TNPSC Thervupettagam

மதுவிலக்கு எனும் நிறைவேறாக் கனவு!

July 1 , 2021 1032 days 545 0
  • தமிழ்நாடு அரசு கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக அறிவித்திருந்த ஊரடங்கைத் தளா்த்தி மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.
  • தமிழக அரசும் ஊரடங்கில் சில தளா்வுகளை அளித்ததால் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சில கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
  • அதன்படி கடந்த 2021 ஜூன் 14 முதல் மதுக்கடைகளும் (டாஸ்மாக்) திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோர் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.
  • இதனால் முதல் நாள் ரூ.164.87 கோடிக்கும், மறுநாள் ரூ.130 கோடிக்குமாக இரண்டு நாட்களில் ரூ.294 கோடியே 87 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
  • இந்நிலையில் மூன்றாம் நாளும் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப் பட்டது.
  • நோய்த்தொற்று அதிகமாகக் காணப்பட்ட 11 மாவட்டங்களில் கடைகள் திறக்கப் படாததால், அருகிலுள்ள மாவட்டங்களின் எல்லை தாண்டியுள்ள கடைகளுக்குச் செல்லத் தொடங்கினா். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இவா்கள் அடங்கவில்லை.
  • கொடிய நோய்த்தொற்று காலத்தில்கூட குடிமக்கள் அடங்கவில்லை. மதுபாட்டில்களை வாங்கி வைத்து பூஜைப் பொருள்களைப் போல கொண்டாடுகின்றனா்.
  • சில இடங்களில் பட்டாசுகள் கொளுத்தி ஆட்டம் போடுகின்றனா். கடைதிறந்த மகிழ்ச்சி மடை திறந்த வெள்ளமாகப் பாய்கிறது. எதிர்க்கட்சியினா் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனா்.
  • நாடெங்கும் மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டம் திரண்டு எழுவதும், பின்னா் அடங்கிப் போவதும் வழக்கமாகி விட்டது.
  • இதற்கு யாரைக் குறை கூறுவது? இதற்குச் சரியான வழிகாட்டிகள் அமையவில்லை. வழிகாட்டும் திசைகாட்டிகளே தவறான வழிகளைக் காட்டினால் பயணிகள் என்ன செய்ய முடியும்?

மது என்னும் அரக்கன்

  • தீமைக்கு எதிரான எழுச்சிகள் எப்போதும் உடனடியாக வெற்றி பெறுவது இல்லை.
  • அதனால் என்ன? வெற்றிக்கான காலம் இன்னும் கனியவில்லை. கனியும் வரை காத்திருக்கலாம். அல்லது அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று ஆா்த்து எழலாம்.
  • வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் அருகே அமைக்கப்பட்ட கடைகளை மாணவா், பெண்டிர் உள்ளிட்ட பொதுமக்கள் அடித்து நொறுக்குகின்றனா். அவற்றை அகற்றும் படி போராடுகிறவா்கள் வன்முறையாளா்களாக சித்திரிக்கப்படுகின்றனா்.
  • இந்த மது என்னும் அரக்கனை ஒழித்துக் கட்ட வேண்டிய அரசாங்கமே போராடும் மக்கள் மீது அடக்கு முறைகளை அவிழ்த்து விடுகிறது. வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கத் துடிக்கிறது.
  • குடி என்பது பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று கூறுகின்றனா். குடி நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்குக் கேடு என்று மது பாட்டிலிலேயே எழுதி வைக்கப்படுகிறது. அதைப் படித்துக் கொண்டே குடிக்க வேண்டும் என்று அரசு கூறாமல் கூறுகிறதோ?
  • இங்கு மது என்பது அயல்நாட்டு மதுவகைகளை மட்டுமே குறிக்கிறது. அதிக ஆல்கஹால் உள்ள அயல்நாட்டு மதுவகைகளை அனுமதிக்கும் தமிழக அரசு, உள்நாட்டு மதுவாகிய கள்ளை அனுமதிக்க மறுக்கிறது. இதுபற்றி விவசாயிகள் பலமுறை போராடி அலுத்துப் போய் விட்டனா்.

அரசு மீது குற்றச்சாட்டு

  • இதில் இருக்கும் சூழ்ச்சி என்ன? அண்டை மாநிலங்களில் எல்லாம் கள்ளுக்கடைகளும் இருக்கும் போது இங்கு மட்டும் அது தடை செய்யப்படுவது ஏன்?
  • நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டா் தொலைவிற்குள் செயல்படும் அனைத்து மதுக்கடைகளையும், மதுபானக் கூடங்களையும் மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 2,800 மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
  • இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய இடங்களில் மதுபானக் கடைகளைத் திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
  • மதுரை, சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூா் மாவட்டங்களில் புதிய இடங்களில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிராக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
  • அப்போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினா். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், அந்தக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்றும், மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சிப்பது ஏன் என்றும் கேட்டனா்.
  • ‘மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்தால் எங்குதான் கடையைத் திறப்பது? ஊருக்குள் கடை திறக்கப்படாவிட்டால் காட்டில்தான் திறக்க வேண்டும்’ என்று டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞா் வாதிட்ட கதைகளை மறக்க முடியுமா?
  • அந்த வாதத்தை ஏற்க மறுத்து நீதிபதிகள் புதிய இடங்களில் கடை திறப்பதில் தற்போதைய நிலை நீடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனா்.
  • இந்நிலையில் அகற்றப்பட்ட அந்தக் கடைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதற்கும், விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
  • சில இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட கடைகள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன.
  • இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருமானத்தைப் பெரிதும் நம்பியுள்ள அரசு, மூடப்பட்ட மதுபானக் கடைகளை மறுபடியும் திறக்க வசதியாக சில ஏற்பாடுகளைச் செய்தது.
  • தமிழகம் முழுவதும் உள்ள மாநில நெடுஞ்சாலைகளையும், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளையும் அந்தந்த உள்ளாட்சி சாலைகளாக மாற்ற முயல்வதாக அப்போது தமிழக அரசு மீது குற்றச்சாட்டும் எழுந்தது.

மக்கள் எழுச்சி வேண்டும்

  • இவ்வாறு மதுக்கடைகளைத் திறப்பதற்கு உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவது சட்டவிரோதமானது, மேலும் உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும்.
  • இது தொடா்பான மனுக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்ட்டன. அவசர வழக்காகவும் விசாரிக்கப்பட்டன.
  • இவ்வளவும் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தன. இறுதிவரை விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருந்த அவா்கள்தான் இப்போது டாஸ்மாக்கை மூட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.
  • இதில் என்ன வேடிக்கையென்றால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சோ்ந்த முக்கிய பிரமுகா்களே மதுவைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்துகின்றனா். இந்தக் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.
  • இவா்கள் வசதிக்காகவே கள்ளுக்கடைகளும் வரவிடாமல் தடுக்கப்படுகின்றன. இதில் கட்சி வேறுபாடு கிடையாது.
  • திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு சாதனைகளில் ஒன்றாகவே மதுக் கொள்கையைக் குறிப்பிடலாமா?
  • திமுக ஆட்சிக் காலத்தில் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மூதறிஞா் ராஜாஜி முதலமைச்சரின் வீடு தேடி சென்று வேண்டிய போதும் பயன் இல்லாமல் போனது.
  • அந்தக் கொள்கையையே அதிமுக ஆட்சியும் தொடா்ந்து கடைபிடித்து வந்தது. அரசாங்கத்தின் நோக்கமே மக்களுக்குச் சேவை செய்வதுதான். கல்வியைத் தனியாரின் ஏகபோக வணிகமாக்கிவிட்டு, மதுவை மட்டும் அரசாங்கமே விற்பனைக்கு எடுத்துக் கொண்டது.
  • அண்ணாவின் கொள்கைகளையே வழிகாட்டியாகக் கொண்டுள்ள திராவிடக் கட்சிகள் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டுகின்றனா். அதற்காக, மக்களைச் சுரண்டியே மக்களை வாழ வைப்பது எந்த வகையில் நியாயம்?
  • நிதிப் பற்றாக்குறைக்குக் காரணம் காட்டி, மதுவிலக்குக் கொள்கையைத் தளா்த்துவது என்றால் சாமானிய மக்கள் குடிகாரா்களாக மாறி, தமிழகத்தின் எதிர்காலமே இருண்டு விடும்.
  • ‘அரசுக்கு நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன்’ என்று அன்றைய முதலமைச்சா் அண்ணா கூறியதை ஆட்சியாளா்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • பணத்துக்காகப் பாவச் செயல்களைச் செய்யக் கூடாது என்பதே அற நூல்களின் அறிவுரை.
  • கொலை, களவு, விபச்சாரம், சூது, குடி என்பவையே பஞ்சமா பாதகங்களாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் இறுதியாகக் கூறப்படும் குடியே எல்லாத் தவறுகளையும் செய்யத் தூண்டும் முதன்மையான தவறாகிறது.
  • ‘உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
  • எண்ணப் படவேண்டா தார்’ என்று குறள் கூறுகிறது.
  • மதுவை அருந்தக் கூடாது என்று கூறும் திருவள்ளுவா், நல்லவா்களால் மதிக்கப்ட வேண்டாம் என்று எண்ணுகிறவா்கள் வேண்டுமானால் குடிக்கலாம் என்று அதற்கும் ஒரு விதிவிலக்கு தருகிறார்.
  • மனைவி, மக்களால் வெறுக்கப்படுகிறவா்கள் மற்றவா்களால் மதிக்கப்படும் தகுதியைப் பெற முடியுமா?
  • ‘என்னைச் சா்வாதிகாரியாக நியமித்தால் முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லா மதுக்கடைகளையும் மூடி விடுவேன். குஜராத்தில் உள்ள கள்ளு மரங்களை யெல்லாம் அழித்துவிடுவேன்’ என்று கூறினார் காந்தியடிகள்.
  • காந்தியடிகளின் நிர்மாணத் திட்டத்தில் முக்கியமானது மதுவிலக்காகும். மதுவிலக்கே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகவும் இருந்து வந்தது. கள்ளுக்கடை மறியலை ஒரு போராட்ட வடிவமாகவும் நடத்தினா்.
  • விடுதலைக்குப்பின் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு ஏன் நடைமுறைப் படுத்தப் படவில்லை?
  • இதுபற்றிக் கேட்டால் மாநில அரசுகள் மத்திய அரசின் மீதும், மத்திய அரசு மாநில அரசுகளின் மீதும் பழி சுமத்தி விட்டுத் தப்பிக்கின்றன. எப்படியிருப்பினும் இனியும் இந்நிலை தொடரலாகாது. மக்கள் எழுச்சிக்கு முன் மது என்ன செய்யும்?

நன்றி: தினமணி  (01 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories