TNPSC Thervupettagam

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா தடை: அடுத்தது என்ன

September 30 , 2022 574 days 315 0
  • பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சட்ட விரோத அமைப்பு என்று ஒன்றிய அரசால், ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), 1967’, பயன்படுத்தி அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பையும் சேர்த்து மேலும் 8 அமைப்புகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகத் தடைசெய்யப்பட்டுள்ளன.
  • இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒன்றிய அரசின் சட்ட அமல் முகமைகளும், மாநிலங்களின் காவல் துறைகளும் கைதுசெய்யலாம். அவர்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கலாம். அவர்களுடைய நிலையான சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம். இவை வெளியே பரவலாகத் தெரிந்த விஷயங்கள். மேலதிகம் இப்படித் தடை விதிக்கப்படும் அமைப்புகள் என்னென்ன விளைவுகளைச் சந்திக்கும்? பார்ப்போம்.

உறுப்பினர் எதிர்கொள்ளும் தண்டனைகள்

  • ஒன்றிய அரசால் ‘சட்ட விரோதம்’ என்று அறிவிக்கப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பதே ‘குற்றம்’ என்கிறது யுஏபிஏ சட்டத்தின் 10வது பிரிவு. தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்காகக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையில்கூட விதிக்கப்படலாம். சில அசாதாரண சூழல்களில் மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
  • சட்டத்தின் 10வது பிரிவின்படி, தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பவர் அல்லது அதன் கூட்டங்களில் பங்கேற்பவர் அல்லது அந்த அமைப்புக்கு நிதி அளிப்பவர் அல்லது அமைப்பிடமிருந்து ஏதேனும் உதவி பெறுபவர் இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனைக்கு ஆளாவார், ரொக்க அபராதமும் அவர் மீது விதிக்கப்படலாம். தடைசெய்யப்பட்ட அமைப்பின் நோக்கங்கள் நிறைவேறச் செயல்படும் எவருமே இந்த தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாவர்.
  • வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி செய்தபோது ‘சிமி’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (Students Islamic Movement of India) தடைசெய்யப்பட்டு நூற்றுக்கணக்கான அதன் உறுப்பினர்கள் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். இதே சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட மாவோயிஸ இயக்கங்களைச் சேர்ந்தவர்களை, இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் அதிகமிருந்த மாநிலங்களில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
  • தடைசெய்யப்படும் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றால் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ எவருக்கேனும் ஏற்பட்டால் தண்டனைக்கு உள்ளாக நேரும். எவராவது இறந்துவிட்டால் அதற்குக் காரணமானவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
  • மரணம் இல்லாத சேதங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள்கால சிறைவாசம் வரை விதிக்கப்படலாம்.

ஒன்றிய அரசின் அதிகாரங்கள்

  • யுஏபிஏ சட்டத்தின் 7வது பிரிவு, தடைசெய்யப்பட்ட சட்ட விரோத அமைப்பு தன்னிடமுள்ள நிதியைப் பயன்படுத்தாமல் தடுக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • இவ்விதம் தடைசெய்யப்பட்ட இயக்கம் குறித்து விசாரணை நடத்தும் ஒன்றிய அரசின் முகமைகள், அந்த அமைப்பைச் சேர்ந்த நபரிடம் இருக்கும் பணம், பங்குப் பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் அல்லது வசூலிக்கப்பட வேண்டிய கடன் நிலுவை போன்றவற்றை வைத்திருந்தால் – அதைச் சட்ட விரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்கிறது என்று விசாரணை மூலம் கண்டறிந்தால் – எழுத்துப்பூர்வமான ஆணை மூலம் அதைத் தடுக்கலாம்.
  • தடைசெய்யப்பட்ட அமைப்பின் அலுவலகங்களை அல்லது இருப்பிடங்களை காவல் துறையினர் சோதனையிடவும் அவர்களுடைய நிதிக் கணக்கு புத்தகங்களை ஆய்வுசெய்யவும் யுஏபிஏ சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
  • சட்ட விரோதச் செயல்களுக்கான கூடுமிடங்களாக, ஒரு வீட்டையோ அலுவலகத்தையோ அல்லது ஒரு குடியிருப்பின் பகுதியளவு இடத்தையோ அறிவிக்கவும் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தின் 8வது பிரிவு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • சட்ட விரோதச் செயல்களுக்கான இடம் என்று ஒன்றிய அரசு அறிவித்த பிறகு, மாவட்ட மாஜிஸ்திரேட் அல்லது ஆட்சியர் அங்கு கைப்பற்றப்படும் பொருள்கள் அனைத்தையும் உரிய வகையில் பட்டியலிட வேண்டும். அவற்றில் சட்ட விரோதச் செயலுக்காக பயன்படுத்தக்கூடியவற்றை கையாளக் கூடாது என்று அவர் தடைவிதிக்கலாம்.
  • ஜகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எஃப்) அமைப்பு 2016இல் தடைசெய்யப்பட்டது. அந்த அமைப்பின் நிதி மற்றும் அசையாச் சொத்துகள் இந்தச் சட்டப் பிரிவின்படியே முடக்கப்பட்டன.

நன்றி: அருஞ்சொல் (30 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories