TNPSC Thervupettagam

பறக்கும் உணவு மழைக்கால ஈசல்கள்

November 25 , 2023 175 days 148 0
  • ஈசல்கள் எனப்படும் அழகிய பூச்சிகள், மழைக்காலத்தில் புற்றிலிருந்து வெளியில் வந்து கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருப்போம். அதிக வெயிலோ காற்றோ இல்லாத ரம்மியமான வானிலையில்தான் ஈசல்கள் புற்றுகளிலிருந்து வெளியேறுகின்றன. ஈசல்கள் வானிலையை நன்கு கணிக்கும் திறன் பெற்றவை. அவற்றின் மெல்லிய ஈரிணைச் சிறகுகளால் பெருங்காற்றையோ மழையையோ எதிர்த்துப் பறக்க இயலாது. எனவே, அதற்கேற்ற சூழலை அறிந்தே ஈசல்கள் நிலத்திலிருந்து வெளியேறுகின்றன. அவற்றால் ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பத்தடிக்குமேல் பறக்க இயலாது. வெளிவந்த சில மணி நேரத்துக்குள் அவற்றின் சிறகுகள் பெரும்பாலும் உதிர்ந்து விழுந்துவிடுகின்றன; உதிர்ந்ததும் நிலத்தில் புழுக்களாக ஊர்ந்து அலைகின்றன. ஈசல்கள்சிறகு முளைக்கும் முன்புவரை கறையான்களாக ஊர்ந்து கொண்டிருப்பவை.

உடனடி இரை

  • இவை நிலத்தின் மேற்பகுதியில் பறக்கும் மிகக்குறைந்த நேரத்திலும் பறவைகளாலும் ஊர்வனவற்றாலும் பெருமளவில் பிடித்து உண்ணப் படுகின்றன. மழைக்காலத்தில் நீர்நிலைகளில் வாழும் பூச்சிகளையும் மீன்களையும் உண்டுக் களிக்கக் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்லும் கொக்குகள் போன்ற மீன்பிடிப் பறவைகளும் ஈசல்கள் பறப்பதைக் கவனித்துவிட்டால் ஏரி, குளங்களைப் புறக்கணித்துவிட்டு ஈசல்களைப் பிடிக்க தரையிறங்கிவிடுகின்றன. கொழுப்பும் புரதமும் நிரம்பிய, சுவையான, எளிதில் பிடிபடக்கூடியவையாக ஈசல்கள் இருப்பதே இதற்கான முதன்மை காரணம்.
  • கோழி, மைனா, காகம், கொக்கு, மீன்கொத்தி, குயில், செம்போத்து, சிட்டில், காடை, மயில், குயில், பூணில், அணில், ஓணான், எறும்பு என ஊர்வனவும் பறப்பனவும் ஒரே இடத்தில் ஈசல்களைப் பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவது மழைக்காலத்தில் நிகழும் அழகிய இயற்கைக் காட்சியாகும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தோட்டங்களிலும் காடுகளிலும் இதைப் பார்க்கலாம். இவற்றுள் தரைப்பகுதியில் வந்து உணவு தேட விரும்பாத குயிலினங்கள், மீன்கொத்திப் பறவைகள் இரட்டைவால் குருவிகள் போன்றனவும் தங்கள் இயல்பினை மறந்து ஈசல்களைப் பிடிக்க விரும்பி தரைப்பகுதியில் நடமாடுவது அரிய காட்சி.

ஈசலின் ஆயுள்

  • ஒரு புற்றிலிருந்து ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கில் வெளியேறும் ஈசல்கள் மற்ற உயிரினங்களால் பெருமளவில் அழிந்துபோனாலும் குறிப்பிட்ட அளவு ஈசல்கள் தப்பிப் பிழைக்கின்றன. ஈசல்கள் பிறந்து வளர்ந்த புற்றிலிருந்து வெளியேறி பிற இடங்களில் புதியப் புற்றுகளை உருவாக்கவே, பழைய புற்றிலுள்ள கறையான்களால் வெளியேற்றப் படுகின்றன. பறந்து அலையும் ஈசல்களைக் கவனிக்கும் அளவுக்கு இறகுகள் விழுந்த பின் நிலத்தில்ஊர்ந்துசெல்லும் ஈசல்களை நாம் கண்டுகொள்வ தில்லை; இறகுகள் விழுந்ததும் அவை சற்று நேரத்தில் மிதியுண்டோ தாமாகவோ இறந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவை தங்கள் இணையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் பூமிக்குள் நுழைந்து, ஒன்று சேர்ந்து புதியப் புற்றினை ஏற்படுத்துகின்றன. இவற்றின் வாழ்க்கை முறை நம்மை வியப்பில் ஆழ்த்தும் சிறப்பியல்புடையவை.
  • ஒரே நாளில் இறக்கை முளைத்து வெளியேறும் கறையான்கள் அன்றே இறந்துபோவதில்லை. அவை பல ஆண்டுகள் உயிர்வாழும் திறன் பெற்றவை. ஈசல்கள், கறையான்களின் உள் வரிசையைச் சேர்ந்தவை. இவற்றில் ராணிக் கறையான்கள்தாம் முட்டையிடும் தகுதிப் பெற்றிருக்கின்றன. ஆண் கறையான்கள் இதனுடன் இணைசேர்ந்து ஆயிரக்கணக்கான முட்டைகளை இடச்செய்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை வேலைக்காரக் கறையான்களாகவே பொரிக்கின்றன. இவை புற்றுகளைக் கட்டுவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் தம் வாழ்நாளைச் செலவிடு கின்றன. வேலைக்காரக் கறையான்களின் வாழ்நாள் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள். ராணிக் கறையான்கள் பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழ்ந்து புதிய கறையான் குடியிருப்புகளை உற்பத்திச் செய்துகொண்டே இருக்கின்றன.

மழைக்கால ஈசல்

  • உலகெங்கும் உள்ள இந்த ஈசல்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில் புற்றிலிருந்து வெளிவரும். இவை ஈசல்களாகி ஏப்ரல்-மேமாதங்களில், அதாவது நான்கைந்து மாதங்களுக்கு முன்பே முட்டைகளிலிருந்து பொரித்து கறையான்களாகின்றன. பிறகு, நிலப்பரப்பிலிருந்து வெளியேறும் பருவம்தான், அவற்றின் இனப்பெருக் கத்துக்குத் தயாரான முழு ஈசல் பருவம். அந்நிலையில் அப்புற்றிலுள்ள கறையான்களால் சிறகுகளையுடைய ஈசல்களாக வெளியேற்றப் படுகின்றன.
  • இவை இரவில் நிலவொளியிலும் பகற்பொழுதில் அதிகாலையிலும் புற்றிலிருந்து வெளியேற ஏற்ற வேளைகளாகத் தேர்வுசெய்கின்றன. அதிக வெயிலையும் இவற்றின் உடலால் தாங்க இயலாது. எனவே, பெரும்பாலும் இரவில்தான் புற்றுகளிலிருந்து அதிக அளவு ஈசல்கள் வெளியேறுகின்றன. இதனால் அவை பெருமளவில் அவற்றைப் பிடித்துண்ணும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்க முடிகிறது. ஆனாலும் இரவாடிகளான தவளைகள், பாம்புகள், பல்லிகள் போன்றவை இவற்றை விட்டுவைப்பதில்லை. மனிதர்களும் ஈசல்களின்மீது கொண்ட வேட்கையால் அவற்றின் புற்றுகள் உள்ள இடத்தைக் கண்டறிந்து வேட்டையாடுகின்றனர்.

ஈசல் பிடிக்கும் முறைகள்

  • வேலைக்காரக் கறையான்கள், ஈசல்களை வெளியேற்ற வசதியாகப் புற்றுகளின் வாய் பகுதியில் ஒரு சில அங்குலமளவு உயரமான மண் முகட்டை அமைத்திருக்கும். இது வரப்பு கட்டுதல் எனப்படுகிறது. ஈசல் வேட்டையில் வல்லுநர்களாக இருப்போர் இந்த வரப்பு கட்டுதலை எளிதில் இனங்கண்டு அதனருகில் ஒளிவிளக்கொன்றை வைத்து மண் கலசத்தை அந்த வரப்பின் மீது கவிழ்த்துவிடுவர். வெளியிலிருந்து கலசத்தினுள் வெளிச்சம் புகுமளவு சிறு துவாரமும் அதில் இடப்பட்டிருக்கும். கலசத்தினுள் தெரியும் வெளிச்சத்துக்காக வெளியேறும் ஈசல்கள் வெளியில் செல்ல இயலாமல் அதன் உள்ளேயே விழுந்துவிடுகின்றன.
  • மற்றொரு முறையாக, வரப்பு கட்டிய இடத்துக்கு அருகில் விளக்கை வைத்துவிட்டு அதனருகில் சிறிய பள்ளம் ஒன்றைத் தோண்டி வைத்திருப்பர். ஒளியால் கவரப்படும் ஈசல்கள் விளக்கு அருகில் பறக்கும்போது லாவகமாகத் தோண்டப்பட்ட குழிகளுக்குள் விழுந்து மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகின்றன. இதனால் ஈசல்களின் இனவிருத்தி தடைபடும். இது அப்புற்றிலுள்ள ஈசல்களை முற்றிலும் அழிக்கும் செயல். மனிதர்களைத் தவிர பிற உயிரினங்கள்தாம் மிகச் சரியாக இயற்கைச் சமநிலையைக் கட்டுப்படுத்தும் இயல்பினைப் பெற்றிருக்கின்றன. சுற்றுச்சூழல் சமநிலைக்கு உயிரினங்கள் பிறப்பதும் அவை இறப்பதும் ஏற்றுக்கொண்டாக வேண்டியது அவசியமே. இயற்கையின் இத்தகைய அழகிய ரகசியங்களை உற்றுநோக்கி, பிற உயிரினங்களின் சிறந்த வாழ்க்கை முறைகளை அறிய முற்படுதல் அவசியமானதாகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories