TNPSC Thervupettagam

பொது நூலகங்கள் புத்தொளி பெறட்டும்…

January 31 , 2022 827 days 478 0
  • பொது நூலகச் சட்டத்திலும் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக உயர் மட்டக் குழுவை அமைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
  • பொது நூலகச் சட்டம்-1948 இயற்றப்பட்டு 70 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்றைய நவீனத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் புதிய தேவைகளுக்கேற்பப் பொது நூலகங்களின் நடைமுறைகளைச் சீர்திருத்துவது மிகவும் அவசியமானது.
  • தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் உயர் மட்டக் குழு தன்னுடைய வரைவு அறிக்கையை மக்களுக்கு முன்வைத்து அவர்களது கருத்துகளையும் உள்ளடக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்டத் தலைநகரங்களை மையமாகக் கொண்டே பொது நூலகங்கள் இயங்கிவருகின்றன.
  • நகரங்களில் உள்ள கிளை நூலகங்கள் முழுநேரமும் இயங்குவதில்லை. கிராமப்புற நூலகங்களில் பெரும்பாலானவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.
  • இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் நிர்வகிப்பில் உள்ள கிராமப்புற நூலகங்களைப் படிப்படியாகக் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
  • வாய்ப்புள்ள குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம் பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடைப்பயிற்சிப் பாதைகள்போலவே உள்ளூர் அளவிலான நூலகங்கள் நிறுவப்பட வேண்டும்.
  • அனைத்து வகையான நூலகங்களிலும், நூலக அறிவியல் படித்தவர்களை நியமிப்பதோடு அவர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.
  • ஆனால், எஸ்.ஆர்.ரங்கநாதன் எழுதிய ‘நூலக அறிவியலின் ஐந்து விதிகள்’ உள்ளிட்ட அடிப்படை நூல்களே தமிழ் வடிவம் காணாத நிலைதான் இன்னும் தொடர்கிறது.
  • பொது நூலகத் துறையின் நிதியாதாரங்களை வலுப்படுத்துவதும் சட்டத் திருத்தங்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிகிறது. நூலகத் துறையின் முக்கியமான செலவினங்களில் ஒன்றான புத்தகக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டியது உடனடித் தேவை.
  • நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலின்போது அனைத்துத் துறைகளைச் சார்ந்த நூல்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
  • பொதுவாக, இலக்கியத்துக்குக் கொடுக்கப்படும் முதன்மைக் கவனம் அறிவியல் துறைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற பொதுக் கருத்து வாசகர்களிடம் நிலவுகிறது. வளர்ந்துவரும் புதிய சமூக அறிவியல் துறைகளுக்கும் சிறப்புக் கவனம் கொடுக்கப் பட வேண்டும்.
  • காகிதங்களின் விலையேற்றத்துக்கு ஏற்பப் புத்தகங்களின் கொள்முதல் விலையும் அவ்வப்போது உயர்த்தப்பட வேண்டும். புத்தகக் கொள்முதலை அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்களின் வழிகாட்டலோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நூலக ஆணை வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் தவிர்க்கப்பட்டதற்குமான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • எங்கும் எதிலும் சமூகத் தணிக்கை ஒரு லட்சியமாக முன்வைக்கப்பட்டுவரும் இந்நாட்களில் நூலகத் துறை மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
  • நூலகத் துறை தனித்தியங்க வேண்டிய துறை என்றாலும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்தே செயல்பட்டுவருகிறது.
  • உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுக் கல்லூரிகளிலும் மாநில அரசின் பல்கலைக் கழகங்களிலும்கூட நூல் கொள்முதலுக்குக் கண்டிப்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும்.
  • பொது நூலகங்கள் மட்டுமின்றி, அனைத்து நூலகங்களைக் குறித்தும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக அவை நடந்தேறட்டும்.

நன்றி: தி இந்து (31 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories