TNPSC Thervupettagam

மத்திய - மாநில அரசுகளின் பண்பாட்டு அக்கறைகள் ஏட்டளவில் மட்டும்தானா?

August 4 , 2021 1017 days 484 0
  • இந்தியத் தொல்லியல் துறையால் நாடு முழுவதும் பராமரிக்கப்பட்டுவரும் பாரம்பரியமான கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் மிகச் சிலவற்றில் மட்டுமே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருக்கின்றன என்று வெளிவந்திருக்கும் தகவல்கள் இது குறித்து மத்திய - மாநில அரசுகளின் அக்கறையின்மையைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.
  • சமீபத்தில், மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜகவின் மக்களவை உறுப்பினர் அசோக் மகாதியோராவ் நேத்தே எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்திருக்கும் பதில்கள் இத்தகைய அதிர்ச்சித் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன.
  • தமிழ்நாட்டில் மட்டும் இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் கோயில்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களின் எண்ணிக்கை 412.
  • இவற்றில் 78 இடங்களில் மட்டுமே குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை வசதியுள்ள இடங்கள் வெறும் 26 மட்டுமே.
  • சாலை வசதிகளைக் கொண்டிருப்பவை 283, வாகன நிறுத்துமிட வசதிகளைக் கொண்டிருப்பவை 23 மட்டுமே.
  • வழிகாட்டும் பலகைகளைக் கொண்டிருப்பவை 116. அமர்வதற்கான இருக்கை வசதிகளைக் கொண்டிருப்பவை 21 மட்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுதான் நிலை. மக்களிடம் உள்ள இயல்பான வரலாற்றுணர்வு தொல்லியல் சின்னங்கள் மற்றும் பாரம்பரியப் பகுதிகளை நோக்கிய சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவக்கூடியது.
  • அத்தகைய பொருளாதார வாய்ப்புகளைக்கூட மத்திய - மாநில அரசுகள் போதிய கவனத்தில் கொள்ளவில்லை.
  • பராமரிப்பிலுள்ள அனைத்துக் கோயில்கள் மற்றும் பாரம்பரிய இடங்களிலும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுக்கக் கூடிய நிதியாதாரங்களோ மனித வளமோ இந்தியத் தொல்லியல் துறையிடம் இல்லை.
  • அதற்காகக் காத்துக்கொண்டிருக்காமல் தொல்லியல் துறையில் ஆர்வம் கொண்ட அமைப்புகள், தன்னார்வலர்களுடன் இணைந்து இந்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
  • இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரியப் பகுதிகளை அதிக அளவில் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
  • இந்து சமய அறநிலையத் துறை தமது நிர்வாகத்தில் உள்ள பழமையான கோயில்களை இந்தியத் தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களுடன் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் 75 உத்தரவுகளுடன் கூடிய விரிவான தீர்ப்பைச் சமீபத்தில் அளித்துள்ளது.
  • அத்தீர்ப்பின் வெளிச்சத்தில், தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட கோயில்களுக்கு வரும் பயணிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறையே இத்தகைய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.
  • எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் அரசிடமும் மக்களிடமும் தொல்லியல் ஆர்வம் எழுந்துள்ளது.
  • மண்ணுக்குள் மறைந்துகிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைக் கண்டறிவதில் உள்ள ஆர்வமும் அக்கறையும் அழியும் நிலையிலுள்ள பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதை நோக்கியும் திரும்பட்டும்.
  • அவற்றைக் காண வரும் பயணிகளுக்கு உரிய வசதிகளைச் செய்துகொடுப்பது மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தின் பொறுப்பாகவும் மாறட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories