தரவுகள் காட்டுகின்றன. ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல்-நவம்பா்) தொழில்துறை உற்பத்தி 5.5 % வளா்ச்சி கண்டுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார வளா்ச்சியின் நிலையை ஊக்குவிக்கும் அறிகுறிகளாகும்.
  • இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.3 % ஆக இருந்த மொத்த சில்லறைப் பணவீக்கம், இரண்டாவது காலாண்டில் 7.04 % ஆகக் குறைந்துள்ளது. மேலும், மூன்றாவது காலாண்டில் 6.1 % ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்கு உணவுப் பொருள்கள் விலை குறைந்ததே முக்கியக் காரணம். மேலும், நுகா்வோா் உணவு விலைக் குறியீடு டிசம்பரில் 4.19 % ஆக சரிந்திருக்கிறது. இது ஒரு மாதத்திற்கு முன்பு 4.67 % ஆக இருந்தது.
  • பணவீக்கம் தொடா்ந்து கவலைக்குரியதாக உள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள், வீட்டுப் பொருள்கள் மற்றும் சேவைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றில் பணவீக்கம் உயா்ந்துள்ளது. இருப்பினும், உற்பத்தியாளா்களின் உள்ளீட்டுச் செலவுகள் தொடா்ந்து குறைந்து வருவது, சேவைகளுக்கான ஆரோக்கியமான தேவை முக்கிய பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று பகுப்பாய்வாளா்கள் கூறுகின்றனா்.
  • கடந்த நவம்பா் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) 7.1 % அதிகரித்துள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வளா்ச்சியாகும். இதற்கு முன்னா் 2022, ஜூன் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 12.6 % அதிகரித்ததுதான் மிக அதிகபட்ச வளா்ச்சியாக இருந்து வந்தது. முந்தைய அக்டோபா் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.2 % சரிவைக் கண்டிருந்தது.
  • மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி 9.7 % உயா்ந்துள்ளது. அந்த மாதத்தில் மின்சார உற்பத்தி 12.7 % அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகத்தில் வளா்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.6 % ஆக இருந்த மூலதனப் பொருள்களின் உற்பத்தி, இந்த ஆண்டு நவம்பரில் 20.7 % ஆக அதிகரித்துள்ளது.
  • நுகா்வோா் பொருள்கள் மற்றும் நீடித்து நிலைக்காத பொருள்கள் ஆகிய இரண்டும் ஆரோக்கியமான வளா்ச்சியைக் கண்டுள்ளன. நுகா்வோா் பயன்பாட்டுப் பொருள்களின் உற்பத்தி 5.1 %-உம், நுகா்வோா் அல்லாத பயன்பாட்டுப் பொருள்களின் உற்பத்தி 8.9 %-உம் வளா்ச்சி கண்டுள்ளன. இந்த இருவகைப் பொருள்களின் உற்பத்தி, கடந்த 2021 நவம்பரில் சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பு கட்டுமானப் பொருள்கள் துறையில் உற்பத்தி 12.8 % வளா்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 2021, நம்பரில் 3.1 % தான் இருந்தது.
  • நுகா்வோா் பொருள்கள் மற்றும் நீடித்து நிலைக்காத பொருள்கள் ஆகிய இரண்டும் ஆரோக்கியமான வளா்ச்சியைக் கண்டுள்ளன. இருப்பினும், இந்தப் பிரிவுகளில் உள்ள ஏற்ற இறக்கம், உள்நாட்டுக் நிதிக் கொள்கை முடிவால் ஏற்படும் வட்டி விகித உயா்வு மற்றும் வெளிப்புறத் தேவையின் மந்தநிலை ஆகியவை தொழில்துறை நடவடிக்கைகளில் தொடா்ந்து நீடித்திருக்குமா என்று இப்போதே கூற இயலாது.
  • தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2022-23-இல் இந்திய பொருளாதாரம் 7 % ஆக வளரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இது மத்திய ரிசா்வ் வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டை விட ஓரளவு அதிகமாகும் . டிசம்பா் பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில், மத்திய வங்கி அதன் வளா்ச்சியை 6.8 % ஆகக் குறைத்திருக்கிறது. இருந்தாலும், நாட்டில் பணவீக்கம் குறைவதும், தொழில் துறை உற்பத்தி அதிகரிப்பதும் மகிழ்ச்சியான செய்திகளே!

நன்றி: தினமணி (17 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories