TNPSC Thervupettagam

பேராபத்தில் பூமிப்பந்து!

August 18 , 2021 989 days 500 0
  • ஒரு வருடத்திற்கு மேலாக, ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு நாடுகளில் காட்டுத்தீ பரவல் அதிகரித்து வருகிறது. அல்ஜீரியாவில் மட்டுமல்லாமல் மத்தியதரைக் கடல் நாடுகளான கிரீஸ், துருக்கி, சைப்ரஸ் ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகக் காணப்படும் காட்டுத்தீ ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
  • அமெரிக்காவில் அமேசான் காடுகள் தொடர்ந்து பல வாரங்களாகப் பற்றி எரிந்ததும், ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தவித்ததும் சமீபத்திய நிகழ்வுகள்.

பூமி வெப்பமயமாதல்

  • ‘இன்டர் கவர்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச்’ (ஐபிசிசி) அமைப்பின் ஆறாவது அறிக்கை வெளியாகி இருக்கிறது. 234 விஞ்ஞானிகள் கொண்ட குழு தயாரித்திருக்கும் அந்தப் புதிய அறிக்கை உலகம் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
  • உலகின் பல பாகங்களிலும் எதிர்பாராமலும், அசாதாரணமாகவும் காட்டுத்தீயும், பிரளயமும் அதிகரிப்பதன் பின்னால் பூமி வெப்பம் அடைதலும், தட்பவெப்பநிலை மாற்றமும் இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐபிசிசி ஏழு வருடங்களுக்கு ஒரு முறை இதுபோன்ற தட்பவெப்ப நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்து சமர்ப்பிக்கிறது.
  • மனிதர்களின் செயல்பாடுகளின் மூலம் உலகத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாக அதிகரித்த மழை, புயல் காற்று, வெள்ளம் என்று மிகப்பெரிய பேராபத்துகள் நம்மை எதிர்கொள்கின்றன என்பதை சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.
  • மத்தியதரைக் கடல் நாடுகளிலும், அமெரிக்காவிலும் எதிர்பாராமல் ஏற்படும் காட்டுத்தீயும், ஜூலை மாதம் பெய்த பெருமழையின் பாதிப்புகளிலிருந்து இன்னும்கூட மீளாத ஜெர்மனியும் உலகத்தின் தட்பவெப்ப நிலை உஷ்ணமயமாவதை வெளிப்படுத்தும் முன்னறிவிப்புகள்.
  • பூமியின் வெப்பநிலை தற்போதைவிட 1.5 டிகிரி செல்ஷியஸýக்குக் கீழே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் சவால். இப்படியே போனால் 2040-க்குள் நிலைமை கைமீறிப் போகக்கூடும். 2100-க்குள் புவி வெப்பம் மேலும் 2.0 டிகிரி செல்ஷியஸக்கு மேலாக அதிகரிக்கக்கூடும்.
  • புவியியல் அறிஞர்களின் எதிர்பார்ப்புகளைத் தோற்கடித்து 2030-க்குள் புவி வெப்பம் மேலும் 1.5 டிகிரியைக் கடந்துவிடக் கூடும் என்று சமீபத்திய ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கிறது.
  • சில நாடுகள், மிக அதிகமான கரியமிலவாயு வெளியேற்றத்தின் மூலம், உலகத்தின் ஒட்டுமொத்த தட்பவெப்ப நிலையையும் காலம் தவறச் செய்கின்றன என்று குற்றம் சாட்டுகிறது அந்த அறிக்கை.
  • இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 17 மீட்டர் நீளம் கடல், கரையை உள்வாங்கும் சாத்தியம் காணப்படுகிறது.
  • கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படாவிட்டால், 2100-இல் கடல் அளவு 40 செ.மீ. முதல் 1 மீட்டர் வரை உயரும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
  • தொழில் புரட்சிக்குப் பிறகு மனித இனம் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர்தான் பூமிப்பந்தின் வெப்பமயமாதல் ஆரம்பித்தது. ஒருநாளும் மீட்டெடுக்க முடியாத பூமியின் ஜீவ சக்தியை அதனால் இழந்து கொண்டிருக்கிறோம்.
  • பூமியின் வெப்ப நிலை ஒன்றரை டிகிரி செல்ஷியஸ் அதிகரித்தால் 30 ஆண்டுகளில் வட துருவத்திலுள்ள பனி மலைகள் உருகிக் கரைந்துவிடும்.
  • கடல் நீர் கூடுதல் அமிலமயமாகும். கடல் நீரிலுள்ள பிராணவாயு அளவு குறையும். பல கடல்வாழ் உயிரினங்களும் இறந்துவிடும். இதுபோன்ற மீட்டெடுக்க முடியாத இழப்புகளை உலகம் எதிர்கொள்ளக்கூடும்.
  • பூமி வெப்பநிலை அதிகரிப்பை ஒன்றரை டிகிரி செல்ஷியஸýக்குக் கீழே நிலைநிறுத்த வேண்டும் என்கிற குறிக்கோளுடன், 2015-இல் கொண்டுவந்த பாரீஸ் தட்பவெப்ப நிலை உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
  • இதே நிலைமை தொடர்ந்தால், அறிக்கை கூறுவதுபோல அடுத்த 30 ஆண்டுகள்கூட நிலைமை கைமீறுவதற்குத் தேவைப்படாது.
  • நவம்பர் மாதம் ஸ்காட்லாண்டிலுள்ள கிளாஸ்கோவில் ஐ.நா. சபையின் தலைமையில் 26-ஆவது பருவநிலை மாநாடு நடக்க இருக்கிறது. பாரீஸ் பருவ நிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட தீர்மானங்களை கிளாஸ்கோவில் எடுத்தாக வேண்டும்.
  • வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைக் கடுமையாகக் குறைப்பதுடன், வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி புதிய தொழில்நுட்பங்களை வழங்கி, நிதி உதவியும் செய்து, பூமி வெப்பமயமாதலைத் தடுத்தாக வேண்டும்.
  • ஆய்வுகளும், பருவநிலை ஆராய்ச்சியும் அதன் அறிக்கைகளும் வெறும் கற்பனைகள் அல்ல, உண்மை நிலை.
  • ஐபிசிசி அறிக்கை அந்த உண்மைகளை வெளிச்சம் போட்டிருக்கிறது. அதனடிப்படையில் செயல்பட வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு.
  • உலக நாடுகளின் இன்றைய ஆட்சியாளர்களால்தான் பூமியைக் காப்பாற்ற முடியும். ஏனென்றால், அடுத்த பத்து ஆண்டுகளில் அவர்கள் செய்யப்போகிற அல்லது செய்யாமல் விடுகிற செயல்பாடுகளின் அடிப்படையில்தான் வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை அமையும்.
  • அதனால், அரசியல், பொருளாதார லாப - நஷ்ட கணக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பூமியைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற உன்னத நோக்கம் மட்டும் அவர்களிடம் காணப்பட வேண்டும்.

நன்றி: தினமணி  (18 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories