TNPSC Thervupettagam

போதும், இலவசத் திட்டங்கள்

January 25 , 2023 429 days 277 0
  • பல்லாண்டு காலமாக தேர்தல் சூழலிலேயே இந்தியா ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு 10 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும், அடுத்த 16 மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளன. தேர்தலின்போது இலவசங்களை வாரி வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு மிகவும் பொருத்தமான நேரம் இதுதான். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
  • இலவச அறிவிப்பு வாக்குறுதிகளை வெளியிட அரசியல் கட்சிகளை அனுமதிக்கலாமா? இந்த வாக்குறுதிகள் வாக்காளர்களைக் கவர்வதற்கான வெற்று உத்தியா? உண்மையான மக்கள்நலக் கண்ணோட்டதுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான உறுதிமொழிகளா? அரசுக் கருவூலத்தை பலவீனப்படுத்தி, மக்களின் வரிப்பணத்தை வீணாக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா?
  • இந்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற, மாநில அரசுகள் வாங்கும் கடன்களால் நமது எதிர்காலத் தலைமுறையினரின் தலையில் பெரும் கடன் சுமையை ஏற்றுவது பொருளாதாரச் சீரழிவுக்கு வழிவகுக்காதா? இந்த ஊதாரித்தனத்தால் நிதிப் பாதுகாப்பும் சீரான நிதிநிலை அறிக்கையும் என்ன ஆகும்? இவையெல்லாம்தான் இப்போது கேட்கப்பட வேண்டிய அடிப்படைக் கேள்விகள்.
  • அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் குறித்து தெளிவான, துல்லியமான வரையறை செய்யப்பட வேண்டியது அவசியம். இலவசங்களை வரையறுப்பதில் தற்போது ஒரு குழப்பம் இருக்கிறது. மக்கள்நலத் திட்டத்திற்கும், தேர்தலில் வெல்வதற்காக வழங்கப்படும் "இனிப்பு'களுக்கும் வித்தியாசம் தெளிவாகத் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் என்பவை, மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டவையாகவும், அவற்றின் பயனாளிகள் தீர்மானிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட'த்தை இதற்கு சரியான உதாரணமாகச் சொல்லலாம்.
  • இந்த வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகளாக அடையாளம் காணப்படுவோர் வருமானத்திற்கு வழியற்ற ஏழைகள். தவிர, ஊரகப்பகுதியில் வேலைவாய்ப்பும் வளர்ச்சியும் இந்தத் திட்டத்தின் நீண்டகால இலக்காக உள்ளன. இதன் மூலமாக ஊரகப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகிறது; ஊரகப்பகுதிகளில் வாழும் குடும்பங்களும் பயனடைகின்றன.
  • மாறாக, இலவச அறிவிப்புகள் குறுகியகால ஆதாயத்தை இலக்காகக் கொண்டுள்ளன. இலவச மின்சாரம், இலவசக் குடிநீர், பெருமளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் அபாயமான அறிவிப்புகளாகத் தொடர்கின்றன. இந்த இலவசங்களால் மாநிலத்தின் உற்பத்தியோ, உற்பத்தித் திறனோ பெருகுவதில்லை. மேலும், அரசின் பொறுப்பற்ற செலவினமும் கடன்சுமையும் தொடர்ந்து கூடுவது ஒரு விஷ வட்டமாகும்.
  • மாநிலங்களின் நிதிநிலை குறித்து ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஜூனில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இலவசங்களை வாரி வழங்குவதற்கு அரசுகள் தீவிர முன்னுரிமை அளிப்பது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மானியங்களுக்கான மாநில அரசுகளின் செலவினம் 2020-21-இல் 12.9 %-ஆகவும், 2021-22-இல் 11.2 %-ஆகவும் அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
  • அது மட்டுமல்ல, பஞ்சாப், கேரளம், ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியாணா, பிகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்ட செலவினத்தின் மதிப்பு, மாநில உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 2.7 % வரை உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
  • கடன்சுமையில் தள்ளாடும் மாநில அரசுகளும் இலவச கவர்ச்சி அரசியலைத் தவிர்ப்பதில்லை. பஞ்சாப் மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இலவசங்களின் மதிப்பு, அம்மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் 45.4 % ஆக உள்ளது. இதனால் உருவாகும் வருவாய் பற்றாக்குறை, கடன் அதிகரிப்பு ஆகியவற்றுடன், கடனுக்கான வட்டியும் கூடுதல் சுமையாகிறது. பஞ்சாப் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 21.3 % ஏற்கெனவே பெற்ற கடனுக்கான வட்டியைச் செலுத்தவே போய்விடுகிறது என்பது வியப்பளிக்கும் அபாயத் தகவல்.
  • மாநில உற்பத்திக்கும் நிதி பற்றாக்குறைக்கும் இடையிலான விகிதம் கேரளம் (4.1) மேற்கு வங்கம் (3.5), பஞ்சாப் (4.6), ராஜஸ்தான் (5.2), உத்தர பிரதேசம் (4.3), ஆந்திர பிரதேசம் (3.2), தமிழ்நாடு (3.8) ஆகிய மாநிலங்களில் 3 சதவீதத்துக்கும் மேல் இருப்பதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • 2020-21 நிதியாண்டுக்கான மொத்தக் கடன் - மாநில உற்பத்தி இவற்றுக்கு இடையிலான விகித அடிப்படையில், பஞ்சாப், ராஜஸ்தான், கேரளம், மேற்கு வங்கம், பிகார், ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் அதிகபட்ச கடன்சுமையால் தள்ளாடுகின்றன.
  • கடனுக்காக செலுத்திய வட்டிக்கும் வருவாய் வரவுக்கும் இடையிலான விகிதம், ஜார்க்கண்ட், பிகார் தவிர்த்து பிற மாநிலங்களில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. ரிசர்வ் வங்கி தனது எச்சரிக்கை ஆய்வறிக்கையில், பஞ்சாப், கேரளம், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளன என்று பட்டியலிட்டுள்ளது.
  • 2021-22 நிதியாண்டில், பொதுக்கடன் - மாநில உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையிலான விகிதத்தில், கேரளம் (37.1), மேற்கு வங்கம் (37.1), பஞ்சாப் (49.1), ராஜஸ்தான் (40.5), பிகார் (38.7), ஜார்க்கண்ட் (34.4), மத்திய பிரதேசம் (31.9), ஆந்திர பிரதேசம் (32.8) ஆகிய மாநிலங்கள் 30 %-ஐத் தாண்டிவிட்டன. மாநில அரசுகளின் 2020-21 நிதிநிலை குறித்த ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் இந்த ஆபத்தை சுட்டிக்காட்டி இருக்கின்றன.
  • அரசு செய்யும் செலவினம் நல்லதா என்பதே செலவினத்தின் தரத்தைத் தீர்மானிக்கும். இதனை அதிகப்படியான வருவாய் செலவினத்திற்கும் மூலதன செலவினத்திற்கும் இடையிலான விகிதமே காட்டிக் கொடுக்கும். பஞ்சாப் மாநிலத்தில் இந்த விகிதம் மிக அதிகமாக (16.6 %) உள்ளது. கேரளத்தில் இது 12.1 %-ஆக உள்ளது. மூலதன செலவினங்களே நீண்டகால நோக்கில் வளர்ச்சிக்கு வழிவகுப்பவை. அவையே, பொருளாதாரத்தின்மீது ஆக்கபூர்வமான தாக்கம் செலுத்தும். மறுபுறம், குறுகியகால நலத்திட்டங்களின் தாக்கம் ஓராண்டுக்கு மட்டுமே இருக்கும்.
  • "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புவது, மற்றொரு கடன் சுமையையும் பொருளாதாரப் பின்னடைவையும் உருவாக்கும் சர்ச்சைக்குரிய முடிவு' என்று பிரபல பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடன் சுமையில் திணறும் 10 மாநிலங்களில் ஓய்வூதியத்துக்காக செலவிடப்படும் தொகை மட்டுமே, மொத்த வருவாயில் (2017-18 முதல் 2021-22 வரையிலான ஆண்டுகளின் சராசரி) 12.4 % -ஆக உள்ளது.
  • மின்கட்டணத்துக்கு அளிக்கப்படும் சலுகைகளும் மாநில அரசுகளின் கடன் சுமையில் பெரும் பங்கு வகிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மின்விநியோக நிறுவனங்களைக் காக்க அரசு அளித்த நிதியுதவியால் மாநில அரசுகளின் நிதி ஆளுமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் மின்வாரியங்கள், மீளவே இயலாத சூழலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.
  • மாநில அரசுகளுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசின் நிதிநிலைமை பரவாயில்லை. 2022 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு ரூ. 12,03,748 கோடி வருவாய் ஈட்டியுள்ளது; ரூ. 18,23,597 கோடியை செலவிட்டுள்ளது. இந்த செலவினத்தில் ரூ. 4,36,682 கோடி இதுவரை பெற்ற கடனுக்கான வட்டியாக அளிக்கப்பட்டதாகும்.
  • தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்எஃப்ஏ) கீழ், கடந்த 2022 டிசம்பர் 24-இல் நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய விநியோகத் திட்டத்தால் மத்திய அரசின் நிதிநிலையில் பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் உள்ள 81.35 கோடி மக்கள் பயன் பெறுவார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 2 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோதுதான் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு செயல்வடிவம் பெற்றது. ஆனால், இலவசத்தைத் தவிர்த்து மானிய விலையில் உணவு தானியம் விநியோகிக்க அப்போதைய மத்திய அரசு முன்யோசனையுடன் முடிவெடுத்தது.
  • விவேகமான-ஆரோக்கியமான நிதிநிலை குறித்த விவாதங்கள் நமது அரசியல் அரங்கில் வெளிப்படையாக நிகழ்வதில்லை. அரசின் கொள்கை தொடர்பான அரசியல் சாசன வழிகாட்டு நெறிமுறைகள், குறிப்பாக 38, 39-ஆவது பிரிவுகள், மக்களின் மேம்பாட்டுக்காக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை அங்கீகரிக்கின்றன. ஆனால், அதனை தேர்தலில் வெல்வதற்கான கவர்ச்சி உத்தியாகக் கருதவில்லை.
  • மத்திய, மாநில அரசுகள் தங்கள் வருவாயை "பொதுநலனுக்காக' செலவிடுவதை அரசியல் சாசனத்தின் 282-ஆவது பிரிவு அனுமதிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழக்கில் இதுகுறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கப்போகும் உறுதியான தீர்ப்பே, கவர்ச்சிகரமான இலவசங்களுக்கும் மக்கள்நலத் திட்டங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும்.
  • அத்தீர்ப்பு, இலவச வாக்குறுதி அளிப்பதை தனது உரிமையாகக் கருதும் கட்சிகளுக்கு கடிவாளமாக அமையக் கூடும். இலவச வாக்குறுதிகளைத் தடை செய்வதாக அத்தீர்ப்பு அமைந்தாலும் நல்லதே.

நன்றி: தினமணி (25 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories