TNPSC Thervupettagam

புத்தகக் காட்சிகள் மகிமை இழக்கலாமா

October 27 , 2023 193 days 223 0
  • தமிழ்நாட்டில் புத்தகக் காட்சிகள் பரவலாகிவிட்ட காலம் இது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), தன்னார்வலர்களால் முக்கிய நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. தற்போது அரசின் சார்பாக மாவட்டங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான பொருள்செலவின் பெரும்பகுதியை மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கின்றன.
  • சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை புத்தகத் திருவிழாவில் பெரும்பாலான புத்தக அரங்குகளில் போதுமான விற்பனை இல்லை என்ற கவலை தோய்ந்த குரல்கள் கேட்கின்றன. ஏன் இந்த நிலை?

கவனிக்க வேண்டிய மாற்றங்கள்

  • மதுரை புத்தகத் திருவிழா இந்த முறை வழக்கத்தைவிட தாமதமாகவே தொடங்கியது. போதுமான விளம்பரம் இல்லை; நவராத்திரி விழா நேரம் என்பதால் அதிகக் கூட்டம் வரவில்லை... இப்படியெல்லாம் பலராலும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவை தவிர காலத்திற்கு ஏற்ற சில முக்கிய மாற்றங்களைக் கவனிக்கத் தவறிவிட்டால், புத்தகக் காட்சிகள் மேலும் சரிவைச் சந்திக்கும்.
  • புத்தகக் காட்சி என்பது புத்தக விற்பனைக்காக மட்டும் அல்ல. வாசகர்கள் சந்திப்பு, எழுத்தாளரைச் சந்தித்தல், இலக்கிய உரைகள், கலைநிகழ்ச்சிகள் எனப் பல்வேறு செயல்பாடுகளின் தொகுப்பாகும். முன்பு தனியார் நடத்தியபோது இதற்கெனப் பெரும் பொருள்செலவு செய்யப்பட்டது. குறிப்பாக மாலை நேரம் நிகழும் உரையரங்குகள், தொலைக்காட்சிப் பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என மக்களை ஈர்க்கப் பல உத்திகள் பயன்படுத்தப் பட்டன.
  • இப்போது இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பலரின் உரைவீச்சுகளை அதில் பார்த்துக் கொள்ளலாம். அதேவேளையில், நேரில் கேட்பது சிறந்தது என்பவர்களுக்காகத்தான் அரசே இலக்கியத் திருவிழாக்களை நடத்துகிறது. எனவே, இப்போது அரசு நடத்தும் புத்தகக் காட்சிகளில் அந்தந்த மாவட்டப் பேச்சாளர்கள், எழுத்தாளர்களை உரையரங்கிற்கு அழைக்கலாம். இதன் மூலம் பொருள்செலவின் பெரும்பகுதியைக் குறைக்கலாம்.

செய்ய வேண்டியவை

  • மதுரை புத்தகத் திருவிழாவில் ஒவ்வோர் ஆண்டும் எழும் மெல்லிய குரல், சில அரங்குகளுக்குள் பள்ளிக் குழந்தைகளை அனுமதிப்பதில்லை என்பது. புத்தக விற்பனையாளர்கள் சிலர், “குழந்தைகள் புத்தகங்களைக் கண்டபடி கலைத்துப் போட்டுவிடுகின்றனர்என்பதையே இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர். அவர்கள் முதலீடு செய்திருக்கின்றனர் என்பதால் அதையும் கவனிக்க வேண்டும் என்றாலும், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய கொடுஞ்செயல். இதற்கு என்ன செய்யலாம்?
  • புத்தகக் காட்சிகளைத் தனியார் நடத்தியபோது அரங்கிற்குள் அனுமதிப்பதும் மறுப்பதும் அவர்களின் உரிமை. இப்போது அரசு நடத்துகிறது. அரங்க வாடகைாயை விற்பனையாளர் தருகிறார் என்று வாதிடலாம்.
  • மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளின் மூலம் நன்கொடைகளைப் பெற்றே புத்தகக் காட்சியை நடத்துகிறது. புத்தக வாசிப்பு என்பது சமூகத்தின் அறிவு வளர்ச்சி என்பதால், அதற்கான செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நிதியை ஒதுக்க வேண்டும். அதன் மூலம் புத்தகத் திருவிழாக்களை மாவட்டந்தோறும் நடத்த வேண்டும். பள்ளிக்குழந்தைகளை அனுமதிப்போருக்கு மட்டுமே அரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும்.
  • இன்று சும்மா சுற்றிப் பார்க்கும்அவர்கள்தாம் நாளைய படைப்பாளர்கள், வாசகர்கள். எனவே, அது எதிர்காலத்திற்கான முதலீடு என்பதைப் பதிப்பாளர்கள் உணர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் வந்து பார்ப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக வட்டார அளவில் சிறிய புத்தகத் திருவிழாக்களையும் நடத்தலாம். கலை நிகழ்வுகளை முற்றிலுமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதில் சிறப்பு நிகழ்வுகளாகக் கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகளை அழைத்தாலே போதும்.
  • இந்த ஆண்டில் புத்தக விற்பனை குறைந்ததற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் தவிர இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. அது, கலைஞர் நூற்றாண்டு நூலகம். ஆயிரம், இரண்டாயிரம் என விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்கள் உள்பட, சமீபத்தில் வெளியான ஏராளமான புத்தகங்கள் நூலகத்தில் இருக்கின்றன.
  • நூலகத்திற்கு அடிக்கடிச் சென்றவன் என்ற முறையில் அதிக விலை கொண்ட புத்தகங்கள் பலவற்றை இங்கேயே படிக்கலாம் என்று பார்த்து வைத்திருக்கிறேன். என்றாலும் சொந்தமாக வாங்கியே தீர வேண்டும் என்ற புத்தகங்களை வாங்கப் பல ஆயிரம் ரூபாய்களைப் புத்தகத் திருவிழாவில் செலவழித்திருக்கிறேன். இந்த ஆசையை வளர்த்தெடுக்கும் பதிப்பாளர்களே எதிர்காலத்தில் புத்தகங்களை நூலகத்திற்கு வெளியே விற்பவராகவும் வெற்றிபெற இயலும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories