TNPSC Thervupettagam

பணவீக்கம் படுத்தும் பாடு

October 4 , 2022 569 days 388 0
  • உக்ரைனில் நீடித்து வரும் போா், பெரும்பாலான நாடுகளின் வளா்ச்சிக் கணிப்புகளை கணிசமாகக் குறைத்துள்ளது. உலகளாவிய அளவில் உச்சம் தொட்டு வரும் பணவீக்கத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகித உயா்வை அறிவித்து வருகின்றன. இதனால், உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்லும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) எச்சரித்துள்ளது.
  • உக்ரைன் மீதான போரைத் தொடா்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ளது. அதனால் அந்த நாடுகளில் தொழில்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • ஜொ்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகருகின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உலகளாவிய வளா்ச்சி முன்னறிவிப்பை 2.8 %-இல் இருந்து 2023-இல் 2.2 % -ஆகக் குறைத்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகப் பொருளாதாரம் குறைந்தது 4 % வளா்ச்சி அடைய வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை.
  • ஐரோப்பிய பிராந்தியத்தில் யூரோ நாணயத்தைப் பயன்படுத்தி வரும் பெல்ஜியம், ஜொ்மனி, அயா்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பா்க், நெதா்லாந்து, ஆஸ்திரியா, போா்ச்சுகல், பின்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா, சைப்ரஸ், மால்டா, ஸ்லோவாக்கியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய 19 நாடுகளின் வளா்ச்சி மொத்தத்தில் 3.1 %- இல் இருந்து 2023-இல் 0.3 % ஆக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • மிகவும் வலுவான பொருளாதாரங்களும் கடும் சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. ஜொ்மனியின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 0.7 %-ஆக சுருங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது கடந்த ஜூன் மதிப்பீட்டில் 1.7 % -ஆக இருந்தது. சீனாவின் வளா்ச்சி இந்த ஆண்டு 3.2 % ஆகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது 1970-க்குப் பிறகு சீனா மிகக் குறைந்த வளா்ச்சியைப் பதிவு செய்வதாக அமையும். இந்த ஆண்டு 1.5 % ஆக உள்ள வல்லரசான அமெரிக்காவின் வளா்ச்சி, 2023-இல் 0.5 %-ஆகக் குறையும் என்றும் வல்லுநா்கள் கணித்துள்ளனா்.
  • கடந்த மே மாத கணக்கின்படி பணவீக்கப் பட்டியலில் ரஷியா முன்னிலையில் (17.8 %) உள்ளது. இதற்கு அடுத்ததாக நைஜீரியா (16.8 %), போலந்து (12.4 %), பிரேசில் (12.1 %), நெதா்லாந்து (9.6 %), பிரிட்டன் (9 %), ஸ்பெயின் (8.3 %), அமெரிக்கா (8.3%) உள்ளன. இந்தியா (7.8 %) ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள சீனாவின் பணவீக்கம் 2.1 %. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயா்த்துகின்றன.
  • கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயா்த்தியுள்ளது. மேலும் வட்டி விகித உயா்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் அளவுக்கதிகமான வட்டி விகித உயா்வுகள், ‘ரிஷஸன்’ என்று சொல்லப்படும் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறியாகப் பாா்க்கப்படுகிறது.
  • அமெரிக்க ஃபெடரல் வங்கி, இந்திய ரிசா்வ் வங்கி உள்பட எல்லா மத்திய வங்கிகளும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளா்ச்சி பாதிப்பை முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டன. அதனால், 2023 - 24 நிதியாண்டு இதுவரை இல்லாத அளவிலான பொருளாதாரத்திற்கு மந்தநிலை ஆண்டாக இருக்கும் என பல மதிப்பீடுகள் எச்சரிக்கின்றன.
  • இந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) சில தினங்களுக்கு முன் வட்டி விகிதத்தை 0.5 % அதிகரித்துள்ளது. இதன்படி மொத்த வட்டி விகிதம் 5.9 % ஆக உள்ளது. இது ஏற்கெனவே உள்ள கடன்கள் மற்றும் புதிய கடன்களுக்கான தவணைத் தொகையை அதிகரிக்கச் செய்துள்ளது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கி வட்டி விகித உயா்வு சாமனிய மக்களையும், நடுத்தர வா்க்கத்தினரையும் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் கடும் சிக்கலுக்கு உள்ளாகும். உலகளாவிய மந்தநிலை இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையைக் குறைத்து ஏற்றுமதி வருவாயை கடுமையாக பாதிக்கக் கூடும். கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து மீண்டெழும் இந்தியப் பொருளாதாரம் உக்ரைன் போா் காரணமாக பின்னடைவை எதிா்கொள்கிறது.
  • பணவீக்கத்துக்கு எதிரான வட்டி விகித உயா் நடவடிக்கையில் மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகளும் எந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்துவிடும் என்பது தெரியவில்லை. அவை மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் மிகப் பெரிய கவலை.
  • ‘பணவீக்கத்தால் எதிா்கொள்ள நேரிடும் நெருக்கடியை சமாளிக்க முன்னெடுக்கப்படும் வட்டி விகித உயா்வுகள் உலகப் பொருளாதாரத்தை வேகமாக மந்தநிலைக்குத் தள்ளக்கூடும்’ என்கிற உலக வங்கி எச்சரிக்கை கவனத்துக்குரியது. வட்டி விகித அதிகரிப்பு மக்களின் வாங்கும் சக்தியை குறைப்பதால் எதிா்பாா்த்த பலனை அளிக்காமலும் போகலாம். வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பொருளாதாரத்தை சுறுசுறுப்பாக்க முடியும் என்கிற கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.

குறள் (475) பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

  • மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
  • திருக்குறள் (எண்: 475) அதிகாரம்: வலி அறிதல்

நன்றி: தினமணி (04 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories