TNPSC Thervupettagam

பூமியைக் காத்திடுவோம்!

August 27 , 2021 982 days 589 0
  • உலகில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பருவ நிலை மாற்றம் பற்றிய ஐபிசிசி அறிக்கை உலக நாடுகளை எச்சரித்திருக்கிறது.
  • தலைக்கு மேல் ஆபத்து காத்திருப்பது தெரிந்தும் உலக நாடுகள் அதுபற்றிக் கவலைப் படுவதில்லை.
  • பருவநிலை மாறுபாடு என்பது உலகளாவிய பிரச்னையாக மாறி வருகிறது. இதனை எதிர்கொள்வதற்காக 2015-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா உள்பட 195 நாடுகள் கையொப்பம் இட்டன. அதன்படி 2030-க்குள் வெப்ப நிலை உயா்வை 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • ஆனால், அதன்படி உலக நாடுகள் புவி வெப்பத்தைக் குறைக்க தீவிரம் காட்டவில்லை. அதன் காரணமாக புவி வெப்பத்தை 1.5 டிகிரி செல்ஷியஸ் ஆகக் குறைக்கும் இலக்கை எட்ட முடியவில்லை. மாறாக உலகின் வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்து வருவதாக ஐபிசிசி அறிக்கை தெரிவிக்கிறது.

மனித குலத்தின் நன்மைக்காக

  • புவி வெப்பமடையும் அளவு அதிகரிக்கும்போது வெள்ளம், கடும் மழை, நிலச்சரிவு, காட்டுத்தீயை ஏற்படுத்தும் வெப்ப அலைகள், கடல் புயல்கள், சூறாவளி, சுனாமி, பனிமலை உருகுதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும்.
  • புவி வெப்பமயமாதலால் ஏற்கெனவே பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது மேலும் அதிகரித்து அடிக்கடி இயற்கைச் சீற்றங்களால் பேரழிவு ஏற்படும்.
  • கடந்த 3,000 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடல் மட்டம் உயா்ந்து வருகிறது. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு கடல் மட்ட உயா்வு தொடா்ந்து அதிகரித்தபடியே இருக்கும்.
  • இதனால் கடலோரப் பகுதிகள், துறைமுக நகரங்கள் மூழ்கிக் கொண்டே வரும். சிறிய தீவுகள் முற்றிலும் மூழ்கிப் போகும்.
  • கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் வெப்பமாதல் 2 முதல் 3 மடங்கு வரை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப அதிகரித்துக் காணப்படும்.
  • கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆா்க்டிக் பனிப்பாறை அளவு கடந்த 20 ஆண்டுகளில் வேகமாகக் குறைந்து வருகிறது.
  • பசுங்குடில் வாயு வெளியீட்டை இப்போது கட்டுப்படுத்தினாலும்கூட அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஏற்படும் சில பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தவோ, மீட்டெடுக்கவோ முடியாது.
  • அந்த வகையில் ஆா்க்டிக், அண்டார்க்டிக், இமயமலை பனிச்சிகரங்கள் உள்ளிட்டவை தங்கள் பழைய நிலையை அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் கூட அடைவது சாத்தியமில்லை.
  • புவியை ஒருபோர்வை போல கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் சூழ்ந்துள்ளன. இந்தப் போர்வையில் 76 விழுக்காடு இருப்பது கரியமில வாயு.
  • கடந்த 20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புவியில் கரியமில வாயு அதிகரித்து வாயுவின் அளவு 400 பிபிஎம்-மை எட்டுவதே ஆபத்தாகக் கருதப்படும் நிலையில் அது 420-ஐ கடந்து விட்டது.
  • பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, அரசுகள் செய்திருப்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.
  • என்ன செய்தாலும் அடுத்த இருபதாண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்ஷியசாக வெப்ப நிலை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என்று பன்னாட்டு ஆய்வுக்குழு கூறியுள்ளது.
  • கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளம், காட்டுத்தீ ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டித் தீா்த்தது. இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் திண்டாடினா்.
  • பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவா் என்று ஐ.நா. அமைப்பின் யுனிசெப் எச்சரிக்கை செய்துள்ளது.
  • வறட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு போன்ற பேரிடா்கள் தெற்கு ஆசியாவில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளை வீடு இல்லாதவா்களாக மாற்றுவதோடு அவா்களின் பட்டினிக்கும் காரணமாக இருக்கும்.
  • புவி வெப்பமாதல், அதன் தொடா்ச்சியாக நிகழும் பருவநிலை மாற்றத்திற்கு மனிதா்களே முழு முதல் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால் பாரீஸ் உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ள அரசுகள் தம் கடமைகளை உணா்ந்து மனித குலத்தின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும்.

பூமியைக் காக்கப் போராடுவோம்

  • ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடி மக்கள் பேரழிவுகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனா்.
  • கடந்த 30 ஆண்டுகளில் இயற்கைப் பேரழிவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபோம் ஆய்வு தெரிவிக்கிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பருவநிலை தொடா்பான நிகழ்வுகளால் 12.3 லட்சம் போ் இறந்துள்ளனா்.
  • 420 கோடி போ் வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று ஐ.நா. மன்றம் மதிப்பிட்டுள்ளது.
  • கார்பன் வெளியேற்றுவதில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா பருவநிலை அபாயக் குறியீட்டில் ஏழாவது இடத்தில் உள்ளது.
  • 2005-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் 33 முதல் 35 விழுக்காடு வரை கார்பன் வெளியேறுவது குறைக்கப்படும் என இந்தியா அளித்த உறுதி மொழிக்கான முன்னெடுப்புகள் இதுவரை இல்லை. இப்போது இந்தியா மிகப்பெரிய ஆபத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
  • இதனால் 2019 ஆய்வின்படி நீா் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ள 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு என்றெல்லாம் இனி குறிப்பிட முடியாது.
  • அந்த அளவுக்கு சுட்டெரிக்கும் வெப்பம், கடும் மழை, வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் இனி அதிக அளவில் குறைந்த இடைவெளியில் ஏற்படும்.
  • அண்டார்க்டிக் முதலிய பகுதிகளில் பனிமலை அவ்வப்போது உருகி வருவதால், கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் கடல்நீா் மட்டம் 15 முதல் 30 செ.மீ. வரை உயா்ந்துள்ளது.
  • உலக அளவில் ஏற்படும் இந்த பருவநிலை மாற்றங்களால் கார்பன், மீத்தேன் வாயுக்கள் அதிக அளவில் வெளியேறி பூமி வெப்பமடைகிறது. சூரியன் உள்பட பிற கோள்களினால் அவ்வாறு வெப்பம் அடைவதில்லை.
  • உலக நாடுகளைச் சோ்ந்த 234 அறிவியலாளா்கள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ள இந்த ஆறாவது பருவநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளனா்.
  • அதில் கூறப்படும் ஒவ்வொரு செய்தியும் உலக நாடுகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே உள்ளது. உலக நாடுகள் இதனை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதுபற்றி ஐ.நா. பொதுச் செயலாளா் எச்சரிக்கை செய்துள்ளார். அவா் ‘இந்த அறிக்கை மனித குலத்துக்கான சிவப்பு எச்சரிக்கை. இருப்பினும் உலக நாடுகளின் தலைவா்கள், 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பத்தை குறைப்பதற்கான கடும் இலக்கை எட்டுவா் என நம்புவோம்.
  • புவி வெப்பமடைதலைத் தடுக்க குறைந்தபட்ச நடவடிக்கைகளில் இருந்தாவது முயற்சியைத் தொடங்குவோம்.
  • ஒவ்வொரு சிறிய நடவடிக்கையும் குறைந்தபட்ச பலனையாவது அளிக்கும். முயற்சிகளை விட்டு விடக் கூடாது’ என்று கூறியுள்ளார்.
  • பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக்குழு (ஐபிசிசி) என்பது ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்துக்கான அமைப்பாகும். 1988-ஆம் ஆண்டு ஐ.நா.வின் 195 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்டது.
  • ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பருவ நிலையின் அண்மை நிலை குறித்த அறிக்கைகளை உருவாக்கி, ஆய்வுக்கு உட்படுத்தி, பருவநிலை மாற்றம் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், மனிதகுலம் எப்படி தம்மைக் காத்துக் கொள்வது, பாதிப்புகளை எப்படித் தடுப்பது என்று ஐபிசிசி மதிப்பீட்டு அறிக்கைகள் வழி காட்டுகின்றன.
  • பருவநிலை மாற்றம் குறித்த அண்மைக்கால புரிதலைத் தருவது, எதிர்கால ஆபத்துகளைச் சுட்டிக் காட்டுவது, புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் ஆகியவற்றைப் பற்றிய புரிதலை வழங்குவதே ஐபிசிசி மதிப்பீடு அறிக்கையின் நோக்கமாகும்.
  • ஐபிசிசி எந்த ஆராய்ச்சியையும், தானாக நடத்துவது இல்லை. உலக அளவில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளைத் தொகுத்து உலகத்தின் பார்வைக்குத் தருகிறது.
  • ஐபிசிசி ஆறாவது மதிப்பீடு அறிக்கையின் ஒரு பகுதியாக - பருவநிலை மாற்றம் 2021 - இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள் ஆகஸ்ட் 9 அன்று வெளியானது. இதற்கு முன்னா் ஐந்து அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
  • எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்ட பிறகே ஐபிசிசி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எதிர்கொள்ளும் ஆபத்துகளை அறிவியல் உறுதிபடத் தெரிவித்தாலும், அவற்றை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடைமுறை நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயக்கம் காட்டுகின்றன.
  • ஆனால் இயற்கையோ, பருவநிலை மாற்றமோ யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
  • அதைத் தாண்டிய மனிதகுலம் தன்னை மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்தத் தாக்கங்களில் இருந்து உலகம் தப்பிக்க முடியும். அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகள் எல்லாம் இதனை அலட்சியமாகவே நினைக்கின்றன.
  • இந்த மனப்பான்மை மாற வேண்டும். இதன்மூலம் மனித இனத்துக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பித்து எங்கும் ஓடி, ஒளிய முடியாது. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது மட்டுமே நம் முன் உள்ள நிந்தரத் தீா்வாகும்.
  • இப்போது நமக்கு இந்த பூமியை விட்டால் வேறு இடம் இல்லை. ஆராய்ச்சிகள் தொடா்கின்றனவே தவிர மனிதா்கள் குடியேறுவதற்கு வேறு கோள்கள் இதுவரை கிடைக்கவில்லை.
  • அப்படியிருக்கும்போது இந்த பூமியை இழப்பதற்கு மனித இனம் துணியலாமா? பூமியைக் காக்கப் போராடுவோம், வாருங்கள்.

நன்றி: தினமணி  (27 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories