TNPSC Thervupettagam

பள்ளி மறுதிறப்பு

August 20 , 2021 988 days 505 0
  • தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
  • கடந்த ஒரு வார காலமாகத் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுவருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியிலோ செப்டம்பர் ஆரம்பத்திலோ கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பாதிப்புக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆளாகக் கூடும் என்ற அச்சம் பெற்றோர்களைப் பீடித்துள்ளது.
  • 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரையில் மிகச் சில தடுப்பூசிகளில் மட்டுமே பரந்த அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
  • நாட்டின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசிப் பரிசோதனைகளை நடத்துவதற்குத் தன்னார்வலர்களை நியமித்துள்ளது.
  • எனினும், அதன் உடனடிப் பயன்களை அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்ப்பதற்கில்லை.
  • குழந்தைகளின் உடல்நலத்தைக் குறித்துக் கவலைகொள்ளும் அதே வேளையில், கரோனா காலத்தில் அவர்களின் மனநலம் குறித்தும் தீவிர அக்கறை காட்ட வேண்டியுள்ளது.
  • ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பள்ளிக் குழந்தைகள் அவர்களது வழக்கமான உற்சாகத்தை இழந்துள்ளனர்.
  • குழந்தைகளிடமிருந்து வெளிப்படும் அதிகப்படியான கோபம், அளவுக்கு அதிகமான வருத்தம் ஆகியவற்றுக்கு உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
  • பாடங்கள் தடைபடக் கூடாது என்பதற்காக இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று படிப்பதற்கு அவை ஒருபோதும் சரியான மாற்று ஆகாது.
  • வீட்டிலேயே வகுப்பறைச் சூழலை உருவாக்குவது தொடர்பில் மும்பையைச் சேர்ந்த கல்வியாளர்களும் மனநல மருத்துவர்களும் இணைந்து மேற்கொண்ட சில பரிசோதனை முயற்சிகளும்கூட வெற்றிகரமாய் அமையவில்லை.
  • பள்ளிகளைத் திறப்பதுதான் குழந்தைகளின் மனநலனை மீட்பதற்கான ஒரே வழி என்று அனைத்துத் தரப்பிலிருந்துமே பேச ஆரம்பித்துவிட்டனர்.
  • தமிழ்நாட்டில் செப்டம்பர் தொடக்கத்திலிருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தொற்று இல்லாத பகுதிகளில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பள்ளிகளைத் திறக்கலாம்.
  • ஆனால், பள்ளிகள் திறக்கப்படும் காலத்தில்தான் மூன்றாவது அலையும் எதிர்பார்க்கப் படுகிறது என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாற்றுத் திட்டங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். தொற்றுள்ள பகுதிகளில் பள்ளிகளைத் தற்காலிகமாக மூடிவைக்கவும் வேண்டும்.
  • அடுத்த கட்டமாக, 6 முதல் 8 வரையிலான வகுப்புக் குழந்தைகளை வாரத்துக்கு ஒரு முறையாவது பள்ளிக்கு அழைத்து, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வகுப்புகளை நடத்துவது பற்றியும் யோசிக்கலாம்.
  • ஒரு மணி நேரம் பாடங்களுக்கும், ஒரு மணி நேரம் விளையாட்டுக்கானதாகவும் இருக்கலாம்.
  • குழந்தைகளின் உடல்நலம், மனநலம் இரண்டுமே முக்கியம். பள்ளிக் கல்வித் துறையால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் இவை இரண்டையுமே உள்ளடக்கியதாக இருக்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories