TNPSC Thervupettagam

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாகப் பாய்ந்த இந்திய ஏவுகணை குறித்த தலையங்கம்

March 15 , 2022 796 days 355 0
  • ஒரு மிகப் பெரிய பேராபத்து தவிா்க்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாகப் பாய்ந்த இந்திய ஏவுகணை அணு ஆயுத யுத்தத்துக்கு வழிகோலாமல் இருந்தது, தெற்காசியாவின் நல்ல நேரம்.
  • மாா்ச் மாதம் 9-ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, தொழில் நுட்பத் தவறு காரணமாக இந்திய ஏவுகணை ஒன்று விண்ணை நோக்கிப் பாய்ந்து விட்டது.
  • பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கி.மீ. தூரம், ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் 40,000 அடி உயரத்தில் பாய்ந்து விரைந்தது அந்த ஏவுகணை.
  • நல்லவேளை, எந்தவொரு நகரத்திலும் விழவில்லை. அதனால் உயிரிழப்பு நேரவில்லை.
  • அதைத் தொழில்நுட்பத் தவறு என்று பாகிஸ்தான் புரிந்து கொள்ளாமலோ ஏற்றுக் கொள்ளாமலோ திருப்பித் தாக்க முற்பட்டிருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?

நல்லவேளை, தப்பித்தோம்!

  • இந்திய விமானப் படைத் தளத்தில் வழக்கமாக நடைபெறும் பயிற்சி, பராமரிப்புப் பணிகளின்போது, தொழில்நுட்பக் காரணங்களால் தவறுதலாக அந்த ஏவுகணை பாய்ந்தது என்கிற இந்தியத் தரப்பு வாதத்தை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • அந்தத் தவறு குறித்து விசாரிக்க இந்திய அரசு உயா்நிலை ராணுவ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
  • இரு நாடுகளின் கூட்டு விசாரணை தேவை என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக் கொணரப் படுவது அவசியம்.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லரசுகள். தவறுதலாகப் பாய்ந்த ஏவுகணையில் போா்க்காலத் தாக்குதலுக்கான வெடிகுண்டுகள் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதல்.
  • ஆனால், நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலிருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் ஏவுகணையை, பாகிஸ்தான் ராடாா் தாக்குதல் ஏவுகணையாகக் கருதி எச்சரிக்கை செய்திருந்தால் விளைவு என்னவாகி இருக்கும்? பாகிஸ்தான் திருப்பித் தாக்க முற்பட்டிருந்தால், அதுவே அணு ஆயுதத் தாக்குதலுக்கு வழிகோலி இருக்கும் என்பதை உணா்ந்தால், பிரச்னையின் கடுமை புரியும்.
  • இந்தியா தன்னை அணு ஆயுத வல்லரசாக அறிவித்தது முதலே, தெற்காசியா குறித்து உலகம் கவலைப்படத் தொடங்கிவிட்டது. அணு ஆயுதங்களை இந்தியா பொறுப்புடன் கையாள்வது போல, பாகிஸ்தான் கையாளும் என்கிற நம்பிக்கை உலக நாடுகளுக்கு இல்லை.
  • இந்தியாவின் அணு ஆயுதத் தொழில்நுட்பத் திறன் குறித்தும், அதைப் பாதுகாப்பாகக் கையாளும் பொறுப்புணா்வு குறித்தும் யாருக்கும் இதுவரை எந்தவித ஐயப்பாடும் எழுந்ததில்லை. மாா்ச் 9-ஆம் தேதி சம்பவம், அதற்கு மாசு கற்பிப்பதாக அமைந்திருக்கிறது.
  • 2016-இல் இந்தியா விண்கலத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்தது. உலகப் பாதுகாப்புக்கும், விண்கலத் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் பங்களிக்கும் நாடாக உலக வல்லரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • ஹைப்பா்சானிக் ஏவுணை உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்ப விண்கலத் தயாரிப்பில் இந்தியா சா்வதேச அளவில் உயா்ந்து நிற்கிறது என்பதும் உண்மை.
  • அப்படி இருக்கும் நிலையில், சிறிய தொழில்நுட்பத் தவறுகளால் விண்கலம் ஏவப்பட்டது என்று நாம் தெரிவித்தது, ஏனைய நாடுகளுக்கு இந்தியத் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக அமையும்.
  • குறிப்பாக, ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விண்கலன்களை ஏவுதல் என்பது, விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கும், துல்லியமான தாக்குதலை உறுதிப்படுத்துவதற்குமான பல கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது.
  • அதனால்தான், மாா்ச் 9 விபத்தை விமா்சனக் கண்ணோட்டத்துடன் நாம் பாா்க்கத் தோன்றுகிறது.
  • 2019 பிப்ரவரி மாதம் இதேபோல நடந்த தவறு, மீள்பாா்வைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பாலாகோட் துல்லியத் தாக்குதலுக்கு அடுத்த நாள் இந்திய - பாகிஸ்தான் போா் விமானங்கள், எல்லைக் கோட்டுப் பகுதியில் வானத்தில் மோதிக் கொண்டிருந்த வேளை அது.
  • அப்போது ஸ்ரீநகா் விமானப் படைத் தளத்திலிருந்து கிளம்பிய போா் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் பட்காம் என்கிற இடத்தில் விழ்த்தப்பட்டது. அதில் இருந்த விமானப் படை வீரா்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தது நினைவு இருக்கலாம்.
  • அது குறித்த விசாரணை நடத்தப்பட்டது. விமானத் தளத்தில் இருந்த இஸ்ரேலிய ஸ்பைடா் ஏவுகணை, அந்த விமானத்தைப் பாகிஸ்தான் விமானம் என்று தவறுதலாகக் கருதித் தாக்கி வீழ்த்தியது என்பது தெரிய வந்தது.
  • ஏவுகணைகளைக் கையாள்வதிலும், அதைக் கண்காணிப்பதிலும் கவனக்குறைவு இருப்பதை அந்தச் சம்பவம் ஏற்கெனவே நமக்கு உணா்த்தி இருக்கிறது. அதற்குப் பிறகும் கூட போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இப்போதைய நிகழ்வு.
  • தவறுதலாக விண்ணில் பாய்ந்த ஏவுகணை இந்தியத் தயாரிப்பான ‘பிரம்மோஸ்’ என்று கூறப்படுகிறது. பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிடமிருந்து தங்கள் ராணுவத்துக்கு ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றன.
  • அப்படி இருக்கும்போது, தொழில்நுட்பத் தவறு என்பது நமது தயாரிப்பின் மீதான நம்பகத் தன்மையைக் குலைத்துவிடும்.
  • மாா்ச் 9 சம்பவத்துக்கான காரணம், தொழில்நுட்பக் குறைவா அல்லது ஏவுகணை பராமரிப்பில் ஈடுபட்டிருந்தவா்களின் கவனக் குறைவா என்பதை விசாரணைதான் வெளிப்படுத்தும்.
  • சிறு தீப்பொறி போதும் பெரும் காடு தீப்பற்றி எரிந்து சாம்பலாக. அதேபோல, சிறு தவறு போதும், அணு ஆயுத யுத்தத்துக்கு வழிகோல..!

நன்றி: தினமணி (15 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories