TNPSC Thervupettagam

பெண்ணின் திருமண வயது: கால மாற்றத்தை அங்கீகரிக்கும் சட்டத் திருத்தம்

December 21 , 2021 860 days 510 0
  • பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, சமூகச் செயல்பாட்டாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு வீதம், பிரசவ இறப்பு வீதம், தாய்-சேய் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே குறைந்தபட்சத் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரையை வழங்கியுள்ளது.
  • இப்பரிந்துரையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் பெண்கள் அதிகாரம் பெறுவதையும் பாலினச் சமத்துவத்தை எட்டுவதையுமே நோக்கங்களாகக் கொண்டுள்ளன என்பதும் முக்கியமானது.
  • திருமண வயதை நீட்டிக்கும் அதே நேரத்தில், அதுவரையில் பெண் கல்விக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் ஜெயா ஜேட்லி குழு வலியுறுத்தியுள்ளது.
  • மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து இந்து திருமணச் சட்டம், கிறித்துவத் திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் குழந்தைத் திருமணங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை வரையறுக்கும் சட்டப் பிரிவுகள் விரைவில் திருத்தங்களுக்கு உள்ளாகவிருக்கின்றன.
  • குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி குறைந்தபட்ச வயதை எட்டாதவர்களுக்குச் செய்துவைக்கும் திருமணங்கள் சட்டவிரோதமானவை. அவற்றை நடத்துபவர்கள் தண்டிக்கத் தக்கவர்கள்.
  • எனினும், அத்திருமணங்கள் செல்லத் தகாதவை அல்ல. குழந்தைத் திருமணம் செய்து வைக்கப் பட்டவர்கள் குறைந்தபட்சத் திருமண வயதை எட்டும்போது, திருமண உறவைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
  • எனினும், குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறான திருமணம் என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில், குறைந்தபட்சத் திருமண வயதை எட்டும் வரையில் குழந்தைகளைப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கவும் உத்தரவிடலாம்.
  • பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்தன. வேலையின்மையால் வருமான இழப்பைச் சந்திக்க நேர்ந்த ஏழைக் குடும்பங்கள், தங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்ததும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகிவிட்டது.
  • சட்டத் திருத்தங்களின் வழி திருமண வயதைக் கூட்டவிருப்பதால், இத்தகைய திருமணங்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
  • 18 வயதை எட்டுவதற்குள்ளேயே திருமணங்கள் நடத்தப்படுகிறபோது 21 வயது வரைக்கும் திருமணங்களைத் தள்ளிவைக்க வேண்டும் எனில், கண்காணிப்பும் நடவடிக்கைகளும் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
  • வாக்குரிமை வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்துவிட்ட நிலையில், திருமண வயதை 18-லிருந்து 21-க்கு நீட்டிப்பது பொருத்தமாக இருக்குமா என்ற கேள்வியின் தர்க்க நியாயங்களும் விவாதத்திற்குரியவை. கால மாற்றத்துக்கேற்பத் திருமண வயது நீட்டிக்கப் படுவது சரியானது என்பதே பெரும்பான்மை கருத்து.
  • எனினும், இந்தக் கால மாற்றத்தைச் சமய வேறுபாடுகளின்றி அனைத்துச் சமூகங்களும் தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories