TNPSC Thervupettagam

பேரறிவாளன் விடுதலை

May 20 , 2022 708 days 699 0
  • தமிழ் மக்களால் 1971-க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளது. பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் மௌன எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அக்கட்சியால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அரசியல் அபத்தம்!
  • இது தவிர, அவர்களது ‘செய்தித் தொடர்பாளர்’ என்ற பெயரில் இயங்கும்  அமெரிக்கை நாராயணன் உதிர்க்கும் முத்துகள் யாவும் காது கொடுக்க சகித்தாவை. இந்தத் தீர்ப்பை பயங்கரவாதத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியதோடு, தமிழ் மக்கள் அடைந்திருக்கும் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

நீதிமன்றத்தின் முன்னின்ற கேள்வி

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு தேசிய அரசியல் கட்சி எதிர்ப்புப் போராட்டம் நடத்துவது என்பது கேலிக்கூத்து. வேடிக்கையாகச் சொல்வார்கள், “அரசமைப்புச் சட்டத்தில் என்ன எழுதியிருந்தாலும் இறுதியில் நீதிபதிகள் சொல்வதே சட்டம்!” என்று. ஒரு கிரிமினல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்பதை ஒரு சட்ட மாணவன்கூட உறுதிப்படுத்திவிடுவான். ஆனால், இந்தச் சிற்றறிவுகூட இல்லாமல் பொறுப்பற்ற முறையில் ஏன் இப்படி காங்கிரஸ் செயல்படுகிறது?
  • தற்போது நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்டிருந்த பிரச்சினையானது, ‘ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா?’ என்பதே இல்லை. அக்கொலையில் சம்பந்தப்பட்ட நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்பார்வையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
  • பின்னர் தடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இந்தக் கொலையில் நேரடிப் பங்கு வகித்தவர்கள் அல்லர். கொலைக்கும், கொலையை ஒட்டிய ரகசிய சதிக்கும் பல்வேறு வழிகளில் துணை சென்றவர்கள் என்ற முறையில்தான் அவர்களது பங்கு அவ்விசாரணையில் கொண்டுவரப்பட்டது.
  • தடா சட்டத்தின்படி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டதுடன், காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் முன் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் அச்சட்டத்தில் இடம் உண்டு. மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டத்தின் கீழ்தான், பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
  • சிறப்பு நீதிமன்றம் 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிமினல் வழக்குகளில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவர் பங்கையும் தனித்தனியாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதுதான் உரிய முறை. ஆனால் அதையும் மீறி சிறப்பு நீதிமன்றம் அனைவருக்கும் மரண தண்டனை அளித்ததைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் முறையிடும்போது, ‘இது நீதித் துறையே விளைவித்த கொலைக் குற்றம்’ என்று விமர்சிக்கப்பட்டது. பின்னர், இந்த மேல்முறையீட்டில் 22 பேர் மீதான கொலைத் தண்டனையை ரத்துசெய்து 4 பேருக்கு மட்டும் உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.
  • இந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி கே.டி.தாமஸ் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், நான்கு பேருக்கு கொலைத் தண்டனையை உறுதிசெய்தது தவறு என்று கருத்து தெரிவித்தார். பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற சிபிஐ கண்காணிப்பாளர் தியாகராஜன், தான் ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதும்போது அதில் முக்கியப் பகுதி ஒன்றைத் தவிர்த்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

அமைச்சரவையே பிரதானம்

  • கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேரும் ஆளுநரிடம் அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி கருணை மனுவை அளித்தனர். அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அப்பதவிக்கு வருவதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். தமிழக அமைச்சரவையின் அறிவுரையைப் பெறாமலேயே 4 பேர் கருணை மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்தார்.
  • அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் அமைச்சரவையின் அறிவுரையின்றி ஆளுநர் கருணை மனுக்களைப் பரிசீலிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், ஆளுநரின் தள்ளுபடி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
  • அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை அம்மனுக்களைப் பரிசீலித்தது. திமுக அரசு ஏற்கெனவே விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மென்போக்கோடு செயல்படுவதாக அப்போது குறிவைக்கப்பட்ட நிலையில், நளினிக்கு மட்டும் மரண தண்டனையைக் குறைப்பதற்கு ஆளுநருக்கு அரசு ஆலோசனை வழங்கியது; மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
  • இதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும், அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கலாமும் முடிவு எதுவும் எடுக்காமல் 11 ஆண்டுகள் கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப் பின் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த பிரதீபா பாட்டீல் அம்மனுக்களைத் தள்ளுபடி செய்ததையொட்டி மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் நெருங்கியது. அச்சமயத்தில் தமிழக சட்டப்பேரவையில் குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனையை ரத்துசெய்வதற்கு குடியரசுத் தலைவர் கருணை காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (2011).
  • சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் இத்தனை ஆண்டுகளாக மரணக் கொட்டடியில் இருந்து வந்த அக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்துசெய்து அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது (2014). இதற்குப் பின்தான் தமிழக அமைச்சரவை குற்றவாளிகள் 7 பேருக்கும் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு அறிவுரை வழங்கியது.
  • இதையொட்டி உச்ச நீதிமன்றமும் அவர்கள் குறைந்தபட்ச தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டதனால் அவர்கள் தண்டனையைக் குறைப்பதற்கோ, மாற்றுவதற்கோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறலாம் என்று கூறியதன் அடிப்படையில் அவர்கள் மீண்டும் ஆளுநரிடம் மனு அளித்தனர். மறுபடியும் தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் தண்டனையைக் குறைக்கும்படி அறிவுரை வழங்கியது.
  • அதற்குப் பிறகு ஆளுநர் இதுகுறித்து முடிவு எதுவும் எடுக்காததனால் மீண்டும் ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ ஆளுநரின் இந்த சிறப்பு அதிகாரத்தில் தலையிட முடியாது என்று ஒதுங்கிக்கொண்டது. மறுபடியும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. 2018ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒருமுறை குற்றவாளிகளின் தண்டனையைக் குறைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றியது (9.9.2018). அதே தேதியில் தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் குற்றவாளிகள் 7 பேருக்கும் தண்டனையை ரத்துசெய்வதற்கு ஆலோசனை வழங்கியது.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சரவையின் ஆலோசனையைப் புறக்கணித்து ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தள்ளி வந்ததைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் குறை கூறியுள்ளது. ஆளுநர் சார்பாக வாதாடிய ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்ததுடன், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 161இன் கீழ் கருணை காட்டும் அதிகாரத்தை ஆளுநர் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாது என்றும், அமைச்சரவையின் ஆலோசனை அவரைக் கட்டுப்படுத்தும் என்றும் மீண்டும் ஒருமுறை வலிறுத்தப்பட்டுள்ளது.

சீர்திருத்துவதே தண்டனையின் நோக்கம்

  • சுமார் இரண்டாரை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த கருணை மனுக்களின் மீது மீண்டும் முடிவெடுப்பதற்காக ஆளுநரிடம் திருப்பி அனுப்பாமல், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றமே பிறப்பித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதைக் கண்டித்துதான் காங்கிரஸார் குரலெழுப்பிவருகிறார்கள்.
  • தீவிரவாதத்துக்கு ஆதரவானது என்று கருத்து கூறியுள்ள அமெரிக்கை நாராயணன் இந்தத் தீர்ப்பில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஏதேனும் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட முடியுமா? பணநாயகம் வென்றது அவர் கூறியுள்ளது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். தமிழக மக்களுக்குத் தோல்வி என்றும் அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீவிரவாத சட்டப் பிரிவுகளைச் சேர்ப்பதற்கு இடம் இல்லை என்று 1999ஆம் வருடத்திய மேல்முறையீட்டிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. இருப்பினும் இவ்வழக்கு சம்பந்தமான பிரச்சினை எழும்போதெல்லாம் குற்றவாளிகள் தீவிரவாதத்தை ஆதரிப்பவரகள் என்று தொடர்ச்சியான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவது சட்ட விரோதமானது மட்டுமல்லாமல், கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரமாகும்.
  • நம் நாட்டு குற்றவியல் தண்டனையின் அடிப்படை பழிவாங்குதல் அல்லது மாறு கை / மாறு கால் வாங்குவது அல்ல. மாறாக, தண்டனை விதிக்கப்பட்ட நபர்களைச் சீர்திருத்தி மைய நீரோட்டத்தில் கொண்டுசேர்ப்பதுதான். காந்திகூட ‘கண்ணுக்குக் கண் என்ற நோக்கம் தேசத்தையே குருடாக்கிவிடும்!’ என்று கூறினார். உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.
  • 1978இல் திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433-A கீழ் மரண தண்டனை பெற்ற குற்றவாளி 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டால் தண்டனைக் குறைப்பு பற்றி அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்துவிட்ட 7 குற்றவாளிகளின் தண்டனையையும் ஏன் மாநில அரசு குறைக்கக் கூடாது என்கிற கேள்விதான் மேலோங்கி நிற்கும்.

ஆளுநரின் ஆதிகார வரையறை?

  • கிரிமினல் சட்டத்தில் குற்றமிழைத்தவர்கள் மீது உரிய தண்டனை வழங்கிய பின் அவர்களுக்கு சட்டத்திலுள்ள சலுகைகள் வழங்குவதை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 30 வருடங்களாக ஒன்றிய அரசில் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் இப்பிரச்சனையில் ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துவருவது அவர்களைத் தமிழக அரசியலிலிருந்து மேலும் வெளித்தள்ளிக்கொள்ளவே வழிவகுக்கும். குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் சட்டங்கள் தெளிவாக இருக்கும்போது, அதையும் மீறி இத்துணைக்கண்டத்தின் அரசியலை முன்வைத்து தண்டனைகளை நிறைவேற்ற முயல்வது கிரிமினல் சட்ட முறைக்கே விரோதமானது.
  • கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சட்டத்திலுள்ள குறைந்தபட்ச சிறைத் தண்டனைக்கு மீறி மேலும் ஒரு பங்கு சட்டப் போராட்ட காலத்தில் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்மையிலேயே ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
  • இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் ஜெயலலிதா அரசு சிறப்பு வக்கீலாக பல பொடா வழக்குகளில் மறு ஆய்வுக் குழு முன்னால் ஆஜராகி வாதிட்டவர். தமிழ்நாட்டில் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களைப் பொடா சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் நியாயம் என்று வாதாடியவர். அவருக்கு இந்த மாநிலத்தின் அரசியல் பின்னணி அத்துப்படி. இருப்பினும், சட்ட நியாயங்கள் கருதி சிறப்பான தீர்ப்பொன்றை அவர் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
  • ஆளுநரின் அதிகார வரையறை என்ன என்பதையும், அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்பதையும் வலியுறுத்திய அவரது தீர்ப்பு இன்றைய ஒன்றிய அரசுக்கும், இங்குள்ள பாஜகவினருக்கும் வேப்பங்காயாக இருக்கலாம். ஆனால், அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
  • அது மட்டுமின்றி, மற்ற 6 குற்றவாளிகளுக்கும் மனத்தடையை அகற்றி சட்ட வரையறையுடன் செயல்பட்டு மன்னிப்பு அதிகாரத்தின் மூலம் தண்டனையை ரத்துசெய்தால் அவர்களை ‘திருந்திய மனிதர்கள்’ என்று கருத இடம் உண்டு. மீறினால் மீண்டும் குட்டு வைப்பதற்கு இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்!

நன்றி: அருஞ்சொல் (20 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories