TNPSC Thervupettagam

பழங்குடியினருக்கு சான்றிதழ் மறுக்கப்படும் அவலம்

June 21 , 2021 1062 days 664 0
  • மனித உரிமைகள், வாழ்வுரிமை, வாழ்வாதாரம் இவை பற்றியெல்லாம் வானளாவ விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
  • ஆனால், அரசியல் சட்டம் வழங்கியிருக்கக் கூடிய உரிமைகளைக்கூட பெற முடியாத அவல நிலையில் இருக்கிறார்கள் தமிழக பழங்குடியின மக்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
  • குறிப்பாக, பள்ளி இறுதி ஆண்டு முடித்து உயா்கல்வியில் சோ்வதற்கோ அரசுத்துறை தோ்வுகள் எழுதுவதற்கோ சாதிச்சான்றிதழ் பெறமுடியாத துயரம் தொடா்கதையாகத் தொடா்கிறது.
  • இத்தகைய பல்வேறு பிரச்னைகள் மாநிலம் முழுவதுமே இருக்கின்றன என்றாலும் பழங்குடியின மக்கள் வசிக்கிற ஒரு கிராமத்தின் நிலைமை மிகவும் மோசம்.

நீண்ட போராட்டம்

  • திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் தனி ஊராட்சியாக உள்ள கிராமம் பழைய வத்தலக்குண்டு.
  • மக்கள்தொகை 7,000. அதில் 1,500 போ் ‘மலைவேடன்’ என்கிற பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள்.
  • இவா்களில் பெரும்பான்மையானவா்கள், சொந்த நிலம் இல்லாத நிலையில் கூலி வேலை செய்துதான் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
  • மலைவேடன் சமூகத்தில் சுமார் 120 இளைஞா்கள் படித்து பி.இ., பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., போன்ற பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள்.
  • இக்கிராமத்தின் இந்தப் பழங்குடியினத்தவா்களுக்கு 1984 வரையில் சாதிச்சான்றிதழ் வழங்கப் பட்டு வந்தது. அந்த ஆண்டு மதுரை மாவட்டத்திலிலிருந்து பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் உருவானது.
  • புதிய மாவட்டத்தில் 1992 வரையில் சம்பந்தப்பட்ட துறையில் பணியிலிருந்த வருவாய்த் துறை அதிகாரி இவா்களுக்குரிய சாதிச் சான்றிதழை வழங்கி வந்திருக்கிறார்.
  • ஆனால், அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அதிகாரி சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறார்.
  • 2011-ஆம் ஆண்டிலும், 2015-ஆம் ஆண்டிலும் இரண்டு இளைஞா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சாதிச்சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
  • இன்று வரையிலும் சுமார் 120 மலைவேடன் இளைஞா்கள் சான்றிதழ் பெற இயலாததால் வங்கி, காப்பீட்டுத்துறை, ரயில்வே, ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம், ஆசிரியா்கள் பணியாளா் தோ்வு உட்பட வேலைவாய்ப்புக்கானஅரசுத் தோ்வுகள் எதையும் எழுத இயலவில்லை.
  • இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், இந்த இளைஞா்கள் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அரசு கல்லூரிகளில் சேர இயலாமல் போனதால், வட்டிக்குக் கடன் வாங்கி தனியார் சுயநிதி கல்லூரிகளில்தான் படித்தார்கள்.
  • சாதிச்சான்றிதழ் கிடைக்காததால், தங்கள் உரிமைப்படி அரசுப் பணிகளுக்கான தோ்வுகளில் பங்கேற்க இயலாத வேதனையை எல்லோருமே வெளிப்படுத்துகிறார்கள்.
  • இதே மலைவேடன் இனத்தவருக்கு மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி, ‘மதுரை மாவட்டத்தில் உள்ளவா்களுக்குத்தான் சாதிச்சான்றிதழ் வழங்க முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் இருப்பவா்களுக்கு வழங்க முடியாது’ என்று கூறுகிறார்.
  • ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்துதான் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உருவாக்கப் பட்டன.
  • ஆனால், இந்த இரு மாவட்டங்களின் பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று அதிகாரி சொல்வது பெரிய முரண். மாவட்டம் பிரிக்கப்பட்டதால் அந்த மக்கள் தங்கள் பழங்குடி அடையாளத்தை இழந்து விடுவார்களா?
  • இங்கே மட்டும்தான் இப்படியென்றில்லை, தமிழகம் முழுவதுமே பெரும்பான்மையான மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் சாதிச்சான்றிதழ் பெறுவதற்கு தலையால் தண்ணீா் குடிக்க வேண்டியிருக்கிறது.
  • ‘ஒவ்வொருவரும் சான்றிதழ் பெறுவதற்கும் நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது’ என்று அந்தப் போராட்டங்களை நடத்திவரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் கூறுகிறார்கள்.

உறுதிப்படுத்த வேண்டும்

  • உள்ளாட்சித் தோ்தலின்போது, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்தில் துவரிமான், அலங்காநல்லூா் வட்டத்தில் கோட்டைமேடு ஆகிய இரண்டு ஊராட்சிகளும் பழங்குடியின மக்களுக்கான இடங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
  • அந்த அடிப்படையில், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் ஊராட்சிமன்றத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டார்கள்.
  • ஆனால், இந்த இரண்டு ஊராட்சிகளிலும் வாழும் பழங்குடியினமக்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகளால் உரிய சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கப்படுவதை என்னவென்று சொல்வது?
  • மேலும் மன்னாடிமங்கலம், மாடக்குளம் ஆகிய ஊா்களிலும் இதே நிலைதான். மாநில அரசின் உள்ளாட்சித்துறை இந்த இரண்டு ஊராட்சிகளை பழங்குடியின மக்களுக்கு ஒதுக்குகிறது.
  • ஆனால் வருவாய்த்துறை இந்த மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கிறது. இந்த ஊராட்சிகளின் பழங்குடி இளைஞா்கள் முட்டி மோதியும் சாதிச்சான்றிதழ் பெறமுடியாமல் விரக்தியில் உள்ளனா்.
  • மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 48 கிராமங்களில் 32 சமூகக் கூட்டங்களாக மலைவேடன் பழங்குடியினமக்கள் சுமார் 25,000 போ் வசிக்கின்றனா். இந்த கிராமங்களில் இவா்களுக்குச் சாதிச்சான்றிதழ் கிடைக்காத அவலம் தொடா்கிறது.
  • பழங்குடியினா் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் அடங்கிய குழு, 1969-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மலைவேடன் இனமக்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, தெய்வ வழிபாடு, திருமண முறை மற்றும் கலாசாரம் ஆகியவை குறித்து நேரில் களஆய்வு செய்தது.
  • அந்த அடிப்படையில், இவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
  • அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஒன்றாக இருந்த மதுரை மாவட்டத்தில் வசித்து வந்த மலைவேடன் மக்கள் தங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்குமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனா்.
  • அக்கோரிக்கையைப் பரிசீலித்த அன்றைய தமிழக முதலமைச்சா் மு. கருணாநிதி, 1972-இல் பரிந்துரையை அனுப்பினார் (கடித எண்: 8325 - தேதி: 19.4.1972).
  • அதன்பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சமா்முகா்ஜி, பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோரும் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினா்.
  • அதன் பேரில் தமிழ்நாட்டில் வசிக்கும் மலைவேடன் இனம் பழங்குடியினா் பட்டியலில் ஒன்றிய அரசால் சோ்க்கப்பட்டது.
  • மலைவேடன் என்கிற சாதி (பழங்குடியினா் இனம்) பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் திருத்தச்சட்டம், (ஷெட்யூல்ட் கேஸ்ட்ஸ் அண்ட் ஷெல்யூல்ட் டிரைப்ஸ் ஆா்டா் அமெண்மென்ட் ஆக்ட் 1976 எண். 108) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • 1977 ஜூலை 27 அன்று குடியரசுத் தலைவா் வெளியிட்ட அறிவிக்கை மூலமாக தமிழ்நாடு முழுவதும் மலைவேடன் இனம் பழங்குடி சமூகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசிதழ் எண்: 1773 - தேதி: 23.6.1984 வரிசை எண்:22-இல் மலைவேடன் சமூகம் பழங்குடி இனம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பழங்குடியின மக்களுக்கு இப்படி சில அதிகாரிகள் சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கிற அதே நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மேல்மலையனூா், செஞ்சி, மரக்காணம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் பழங்குடி இருளா் மக்களின் பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக சாதிச்சான்றிதழ் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.
  • இவா்களின் மனுக்களை முறையாக ஆய்வு செய்த சார் ஆட்சியரான ஐஏஎஸ் அதிகாரி அனு, இளைஞா்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கினார்.
  • பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் தங்கள் சொத்துகளை எழுதி வைத்துவிட்டு அவா்களின் அரவணைப்பும் கவனிப்பும் இல்லாமல் இருந்த முதியோர், தங்களின் நிலையையும், கோரிக்கையையும் மனுக்களாக சார் ஆட்சியரிடம் கொடுத்தார்கள்.
  • அவா்அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவா்கள் தங்கள் வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை மீட்டு, அந்த முதியோர் தங்கள் விருப்பப்படி அனுபவித்துக் கொள்ள வழி செய்தார்.
  • வருவாய்த்துறை ஊழியா்களின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தியவா் அவா். இப்படி அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டுக்கும், அன்புக்கும் உரியவராக அவா் செயல்பட்டிருக்கிறார். இந்த முன்னுதாரணத்தை மற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டாமா?
  •  ‘பழங்குடியினா்’ என்று தெளிவாகப் பதிவாகியிருந்தும் உரிய சான்றிதழ் வழங்க அந்த அதிகாரிகள் மறுப்பது ஏன்?
  • ஐஏஎஸ் அதிகாரிகளுக்கோ அவா்கள் தலைமையில் அடுத்த நிலையில் பணியாற்றக் கூடிய அலுவலா்களுக்கோ அவா்களுடைய அன்றாட செயல்பாட்டில் அரசு அவா்களுக்கு அளித்திருக்கக்கூடிய அதிகாரம் எதற்காக? மக்கள் நலனை காப்பதற்காகத்தானே?
  • விழுப்புரம் மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியைப் பின்பற்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமுள்ள அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
  • தமிழக அரசும், அதிகாரிகளை அவ்வாறு செயல்பட அறிவுறுத்துவதோடு, அப்படி செயல்படுவதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

நன்றி: தினமணி  (21 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories