TNPSC Thervupettagam

மங்கிவரும் மக்களாட்சி

February 28 , 2022 811 days 417 0
  • உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருத்து முன் வைக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
  • இந்த விவாதங்களை முன்னெடுப்பவர்கள் உலக அளவில் தலைசிறந்த மக்களாட்சி குறித்த ஆராய்ச்சி அறிஞர்கள்.
  • இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் வரும்போதெல்லாம் இந்தியாவின் நிலை என்ன என்று தரவுகளைப் பார்க்க வேண்டியது அவசியம்.
  • இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்த பெருமளவு நிதி ஆதாரம் தேவை. சிறிய நிறுவனங்களோ, பல்கலைக்கழகங்களோ இவற்றைச் செய்ய இயலாது. இதற்கான நிதி உதவியை அரசும் வழங்கிடாது.
  • இருந்தும் மக்களாட்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிதி நிறுவனங்கள் தரும் நிதியில் தொடர்ந்து ஆய்வுகள் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றன.
  • இந்த ஆய்வுகள் தரும் தரவுகளிலிருந்து ஒரு நாட்டில் எப்படிப்பட்ட மக்களாட்சி செயல்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
  • எப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வு நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பல ஆய்வாளர்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்து அலசி ஆராய்ந்து மக்களாட்சியின் போக்கினை அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் விவரிப்பார்கள்.
  • அந்த விளக்கங்கள் நாம் மக்களாட்சி அமைப்புகளை சரிசெய்து கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும்.

நேரம் வந்துவிட்டது

  • தற்போது உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அதிக அளவில் குற்றப் பின்னணியுடையவர்களே வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பது தான் அக்கருத்து.
  • இந்தப் போக்கைத்தான் அறிவுஜீவிகள், மக்களாட்சியின் வீழ்ச்சி என்றும், மக்களாட்சியை தகர்க்கும் பணியை நம் அரசியல் கட்சிகளே செய்கின்றன என்றும் கூறுகின்றனர்.
  • ஏனென்றால் மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்களாட்சியை வலுப்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அரசியல் கட்சிகளிடம்தான் உள்ளது.
  • ஒரு நாட்டில் மக்களாட்சி வலுப்படுவது தேர்தல் நடத்துவதால் மட்டுமல்ல. பொதுமக்களின் நம்பிக்கையை அரசு எந்திரங்களும் அரசியல் அமைப்புக்களும் பெற்றிருக்கும்போது மட்டும்தான்.
  • இந்தப் புரிதலுடன் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். மக்களாட்சிமுறை வளர்ந்து, இன்று தேர்தலும், கட்சி அரசியலும் பிரதான இடத்தை அடைந்துள்ளன.
  • இந்த முறைகளில் உள்ள சிக்கல்களுக்கான தீர்வினை நோக்கி நம் அரசியல் நகராத நிலையில், மக்கள் நம்பிக்கையை அரசு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
  • எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை அரசு எந்திரமும், அரசியல் கட்சிகளும் பெற்றிருக்கின்றனவோ அந்த அளவுக்கு மக்களாட்சி அந்த நாட்டில் வலுப்பெற்று இருப்பதாக நாம் கணிக்க முடியும்.
  • மக்களின் நம்பிக்கையை அரசு எந்திரம் எந்த அளவுக்குப் பெற்றுள்ளது என்பதை அறிய கள ஆய்வு நடத்தப்படுவது உண்டு.
  • மேற்கத்திய நாடுகளில் அது மிக எளிது. ஏனென்றால் அங்கெல்லாம மக்கள்தொகை குறைவு; எல்லைப் பரப்பும் சிறிது. ஆனால் இந்தியாவில் ஆய்வு நடத்துவது என்பது சவால் நிறைந்த பணி.
  • இருந்தும் இந்தியாவிலும் பெருமளவு நிதியினை செலவு செய்து அப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையை தெரிவித்து வருகின்றன ஆராய்ச்சி நிறுவனங்கள்.
  • இந்த நிறுவனங்கள்தான், இந்திய மக்களாட்சி எப்படிச் செயல்படுகிறது, எந்த அடித்தளத்தில் செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளி உலகுக்குக் காட்டுகின்றன.
  • இந்த மக்கள் கருத்தறியும் கள ஆய்வுகள் இந்தியாவில் நான்கு முறை நடைபெற்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • முதல் சுற்று ஆய்வினை புது தில்லியில் உள்ள சி.எஸ்.டி.எஸ். என்ற நிறுவனம் 1971 மற்றும் 1996 ஆண்டுகளில் நடத்தின.
  • இந்த இரண்டு ஆய்வுக்கும் இடைவெளி 25 வருடங்கள். அடுத்த சுற்று கள ஆய்வினை என்.சி.இ.ஏ.ஆர். என்ற நிறுவனம் 2005 மற்றும் 2012 ஆண்டுகளில் நடத்தின. இந்த இரண்டு ஆய்வுக்கும் இடைவெளி 7 ஆண்டுகள்தான்.
  • இந்த நான்கு முறை நடந்த கள ஆய்வு சொல்லும் செய்தியை கூர்ந்து கவனித்தால் மக்களாட்சியில் நாம் எங்குள்ளோம் என்பது நமக்குத் தெரிந்துவிடும்.
  • 1971-இல் 48% மக்கள்தான் தங்களால் அரசியலை மாற்ற முடியும் என்று கூறினார்கள். ஆனால் 1996-இல் 60% மக்கள் தங்கள் வாக்குகளால் ஆட்சியை மாற்றிடமுடியும் என்று கூறினார்கள்.
  • அதேபோல் 60% மக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.
  • 61% மக்கள் அரசியல் கட்சிகள் மிக முக்கியமான பங்களிப்பை மக்களாட்சியில் செய்கின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
  • இதில் மிக முக்கியமான செய்தி, இந்த 61 சதவிகிதத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழைகள். ஏழைகளுக்குத்தான் இந்த மக்களாட்சியில் அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
  • இந்தக் கருத்துகள் மக்களாட்சிக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தன. அதே நேரத்தில் 63% மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏழைகளின் பிரச்னைகளில் ஆழ்ந்து செயல் படுவதில்லை என கருத்தினை முன்வைத்தனர்.
  • 22% மக்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் முறையாகச் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தனர். மக்களின் இந்தக் கருத்துகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.
  • 1971-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி 27% மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • அந்த எண்ணிக்கை 27% லிருந்து குறைந்து 1996 ஆம் ஆண்டு 23% வந்ததுதான் அதிர்ச்சித் தகவல். 57% மக்கள் காவல்துறையின்மீது நம்பிக்கை இல்லையென கருத்துத் தெரிவித்துள்ளனர்.
  • அடுத்து 42% மக்கள் அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லையென கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 75% மக்கள், நிதித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் நம்புவதாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். 73% மக்கள் நாட்டுக்கு ஒரு வலுவான தலைவர் தேவை எனக் கூறியுள்ளனர்.
  • 2005 மற்றும் 2012-இல் நடத்தப்பட்ட ஆய்வுகள் தரும் செய்திகள், இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து உச்சம் தொட்டபோதும் மக்களின் நம்பிக்கையை அரசு எந்திரங்கள் இழந்து விட்டதைக் காட்டுகின்றன.
  • ஏழை மக்களின் நம்பிக்கை குறைவதற்குக் காரணம், அரசால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் மேம்பாட்டை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான்.
  • அதே நேரத்தில் அரசாங்கத்தால் பலன் பெற்றவர்கள் அரசு எந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது.
  • அரசு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றவர்களிடம் காரணம் கேட்டபோது, அவர்கள், இன்றைய அரசியலில் எந்த கொள்கையும் கிடையாது; எங்கும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது; பணக்காரர்களுடன் அரசியல் கட்சிகள் உறவாடி அவர்களுக்கு சாதகமாகச் செயல்படுகின்றன; குற்றவாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக்க கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டனர் என்று கூறியுள்ளனர்.
  • 2005-ஆம் ஆண்டு அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் 2012-ஆம் ஆண்டு அந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.
  • யார் யாரெல்லாம் அரசியல்வாதிகளால் மேல் வருமானம் பெற்றார்களோ அவர்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
  • படித்த மத்தியதர வர்க்கத்தினர் அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கை இழந்துள்ளனர். 2004-இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 24% பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
  • 2009-இல் அது வளர்ந்து 30% ஆனது. 2014-இல் அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 34% ஆனது.
  • 2019-ஆம் ஆண்டு அது 43 சதவிகிதமாக மாறி உச்சத்தைத் தொட்டது. கொடிய குற்றங்கள் செய்வோர் பாதுகாப்பு தேடி அரசியலுக்கு வந்து, அரசியலையே குற்றப்பின்னணி கொண்டதாக மாற்றி இருக்கிறார்கள் என்பதைத்தான் மக்கள் கருத்துகள் பிரதிபலிக்கின்றன.
  • தேர்தலில் வெற்றி பெற்ற 29% மக்கள் பிரதிநிதிகள் கொடிய குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதை மக்களாட்சிக்கான சீர்திருத்த அமைப்புக்களை நடத்துபவர்கள் குறிப்பிட்டு, அரசியல் கட்சிகளை எச்சரித்திருக்கின்றனர்.
  • தேர்தல் நடக்கலாம், வெற்றி பெறலாம், ஆட்சி அமைக்கலாம். ஆனால், அரசு இயந்திரத்தின் மீதும், அரசியல் அமைப்புகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துகொண்டே உள்ளனர் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் செயல்படுவோமேயானால் மோசமான விளைவுகளை நம் எதிர்கால சந்ததியினர் சந்திக்க வேண்டியிருக்கும்.
  • குற்றப்பின்னணி கொண்டவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் வைத்து அரசியல் நடத்தும்போது அரசு எந்திரம் மக்கள் நம்பிக்கையை இழப்பது மட்டுமல்ல, மக்களாட்சியே தாழ்நிலைக்குச் சென்றுவிடும் என்பதுதான் நாம் பார்க்கும் இன்றைய மக்களாட்சியின் எதார்த்த நிலை.
  • இந்த மங்கிய சூழலில்தான் நம் மக்களாட்சி நடைபெற்று வருகிறது என்பதை இந்த ஆய்வுத் தரவுகள் கொண்டு வந்து தந்துள்ளன.
  • இதனைப் புரிந்து நம் அரசியல் கட்சிகளும் அரசு எந்திரமும் செயல்பட வேண்டும். இல்லையேல் நம் மக்களாட்சி நீர்த்துப் போய்விடும் என்பதை புரிந்து நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். அதற்கான விவாதம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; அதுதான் இன்றைய தேவையும்கூட.

நன்றி: தி இந்து (28 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories