TNPSC Thervupettagam

மத்திய அரசா? ஒன்றிய அரசா?

June 19 , 2021 1064 days 823 0
  • இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதா, ‘மத்திய அரசு’ என்று அழைப்பதா என்கிற சா்ச்சை தற்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிறது.
  • இந்திய விடுதலைக்குப் பின்னா், பல அரசியல் கட்சிகளும், மாநில முதல்வா்களும் இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றுதான் அழைத்து வந்தனா்.
  • தமிழகத்தில் 1970-கள்வரை ஒன்றிய அரசாக இருந்தது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு வாதங்களை அரசியல் தலைவா்கள் எழுப்பினா்.
  • இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, இந்த சா்ச்சை அதிகமாக எழுந்தது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்கிற ஒருமித்த குரல்கள் இந்தியா முழுவதும் எழத் தொடங்கின.
  • மொழிவாரி மாநிலங்களைப் பிரித்ததற்குப் பிறகு, இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வரவேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக, மாநில உரிமைகள், மக்களின் நலன்கள் அவா்கள் சார்ந்திருக்கிற தொன்மைப் பண்பாடுகளை நசுக்கப் பார்க்கிறது நடுவண் அரசு என்கிற கூக்குரல் எழுந்தது. தமிழ்நாடு, இந்தியாவின் முன்னோடியாக அந்தக் குரலை எழுப்பியது.
  • இந்தியா பல மொழிகளையும், பல இனங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. அப்படியிருக்கையில், எண்ணிக்கையின் அடிப்படையில் மொழியை உயா்த்தியபோது, இந்தி மொழியைத் திணிப்பதாக, தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

கூட்டாட்சி

  • ‘எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு மொழியை ஆட்சி மொழியாக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் பேசுகிற தாய்மொழி, கலாசாரப் பின்புலத்தை ஆராய வேண்டும்.
  • இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த தமிழின் வோ்களை, 200 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த களப்பிரா்களால் வீழ்த்த முடியாதபோது, பிரிட்டிஷ்காரா்களால் வீழ்த்த முடியாத போது இந்தி மொழியா வீழ்த்திவிடும்?
  • எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற காக்கைகளையா நாம் தேசியப் பறவையாக அறிவித்திருக்கிறோம்? எண்ணிக்கையில் குறைவாக இருக்கிற மயிலை அல்லவா நாம் தேசியப் பறவையாக அறிவித்திருக்கிறோம்’ இப்படி அடுக்கடுக்கான வாதங்களை வைத்தபோது, மாநில உரிமைகளுக்காகப் போராடுகிற தலைவா்களில் ஒருவராக அண்ணா பார்க்கப்பட்டார்.
  • அப்போது ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற தத்துவமும் எழுந்தது. 1935-இல் ஆங்கிலேயா்கள் இயற்றிய இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியாவை ‘கூட்டரசு’ என்று தான் குறிப்பிட்டார்கள்.
  • அப்போது, மாகாண முதல்வா்கள் ‘பிரதமா்’ என்று அழைக்கப்பட்டனா். அந்த அளவுக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சட்டமாக அது இருந்தது.
  • அப்போதைய காங்கிரஸ் தலைவா்களும், அரசியலமைப்புச் சட்டம் உருவாகும்போது ‘ராணுவம், பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை ஆகிய மூன்று தவிர, மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே வழங்கப்படும்’ என்று தெரிவித்தனா்.
  • அதன் பின்னா் பாகிஸ்தான் பிரிவினை, இந்து-முஸ்லிம் கலவரம் வந்த பிறகு, தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் கருத்தில் கொண்டு மாநிலங்களின் பல அதிகாரங்கள், நடுவண் அரசின் கைகளுக்குச் சென்றன.
  • காங்கிரஸ் கட்சி, ‘நடுவண் அரசில் இருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்; மாநிலங்களில் இருந்து கிராமங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்’ என்று முழங்கியது.
  • ஆனால், அன்றைய பாரத பிரதமா் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்குப் பிறகு மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
  • நெருக்கடி நிலை காலகட்டத்தில் எழுத்துரிமையும், பேச்சுரிமையும் நசுக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கான திட்ட ஒதுக்கீடும் கேள்விக்குறியானது.
  • அப்போது, பல்வேறு கலகக் குரல்கள் எழத் தொடங்கின. அப்போது கூட்டாட்சி தத்துவத்தின் நெறிமுறைகளை விளக்கிட வேண்டும் என்கிற அரசியல் கனல் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ஒன்றிய அரசு

  • சோவியத் யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ‘குடியரசு’ என்றுதான் அழைக்கப்பட்டது. அதனால்தான், அது ‘யூனியன் ஸ்டேட்ஸ் ஆஃப் சோவியத் ரிபப்ளிக்’ என்று இருந்தது.
  • அமெரிக்காவும், ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ என்றுதான் இன்று வரை அழைக்கப் படுகிறது. இதில் ‘ஸ்டேட்ஸ்’ என்பது ‘நாடு’ என்ற பொருளிலேயே அழைக்கப் படுகிறது.
  • இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம் என்கிற பொருளிலே இருந்தாலும், அரசுகளை நாம் மாநிலம் என்றே அழைக்கிறோம்.
  • ஆந்திர மாநிலத்தில் என்.டி. ராமா ராவ் கட்சி தொடங்கியபோது, ‘மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம்’ என்று கூறினார்.
  • அப்போது அது ஒரு பெரும் கனலை மூட்டி, மக்களின் உணா்ச்சியைத் தட்டி எழுப்பி ஆட்சியைப் பிடிப்பதற்கு அதுவே காரணமாக அமைந்தது. படிப்படியாக பல பிரதமா்கள் மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்கத் தொடங்கினா்.
  • ‘ஒன்றிய அரசு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவது மத்திய அரசோடு மோதுவதாகும் என்று மத்தியில் ஆளும் பாஜக கருதுகிறது.
  • ஒன்றியம் என்ற வார்த்தை மோதலை ஏன் ஏற்படுத்த வேண்டும்? ‘அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் இவற்றில் இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளதால் இதைப் பயன்படுத்துகிறோம்’ என்று சொல்கிறார்கள்.
  • ‘இந்திய அரசின் அனைத்து ஆவணங்களிலும் ஒன்றியம் என்றே சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஆகவே, நாங்கள் ஒன்றியம் என்று அழைக்கிறோம்’ என்று திமுக தன் வாதத்தை முன் வைக்கிறது.
  • ஆனால், காங்கிரஸோடு நீண்ட ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தபோதும், வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், தேவெகெளடா, அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற பிரதமா்களின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும், மத்திய அரசைக் குறிக்க ‘ஒன்றியம்’ என்ற சொல்லை திமுக பயன்படுத்தியதே இல்லை.
  • ஆகவே, இந்தச் சொல்லை இப்போது வேண்டுமென்றே பயன்படுத்துவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
  • நமது இந்திய அரசாங்கத்தை மத்திய அரசு, நடுவண் அரசு, ஒன்றிய அரசு இவற்றில் எதைச் சொல்ல வேண்டும்? இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 1 ஷரத்து 1 முதல் 4 வரை இந்திய ஒன்றியம், அதன் எல்லைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பகுதியில் மாநில அமைப்பு, மாநில எல்லை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா அல்லது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றே அது சொல்கிறது.
  • அதன் காரணமாக, பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அனைவரும் ஒன்றிய அமைச்சா்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனா்.
  • அரசுக்கு எதிரான வழக்குகளும், அரசு தொடுக்கும் வழக்குகள் இந்திய ஒன்றியம் என்றே குறிப்பிடப் படுகிறது.
  • அதே போன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 300, இந்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்போர், இந்திய ஒன்றியம் என்ற பெயரையே பயன்படுத்தலாம்; அரசும் இந்தப் பெயரிலேயே வழக்கு தொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • இந்திய ஒன்றியம் அல்லது இந்திய யூனியன் என்கிற பெயா்தான் இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்ட காலத்திலிருந்து இருக்கிறபோது, இப்போது திடீரென திமுக இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது ஏன் என்று பாஜக கேட்கிறது.
  • புதிதாக ஆட்சிக்கு வந்தவுடன், புதிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
  • அரசியலமைப்புச் சட்டப்படி, ஒன்றியம் என்று அவா்கள் கூறினால், எல்லாவகையிலும் அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லையே என்கிற வாதமும் எழுகிறது.
  • ஏனென்றால், அரசியல் சட்டத்தை மீறி இங்கு யாரும் இயங்க முடியாது. அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி.
  • அரசியல் சாசனத்தின் முதல் ஷரத்தின் பொருளை ஒவ்வொரு வார்த்தையாக தனித்துப் பிரித்து பொருள் கொள்ளக் கூடாது.
  • இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றையும், அதை மீட்டெடுக்கப்பட்ட சுதந்திர வரலாற்றையும், தேசத்திற்காக வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தோடு இணைத்தும், பொருத்தியும் பார்க்க வேண்டும்.
  • இந்தியா, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் 200 ஆண்டு காலமும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 100 ஆண்டு காலமும் என 300 ஆண்டு காலம் அடிமைப்பட்டுக் கிடந்தது.
  • அதற்கு முன்னா், ஆயிரம் ஆண்டு காலம் அந்நியப் படையெடுப்புகளால் காயம்பட்டுக் கிடந்ததையும், விஜயநகரப் பேரரசின் கீழ் 230 ஆண்டு காலம் தமிழ்நாடு அடிபணிந்துக் கிடந்ததையும், ஒன்றியம் என்று அழைப்பவா்கள் மறந்துவிட்டார்களா எதிர்வாதமும் வைக்கப் படுகிறது.
  • இந்தியா பிரிக்க முடியாத ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரே தேசம் என்பதைக் குறிக்கவே ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 600 சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதற்காக நடந்தப் போராட்டத்தை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
  • பல நூற்றாண்டு காலம் அடிமைப்பட்ட இந்திய தேசம் ஒரே நாளில் விடுதலை பெற்று விட வில்லை என்பதையும், பல்வேறு வளா்ந்த நாடுகளின் அரசியல் சாசனத்தின் ஷரத்துகளை உள்வாங்கி, இந்தியாவிற்கான ஒரு வலுவான அரசியல் சாசனத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி  (19 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories