TNPSC Thervupettagam

மகளிர் சுய உதவிக் குழு கடன்களுக்குக் குறைவான வட்டி: வரவேற்கத்தக்க முடிவு

August 30 , 2021 979 days 1262 0
  • தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கும் ரூ. 3 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி வீதத்தை 12%-லிருந்து 7%ஆகக் குறைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரியது.
  • இந்த வட்டி வீதக் குறைப்பால், 3,63,881 குழுக்களைச் சேர்ந்த 43,39,780 பெண்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டாலும், அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுமே கூட்டுறவுக் கடன் நிறுவனங்களுடன் இணைக்கப்படவில்லை என்பதும் பெரும்பாலான குழுக்கள் தேசிய வங்கிகள், நிதி நிறுவனங்களுடன்தான் இணைந்துள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
  • அனைத்து சுய உதவிக் குழுக்களையும் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அரசு கூறினாலும் தற்போதுள்ள நிதிநிலையில் அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை.
  • நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், சுய உதவிக் குழுக்கள் குறித்துத் தனி அத்தியாயமே இடம்பெற்றிருந்தது.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றிருந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக சொன்னதன் பிறகே, அதிமுக ஆட்சியில் அவ்வாறு அறிவிக்கப்பட்டதாகக் கூறிய அந்த அறிக்கை, சுய உதவிக் குழுக்கள் பெற்றிருந்த கடன்கள் திமுக ஆட்சியில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியை அளித்திருந்தது.
  • நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கரோனா காலச் சிறப்புக் கடனாக ரூ.5,500 கோடி உட்பட ரூ.20,000 கோடி வரையில் சிறப்புக் கடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • சுய உதவிக் குழுக்களின் வாயிலாகப் பெண்களுக்கு வழங்கப்படும் நுண்கடன்களில் வாராக் கடன் விகிதம் மிகவும் குறைவு.
  • சுயதொழில்களுக்கான வாய்ப்புகளையும் இந்தக் கடன்கள் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
  • ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் இந்தக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பெண்கள் எதிர்கொண்ட துயரங்கள் ஏராளம்.
  • இயற்கைப் பேரிடர், பெருந்தொற்று போன்ற அசாதாரணச் சூழல்கள் ஏற்படும்போது கடன் தவணைகளைத் தள்ளிவைப்பதற்கான நெகிழ்வோடு நுண்கடன் விதிமுறைகளைத் திருத்தியமைக்க வேண்டியது அவசியம்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் சீர்திருத்தப்பட்டு, அவற்றை நிர்வகிக்கத் தனித் துறை ஆரம்பிக்கப் படும் என்று தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் புதிதாகத் தொடங்கப்படும் என்றொரு அறிவிப்பையும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
  • கரோனா காரணமாக வேலைவாய்ப்புகள் குறைந்து, வேலையிழப்புகள் அதிகரித்துவரும் இந்நாட்களில் பெண்களைப் போல இளைஞர்களுக்கும் சுய தொழில்களுக்கான நுண்கடன் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories