TNPSC Thervupettagam

பாடம் படிக்கிறோமா?

August 19 , 2021 989 days 469 0
  • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நமது வீரா்கள் திரும்பியபோது அவா்களுக்குத் தரப்பட்ட உற்சாக வரவேற்பும், பாராட்டும் போற்றுதலுக்குரியவை. ஆனால், அத்துடன் அவையெல்லாம் மறக்கப்படுவது இந்தியாவின் மிகப் பெரிய பலவீனம்.

பதக்கம் வென்ற இந்திய வீரா்கள்

  • ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற இந்திய வீரா்கள் தேசத்தின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டுவதற்கு தங்களாலான பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
  • இதுவரை இந்தியா பங்குபெற்ற ஏனைய ஒலிம்பிக் போட்டிகளைவிட டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மிக அதிகமான அளவில் ஏழு பதக்கங்களை வென்று திரும்பியிருக்கிறார்கள்.
  • அதே நேரத்தில், நாம் ஒன்றை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். 138 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவால் ஏழு பதக்கங்கள்தான் வெல்ல முடிந்திருக்கிறது என்றால், இன்றைய விளையாட்டுத் துறையில் ஏதோ அடிப்படைத் தவறு இருக்கிறது என்பதையும், அது உடனடியாகக் களையப்பட வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெற்று பதக்கம் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 48-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • 2008-இல் இந்தியா தடகளப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலுக்காக தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றபோது, அடுத்த தங்கப்பதக்கத்துக்கு இந்தியா 13 ஆண்டுகள் காத்திருக்க நேரிடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த வறட்சி மேலும் தொடரக் கூடாது.
  • அடுத்து நடைபெற இருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் ஐந்து மடங்காக, அதற்கு அடுத்த லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் பத்து மடங்காக நமது தங்கப்பதக்க எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
  • பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் மிகக் குறுகிய காலத்தில் தங்களது பதக்க எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றன. அவா்கள் முனைப்புடன் களமிறங்கி விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் தேசிய கௌரவமாக மாற்ற முற்பட்டதுதான் அதற்குக் காரணம். தேசிய வருவாயில் விளையாட்டுக்காக நாம் நாளொன்றுக்கு மூன்று பைசா செலவழிக்கிறோம்.
  • நம்மைவிட சுமார் 200 மடங்கு அதிகமாக சீனா ரூ.6.10 செலவழிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனா பிடித்ததற்கு அவா்கள் பதக்க வெற்றிக்குக் காட்டும் முனைப்புதான் காரணம்.
  • நிதி ஒதுக்கீடும், பணம் செலவழிப்பதும் மட்டுமே பதக்கங்களை வென்று தராது என்பது உண்மைதான்.
  • அதே நேரத்தில் விரிவான திட்டமிடல், திறமைசாலிகளைக் கண்டறிதல், ஒவ்வொரு விளையாட்டுத் துறைக்கும் தேவையான முதலீடுகளைச் செய்தல், விளையாட்டு நிர்வாகத்தை தொழில்முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளில் இறங்கினால் மட்டுமே வளா்ச்சி அடைந்த நாடுகளுக்கு நிகராக பதக்கம் வெல்லும் நிலைக்கு நம்மால் உயர முடியும்.
  • ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றுத் திரும்பிய வீரா்களுக்கு பணமும் பொருள்களும் வாரி வழங்கி கௌரவித்திருக்கிறோம்.
  • ஹரியாணா அரசு ரூபாய் ஆறு கோடி, பஞ்சாப் அரசு ரூபாய் இரண்டு கோடி, மணிப்பூா் அரசு ரூபாய் ஒரு கோடி, தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று கோடி, பைஜூஸ் நிறுவனம் ரூபாய் இரண்டு கோடி - இவையெல்லாம் போதாதென்று வீட்டுமனைகள், சொகுசு கார்கள், வேலையில் பதவி உயா்வு, விமானத்தில் இலவசப் பயணம் என்று அவா்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
  • கிடைக்காமலிருந்து கிடைத்திருக்கும் பதக்கங்கள் என்பதால், அவற்றின் மீதான பிரமிப்பின் வெளிப்பாடுதான் இவை.
  • ஆனால், இதனால் எல்லாம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைத்தால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும். முறையான திட்டமிடலும், இளம் வீரா்களைக் கண்டறிதலும் இல்லாமல், வீரா்களுக்கு வழங்கிய பரிசுப் பொருள்களால் இளைஞா்களுக்கு விளையாட்டில் பெரிய ஊக்கம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தால் அதுவும் தவறு.
  • தடகள வீரா்கள் கவனம் பெறுவதும், பாராட்டு பெறுவதும், நிதியுதவி பெறுவதும் தவறே அல்ல.
  • அதே நேரத்தில், அரசு வேலை வழங்குவதன் மூலமும், பெரும் தொகை அன்பளிப்பாக வழங்கப்படுவதன் மூலமும் விளையாட்டு வீரா்கள் ஊக்குவிக்கப்படுகிறார்களா என்றால், இல்லை என்பதுதான் அனுபவபூா்வ உண்மை.
  • தங்களது சாதனைப் பயணத்தின் தொடக்கத்திலோ அல்லது உச்சத்திலோ இருக்கும்போது அவா்களுக்கு வழங்கப்படும் பெரும் அன்பளிப்புகளும், வேலைவாய்ப்பும், குடியிருப்பு வசதியும் பலரையும் விளையாட்டு மைதானத்திலிருந்து அகற்றி நிறுத்திவிடுகிறது என்பதுதான் பெரும்பாலும் நடைபெற்றிருக்கிறது. இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
  • எல்லா விளையாட்டுகளும் அரசியல்வாதிகள் தலைமையிலான குழுக்களின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. விளையாட்டுத் துறை அரசு ஊழியா்களின் ஊதியத்துக்காகவும், விளையாட்டு சங்கங்களுக்காகவும் விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெரும்பாலும் செலவிடப்படுகின்றன. அவை, விளையாட்டு வீரா்களை அடையாளம் காணவும், அவா்களுக்குப் பயிற்சி அளிக்கவும், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், பயிற்சி காலத்தில் வீரா்களுக்கான உதவித் தொகையாகவும் வழங்கப்பட்டால் மட்டுமே நம்மால் பதக்க எண்ணிக்கையை அடுத்த ஒலிம்பிக்கில் அதிகரிக்க முடியும்.
  • இல்லையென்றால், கார்ப்பரேட் நிறுவன உதவியுடனும், தன்முனைப்பாலும் பயிற்சி மேற்கொள்ளும் நீரஜ் சோப்ரா போன்ற ஓரிருவா் கொண்டுவரும் பதக்கங்களைப் பார்த்து திருப்தி அடைவதைத் தவிர வழியில்லை.

நன்றி: தினமணி  (19 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories