TNPSC Thervupettagam

பதற்றம் வேண்டாம்

December 28 , 2023 143 days 138 0
  • உலக சுகாதார நிறுவனம் கொவைட் -19 கொள்ளை நோய்க்கான சுகாதார அவசர நிலையை திரும்பப் பெற்று 7 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும்கூட, அந்தத் தீநுண்மி முற்றிலுமாக உலகிலிருந்து விடைபெற்றுச் செல்வதாக இல்லை. அதன் அச்சுறுத்தல் புதிய பல உருமாற்றங்களுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதன் அறிகுறிதான், பரவிக் கொண்டிருக்கும் ஜெ.என்.1 வகை பாதிப்பு.
  • ஆகஸ்ட் மாத இறுதியில் லக்ஸம்பர்க்கில் ஜெ.என்.1 உருமாற்றம் முதலில் அடையாளம் காணப்பட்டது. அடுத்த சில மாதங்களில் வேறு பல நாடுகளிலும் இந்த உருமாற்றத்தால் பாதிப்பு தெரியத் தொடங்கியது. விரைவிலேயே சர்வதேச அளவில் அதிக அளவில் இந்த உருமாற்றம் பரவக்கூடும் என்று மருத்துவத் துறையினர் கருதுகின்றனர்.
  • "சார்ஸ் கோவிட் வைரஸ்' எனப்படும் கரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக்கூடியது. அதில் ஆல்ஃபா வகை கரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. ஆனால் ஒமைக்காரானைப் பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் தீநுண்மியின் வெளிப்புற புரதத்தில் (ஸ்பைக் புரோட்டீன்) நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ஒமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலர் வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்திருப்பது இந்த ஜெ.என்.1 நுண்மி.
  • கொவைட் -19 தீநுண்மியின் ஜெ.என்.1 உருமாற்றம் வழக்கமான சோதனையின்போது முதலில் கேரளத்தில் தென்பட்டது. அதைத் தொடர்ந்து கோவாவில் 34-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மகாராஷ்டிரத்தில் 9 பேருக்கும், கர்நாடகத்தில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. தமிழகத்திலும் 4 பேருக்கு அந்தத் தொற்று இருப்பதாகத் தெரிந்தது. இப்போது, தேசிய அளவில் ஏறத்தாழ 4,170 பேர் ஜெ.என்.1 நோய்த் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலும் 139 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • ஜெ.என்.1 உருமாற்றத்தின் மூலம் கொவைட்-19 தீநுண்மி பல புதிய அவதாரங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் கூடுதல் கண்காணிப்பும், உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருப்பதுபோல, பதற்றப்படத் தேவையில்லை என்றாலும்கூட, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்துவதில் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.
  • குளிர்காலத்தில் நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பது வழக்கம். ஃபுளூ காய்ச்சல், நிமோனியா போன்றவற்றுடன் கொவைட்-19 தீநுண்மியின் ஜெ.என்.1 உள்ளிட்ட உருமாற்றங்கள் அதிவிரைவாகப் பரவக்கூடிய பருவம் இது என்பதை நாம் உணர வேண்டும். குறிப்பாக, இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த உருமாற்றம் வெகுவேகமாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • பொதுமக்கள் அதிகமாகக் கூடும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பலர் கூடும் இடங்களில் முகக் கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கேரளத்தில் முதலாவது ஜெஎன்.1 உருமாற்றப் பாதிப்பு தெரிய வந்தது முதலே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு  மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை அனுப்பிவிட்டது.
  • 2022-ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்டதைவிட இப்போது உலகளாவிய நிலையில் பாதிப்பு அதிகம் என்றாலும் நாம் அச்சப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. குறைந்த அளவிலான உயிரிழப்புகளும், கடுமையான நோய் பாதிப்பும் இந்தப் புதிய உருமாற்றத்தில் இல்லை என்பதுதான் அதற்கு காரணம். 2020-இல் சர்வதேச அளவில் மின்னல் வேகத்தில் பரவிய தீநுண்மி, ஒட்டுமொத்த பூமிப்பந்தையே நிலைகுலைய வைத்தது போன்ற சூழலை இந்த உருமாற்றங்கள் ஏற்படுத்திவிடாது என்று வல்லுநர்கள் உறுதி கூறுகிறார்கள்.
  • அதே நேரத்தில் முதியோர், நுரையீரல் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும், சாதாரண நிலையிலும்கூட முகக் கவசம் அணிவதில் தவறில்லை என்றும் தெரிவிக்கின்றனர். நோய்த்தொற்றின் அறிகுறி தெரிவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பே தீநுண்மியின் தாக்கம் ஏற்பட்டுவிடும் என்றும், அதன் பரவும் தன்மை காணப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
  • அதிக அளவில் சோதனையை முடுக்கிவிட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநிலங்களில் கூடுதல் பாதிப்புகள் தெரியக்கூடும். அதனால் அதிக அளவில் பாதிப்புகள் காணப்படுவது அந்த மாநில சுகாதாரத் துறையின் குறைபாடு என்று சொல்லிவிட முடியாது. அதற்கு பயந்து சோதனைகளைக் குறைப்பதும், நோய்த்தொற்றைக் குறைத்து காட்டுவதும் பாதிப்பை பரவலாக்கும் தவறான அணுகுமுறையாக இருக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் அலையின்போது பரவிய தொற்றுக்கு எதிர்ப்பாற்றலை உருவாக்கப் போடப்பட்ட தடுப்பூசி, ஜெ.என்.1 வகைக்கு பலன் அளிக்காது. ஆனால் ஏற்கெனவே இரு தவணையும், பூஸ்டர் தவணையும் செலுத்திக் கொண்டவர்களை ஜெ.என்.1 வகைத் தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது.
  • அச்சப்படத் தேவையில்லை; கவனமாக இருத்தல் அவசியம்!

நன்றி: தினமணி (28 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories