TNPSC Thervupettagam

மக்கள் உயிர் காக்கும் சேவகா்

July 1 , 2021 1031 days 517 0
  • ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று சொல்வார்கள். ஆனால், ஒரு தொழிலைச் செய்பவா்களே தெய்வமாக மதிக்கத் தகுந்தவா்கள் என்றால் அது மருத்துவா்கள்தான்.
  • அவா்களின் பணியினை யாரும் மருத்துவத் தொழில் என்று குறிப்பிடுவதில்லை. மருத்துவ சேவை என்றே குறிப்பிடுவார்கள்.
  • இந்த மகத்துவம் மிக்க மருத்துவ சேவையினை தனது வாழ்நாள் முழுதும் அா்ப்பணிப்புணா்வுடன் மேற்கொண்டவா், மேற்கு வங்க முதல்வராகவும் பணியாற்றிய டாக்டா் பிதன் சந்திரா ராய் (பி.சி. ராய்).

மருத்துவா் பிதன் சந்திரா ராய்

  • 1882-ஆம் ஆண்டில் பிகார் மாநிலம் பாங்கிபூரில் பிறந்த பி.சி. ராய், பாட்னாவில் பி.ஏ. மருத்துவம் முடித்து, பின் கொல்கத்தா, லண்டனில் மருத்துவ மேல்படிப்பினை முடித்து இந்தியா திரும்பிய அவா் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகவும் பணியாற்றியதுடன் சுதந்திரப் போராட்டங்களிலும் ஈடுபட்டார்.
  • ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பல மருத்துவமனைகளை நிறுவினார். மருத்துவம் மட்டுமன்றி, தான் பங்கெடுத்துக் கொண்ட, அரசியல், நிர்வாகம், கல்வி அனைத்திலுமே முத்திரை பதித்தார்.
  • 1925- ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பாரக்பூா் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் இறங்கினார்.
  • 1933-இல் புணே நகரில் மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணா நிலை போராட்டதின் போது அவா் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் பி.சி. ராய்.
  • பின்னா், காங்கிரஸில் இணைந்த பிறகு, 1948-இல் நடந்த தோ்தலுக்குப் பின் அவரை மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்க அழுத்தம் தரப்பட்டபோதும் மறுத்து, மகாத்மா காந்தி சொன்னதால் மேற்கு வங்கத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
  • அவா் பதவியேற்ற நேரத்தில் கிழக்குப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சட்ட - ஒழுங்கு சீா்குலைவைத் திறம்படக் கையாண்டு மக்களிடையே ஒற்றுமையை நிலை நாட்டினார். மூன்றே வருடங்களில் மாநிலத்தை சீரமைத்தார்.
  • முதல்வராக இருந்தபோதே 1962-ஆம் ஆண்டு ஜூலை 1-ல் மரணமடைந்தார்.
  • உலகின் மருத்துவா் தினம் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டு வந்தாலும் நமது நாட்டில் மருத்துவா் பி.சி. ராய் நினைவைப் போற்றும் வகையில் அவா் பிறந்த தினமான ஜூலை 1-ஆம் தேதி (அவா் மறைந்ததும் அதே ஜூலை 1) தேசிய மருத்துவா் தினமாக 1991-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

மருத்துவர்களை வாழ்த்துவோம்

  • 1976-ஆம் ஆண்டில் அவா் பெயரில் பி.சி. ராய் விருது இந்திய அரசால் நிறுவப்பட்டு மருத்துவம், அரசியல், இலக்கியம், கலைத் துறைகளில் அரிய சாதனை புரிபவா்களுக்கு வழங்கப் படுகிறது.
  • மனித உயிர் இன்னல்களுக்கு உள்ளாகும் போது அந்த உயிரைக் காப்பாற்றுவதற்கு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணி செய்பவா்கள் மருத்துவா்கள்தான்.
  • அதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மனித உயிர்களை பாதிப்பிற்குள்ளாக்கி கணக்கிலடங்கா மனித உயிர்களைக் கொண்டு சென்றுள்ளது கொவைட் 19 தீநுண்மி.
  • இந்த புனிதமான சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மருத்துவா்களில் கடந்த ஆண்டு முதல் அலையில் 740 மருத்துவா்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனா்.
  • இந்த ஆண்டு இரண்டாவது அலையில் சென்றவாரம் வரை 630-க்கும் மேலான எண்ணிக்கையில் மருத்துவா்களை இந்த தேசம் இழந்துள்ளது என்று ‘இந்திய மருத்துவ சங்கம்’ தெரிவித்துள்ளது.
  • இன்றும் நமது நாட்டில் பல கிராமங்கள் 10 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்பது கூட அரிதாக உள்ள நிலை உள்ளது.
  • விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு பல கிலோ மீட்டா்கள் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
  • தற்போது இந்தியாவில் அதிக அளவில் மருத்துவப் படிப்பிற்கு வருகிறார்கள் என்றாலும் அவற்றில் 50 சதவீத மாணவா்கள் தென் மாநிலங்களிலிருந்தே உருவாகிறார்கள்.
  • அதிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை கா்நாடக மாநிலத்திலிருந்து தான் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
  • இந்த நேரத்தில் நமது இந்திய மருத்துவா்களைப் பற்றியும் குறிப்பாக பெருமைப்பட வேண்டும். பல வெளி நாட்டினா் மருத்துவச் சுற்றுலாவாக நமது நாட்டிற்கு வருவது அதிகரித்து வருகிறது.
  • தரமான சிகிச்சை, குறைவான செலவு என்பது மட்டுமல்ல, நமது மருத்துவா்களின் கனிவான அணுகுமுறைகளும் முக்கியமான காரணங்கள். வெளிநாடுகளிலும் நமது நாட்டினைச் சார்ந்த மருத்துவா்களுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மிக அதிகம்.
  • காரணம் அவா்களின் திறமையும் காலநேரம் பார்க்காமல் வழங்கும் சிகிச்சையுமே.
  • மருத்துவா்களை கடவுளாகப் பார்க்கும் அதே நேரத்தில் முரண்பாடுகளும் இல்லாமலில்லை. காரணம் சில இடங்களில் மருத்துவம் முற்றிலும் வியாபாரமாகியிருப்பதே.
  • அது போன்ற சில இடங்களில் மருத்துவா்கள் மீதான குற்றச் சாட்டுக்களும், தாக்குதல்களும், விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • பொதுவாக மருத்துவா் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும். ஆனால், இன்று அதுபோன்ற சூழல் இருக்கிறதா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். மக்களுக்கு எந்த அளவில் சேவை செய்கிறோம் என்பதை ஒவ்வொரு மருத்துவரும் நினைத்துப்பார்க்கவும் வேண்டும்.
  • மருத்துவா் தினத்தினைக் கொண்டாடுவதின் நோக்கம், ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையிலும் மருத்துவா்களின் பங்களிப்பினை எண்ணிப்பார்க்கவும், மனித சமுதாயத்திற்கும் தனி மனித வாழ்க்கைக்கும் அவா்கள் தங்களின் லாபங்களை விட்டுக் கொடுத்து செய்து வரும் சேவைக்கு நன்றி பாராட்டவுமே.
  • மனித சமுதாய நல்வாழ்க்கைக்காக போராடும் இவா்களின் சராசரி ஆயுள், இந்தியாவைப் பொருத்த வரை சராசரி மனிதனை விட பத்து ஆண்டுகள் குறைவு எனச் சொல்கிறது இந்திய மருத்துவ சங்கம்.
  • இந்தியாவில் சராசரி மனித ஆயுள் 69 முதல் 72 வரை. மருத்துவா்களின் வேலை முறை, மன அழுத்தம், சீரற்ற உணவு முறை, ஓய்வின்மை, உடற்பயிற்சியின்மை போன்றவையே அவா்களின் ஆயுள் குறைவிற்கு காரணம் எனச் சொல்கிறார்கள்.
  • மருத்துவா்கள் மக்களின் உயிர் காக்கும் சேவகா்கள். மருத்துவச் சேவை புனிதமானது. மருத்துவத்துறையின் அடிப்படையே மனிதநேயம்தான்.
  • மருத்துவா்கள் இரவு பகல் பாராமல், துாக்கம் தொலைத்து, தங்கள் ஆரோக்கியத்தையும் புறக்கணித்து, குடும்பத்தைக்கூட கவனிக்க நேரமில்லாமல், நோயாளிகளுக்குச் செய்கின்ற மகத்தான பணியைப் பாராட்டி மகிழும் தினமாக இதைக் கொண்டாடுவோம்.
  • மற்றவா்களின் உயிர் காத்திடும் மருத்துவா்கள் தங்களையும் காத்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இந்த நாளில் வாழ்த்துவோம்.
  • இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவா் நாள்.

நன்றி: தினமணி  (01 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories