TNPSC Thervupettagam

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு: தரவுகள் வழியே உறுதிப்படுத்துக

February 10 , 2022 815 days 369 0
  • அரசுப் பணிகளில் பதவி உயர்வில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, கவனத்துக்குரியது.
  • இடஒதுக்கீடு தொடர்பில் மிகவும் பிரபலமான இந்திரா சஹானி வழக்கில் (1992) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பணிநியமனத்தில் மட்டுமே இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டது, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையெனும்பட்சத்தில் அவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, கூறு 16(4-ஏ) சேர்க்கப்பட்டது.
  • எம்.நாகராஜ் வழக்கில் (2006), அரசமைப்பின் இந்தப் புதியக் கூறினைச் செல்லும் என்று ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை மெய்ப்பிப்பதற்கான தரவுகளைச் சேகரித்து அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைச் செயற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
  • மத்திய, மாநில அரசுகள் பதவி உயர்வு அளிப்பதற்குப் பின்பற்றும் பணி மூப்புப் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • இந்த வழக்குகளைத் தொடர்புடைய வழக்குகளாக வகைப்படுத்தி ஒன்றாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 28 அன்று இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
  • எம்.நாகராஜ் வழக்கில் ஏற்கெனவே அளித்த தீர்ப்பின்படி, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் விருப்பதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பிலும் ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்த ஒரு கூறினை மட்டும் எடுத்துக்கொண்டு, மாநில அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாகப் பொருள்விளக்கம் கொள்ளப்படுகிறது.
  • அந்த அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் எனில், குறிப்பிட்ட பிரிவினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதைத் தெளிவான தரவுகளோடு எடுத்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்து கனத்த மௌனமே நிலவுகிறது.
  • தேர்வாணையத்தின் வழி பணிநியமனம் செய்யப்பட்டுத் தற்போது பணியாற்றிவரும் அரசு ஊழியர்களிடையே பதவி உயர்வுக்கான பணிமூப்புப் பட்டியல் குறித்து அதிருப்தி நிலவுகிறது.
  • போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பணிமூப்புப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்ற பொதுக்கருத்து நிலவுகிறது.
  • இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு என இரண்டு முறைகளையும் உள்ளடக்கிய பணிமூப்புப் பட்டியலைப் பின்பற்றுவதால் பொதுப் பிரிவில் பணிநியமனமாகும் பிற்பட்ட இனத்தவர்களும் பட்டியல் சாதியினரும் பதவி உயர்வில் பாதிக்கப்படுவதாக உணர்கின்றனர்.
  • மேலும், தரவுகள் சேகரிக்கப்பட்டால் தங்களுக்கு அரசுப் பணிகளில் இன்னும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது உறுதியாகும் என்றும் பட்டியல் சாதியினர் கருதுகின்றனர்.
  • பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் அதிகாரம் தரவுகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும், அதற்கான ஆயத்தங்களையும் அரசு விரைவுபடுத்த வேண்டும்.
  • நன்றி: தி இந்து (10 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories