TNPSC Thervupettagam

மது போதையை இன்றே நிறுத்துஙகள்

June 10 , 2023 321 days 923 0
  • முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘இவர் காபிகூடக் குடிக்க மாட்டார்’ என்று சிலரைப் பெருமையாக அறிமுகப் படுத்துவார்கள். ஆனால், இன்று ‘இவர் சரக்கெல்லாம் அடிக்க மாட்டாராம்’ என்று மது அருந்தாத நபரை ஏளனமாக அறிமுகப்படுத்தும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். குடிப்பழக்கம் சமூக நோயாக மலிந்துவிட்டது என்பதால், மதுவைப் போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்கிவிட முடியாது. மது அடிமைத்தனத்துக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதே முதல் முக்கியக் காரணம். மதுவுக்கு அடிமையானவர்கள் போதையின் புதிய பரிமாணங்களைத் தேடுவதற்காகக் கலப்பட மது வகைகளை நாடுவதும் தொடர்கிறது.
  • கடந்த பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டால் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மதுவுக்கு அடிமையாவதும், சில ஆண்டுகள் தொடர்ந்து அருந்துபவர்கள் அதிகமாக உடல், மனநலப் பாதிப்புக்குள்ளாவதும் கணிசமாக உயர்ந் துள்ளது. மதுபோதையின் தீவிரம் தொற்று, தொற்றா நோய்களைவிடப் பெரும் பரவலாக உரு வெடுத்துவருகிறது. மது ஒரு போதைப்பொருள் என்பதைத் தாண்டி உயிர்க்கொல்லி என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்:

  • அவ்வப்போது குடிக்க ஆரம்பிக்கும் நபர்களே சில ஆண்டுகளுக்குள் தீவிரக் குடிநோயாளிகளாக மாறுகிறார்கள். யாரும் எடுத்த எடுப்பில் தீவிர அடிமைத் தனத்துக்கு உள்ளாவதில்லை. ‘இவர் எப்போதாவதுதானே குடிக்கிறார்’ என்று அலட்சியப்படுத்துவதோ அல்லது அங்கீகரிப்பதோ ஆபத்தானது. ‘பெரும் பாலானோர் மது அருந்தத்தானே செய்கிறார்கள்’ என்று தங்களது செயலை நியாயப்படுத்திக்கொள்பவர்கள் சில ஆண்டுகளுக்குள் மது அருந்துவதற் கென்றே பல சாக்குப்போக்குகளைச் சொல்லி அதைத் தொடரவே முயல்வார்கள். இதுவும் மதுவுக்கு அடிமையாகிவிட்டதற்கான ஓர் அறிகுறியே.

யார் அடிமை?

  • மதுவுக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் அடிமையாகி விட்டதை ஏற்றுக் கொள்வதில்லை. உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் குடும்ப சந்தோஷத்துக்கும் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் நாளுக்கு நாள் மதுவின் அளவு, குடிக்கும் நேரம் ஆகியவற்றை ஒருநபர் அதிகரித்தால் அவர் ஆரம்பகட்ட அடிமைத்தனத்தில் இருக்கிறார் என்றே அர்த்தம்.
  • காலையில் குடிக்க ஆரம்பித்துவிடுவது, குடிப்பதற்காக வேலையைப் புறக்கணிப்பது, குடித்தால்தான் தூக்கம் வரும், கைநடுக்கம் இல்லாமல் வேலைசெய்ய முடியும் என்கிற நிலை தீவிர அடிமைத்தனத்தின் அறிகுறி. மது போதைக்கு அடிமையாக மாறிக்கொண்டிருக் கிறோம் என்பதை ஒருவர் முழுமனதோடு ஒப்புக்கொள்வதே மாற்றத்திற்கான முதல்படி. சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய தடுமாற்றங்களையும் அது தவிர்க்கும்.

திடீரென நிறுத்தலாமா?

  • “நீங்கள் ஏன் மதுப்பழக்கத்தை நிறுத்திக் கொள்ள முன்வரவில்லை?” என்று ஒருவரிடம் கேட்டால், “திடீரென மது அருந்துவதை நிறுத்தினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள்” என்கிற பதில் வரும். இப்படிச் சொல்லிக்கொண்டு குடிப்பழக்கத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற பதில்கள், தாங்கள் மது அருந்துவதை நியாயப்படுத்தும் முயற்சி மட்டுமே. நிச்சயம் உயிர் மீது உள்ள பயம் கிடையாது.
  • அடிமைத்தனத்துக்கு ஆளாகி இருக்கும் ஒருவரால் நிச்சயமாக மதுவின் அளவைப் படிப்படியாகக் குறைத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், வழக்கமான அளவுக்குக் குறைத்தாலே தூக்கமின்மை, நடுக்கம், பதற்றம் போன்றவை ஏற்படும். மீண்டும் மதுவை அதிகம் அருந்தினால் மட்டுமே இவை குறையும். இந்த நிலையில், பழைய அளவுக்கே குடியைத் தொடர்வதற்கான சாத்தியங்களே அதிகம். ஒரே நாளில் முற்றிலுமாகக் குடியை நிறுத்துவது மட்டுமே அதிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழி.

யாருக்குச் சிகிச்சை தேவை?

  • வாரத்துக்கு ஓரிரு நாள் மட்டுமே மது அருந்துபவர்கள் திடீரென நிறுத்துவது எளிது. இவர்களுக்கு மீண்டும் மது அருந்த வேண்டும் என்கிற சபலத்தைத் தவிர்ப்பது குறித்த மனநல ஆலோசனைகள் மட்டுமே போதுமானது.
  • மிதமான, தீவிரமான மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, தினமும் கிடைத்த ஒரு போதைப்பொருள் திடீரென்று கிடைக்காததால் மூளை நரம்புகள் விறைத்துக்கொண்டு நிற்கும். இதனால் பெரும்பாலும் நடுக்கம், தூக்கமின்மை, எரிச்சல், பதற்ற உணர்வு மட்டும் ஏற்படும்.
  • அரிதாகச் சிலருக்கு மனக்குழப்பம், அதீத பயம், காதில் மாயக்குரல்கள் கேட்பது, கண்களில் மாய உருவங்கள் தெரிவது போன்ற அறிகுறிகளை உடைய ‘வித்ட்ராயல் டெலிரியம்’ (Withdrawal Delirium) எனும் பிரச்சினை உருவாகலாம். சிலருக்கு வலிப்பு அறிகுறிகளும் ஏற்படும்.
  • குடிப்பழக்கத்தை நிறுத்த முடிவுசெய்யும் ஒவ்வொரு நபரும் மனநல மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மதுவின் நச்சு நீக்கும் சிகிச்சை (Detoxification) எடுத்துக்கொண்டால் மேற்குறிப்பிட்ட எந்தப் பாதிப்புகளும் ஏற்படாமல் மதுவின் தாக்கத்திலிருந்து வெளிவர முடியும். திடீரென குடிப்பழக்கத்தை நிறுத்துவதால் உயிருக்கு ஆபத்து என்பது குடிப்பவர்கள் மத்தியில் உலவும் மூடநம்பிக்கையே.

மருந்துகளின் பங்கு என்ன?

  • குடியை நிறுத்துபவர்கள் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் இயல்புநிலைக்குத் திரும்புவதில் மாத்திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சராசரியாக முதல் ஐந்து நாள் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், அதிகம் குடித்ததால் ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்புகள், வைட்டமின் சத்துக் குறைபாடுகளைச் சரிசெய்யும் நோக்கில் சிகிச்சைகள் வழங்கப்படும்.
  • அதன் பின் மீண்டும் சமுதாயத்துக்குள் செல்லும்போது ஏற்படும் மது மீதான சபலங்களைத் தவிர்க்கும் வழிமுறைகள், வாழ்க்கை முறையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் குறித்த ஆலோசனைகள் போன்றவை வழங்கப்படும். தேவைப்பட்டால் மதுவின் மீதான அடக்க முடியாத ஆசையைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை (Anticraving drugs) மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
  • ஒவ்வாமை ஏற்படுத்தும் மருந்து: புத்தி சொல்லி ஏற்படுத்த முடியாத மாற்றத்தைப் பயத்தின் மூலம் ஏற்படுத்தலாம் என்கிற அடிப்படையில் கொடுக்கப்படுவதுதான் டைசல்பிரம் தெரபி (Disulfiram). இந்த மாத்திரையைப் பரிந்துரை செய்வதற்கு முன் இதன் சாதக பாதகங்கள் நோயாளிகளுக்கும் உறவினர்களுக்கும் விளக்கப்படும். எழுத்துப்பூர்வமான அனுமதியும் பெறப்படும். இந்த மாத்திரையால் பாதிப்பு இல்லை என்றாலும், அந்த நபர் மது அருந்தினால் ‘மது-டைசல்பிரம் ஒவ்வாமை’ ஏற்பட்டு வாந்தி, தலைச்சுற்று, மரணபயம் உள்பட மதுவின் வாடைக்குக்கூடக் குமட்டல், வெறுப்பு ஏற்படும்.
  • இந்தச் சிகிச்சையின் நோக்கம் இப்படி ஓர் ஒவ்வாமையை உருவாக்குவது அல்ல. மாத்திரையை எடுக்கும் காலத்தில் மது அருந்தினால் இதுபோன்ற ஒவ்வாமை ஏற்பட்டுவிடும் என்கிற பய உணர்வையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்குவதே இதன் நோக்கம். இந்தச் சிகிச்சையை நோயாளியின் சம்மதத்தின்பேரில், மனநல மருத்துவரின் கண்காணிப்பில் ஆரம்பிப்பது நல்லது.

என்ன செய்ய வேண்டும்?

  • எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பது தேவையற்ற சபலங்களைத் தூண்டும்.
  • குடிப்பதைத் தூண்டிய சூழ்நிலைகள், மனநிலைகளில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக பார்ட்டி, விழாக்களுக்குக் குடும்ப நபர்களுடன் சேர்ந்து செல்லுதல், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு இருப்பதைத் தவிர்ப்பது போன்றவை பலன் கொடுக்கும்.
  • நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலோ அல் லது ‘நீ குடிக்க வேண்டாம், சும்மா பக்கத்தில் இரு’ என்று சொன்னாலோ, அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பது விஷப்பரீட்சையே.
  • குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிக அவசியம். சிலருக்கு அவ்வப்போது தோல்விகள் ஏற்படும் என்பதையும், விடாமுயற்சியும் தொடர் சிகிச்சையும் மிக அவசியம் என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும்.
  • முடிந்தால் ஓர் உண்டியல் வாங்கி, முன்பு தினமும் குடிப்பதற்குச் செலவு செய்த தொகையை அதில் போட்டு, சில மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் குடிப்பதற்காக எவ்வளவு பணத்தை வீணடித்திருக்கிறோம் என்பது புரியும். இது மனரீதியாக நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
  • சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் அவசியம். தேவைப் பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் தூங்குவதற்குச் சில நாள்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • ‘இன்றைக்கு ஒரு நாள் மட்டும்தானே குடிக்கிறோம்’ என்று சலனப் பட்டால், இறுதியில் பழைய நிலைமைக்குச் சீக்கிரமே திரும்பும் நிலை ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories