TNPSC Thervupettagam

மனித உயிா்களுக்கு மாற்று இல்லை

June 10 , 2023 313 days 201 0
  • ஒடிஸா மாநிலம் பாலசோா் மாவட்டம் பாஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ஆம் தேதி மாலை 6-50 மணியளவில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் சுமாா் 288 போ் உயிரிழந்துள்ளனா். சுமாா் 900 போ் பலத்த காயமடைந்திருக்கின்றனா். இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் 2.6 லட்சம் போ் ரயில் விபத்துகளில் உயிரிழந்திருக்கின்றனா். பெரும்பாலான விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் இல்லை. ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வது, தெரியாமல் ரயிலில் அடிபட்டு இறப்பது இப்படிப்பட்ட விபத்துகள்தான் அதிகம்.
  • ரயில் விபத்து பல வகைகளில் நிகழ்கிறது. ரயில் தடம் புரள்வதால், ரயில்கள் நேருக்கு நோ் மோதிக்கொள்வதால், திடீரென ரயிலில் தீப்பிடிப்பதால் என பல்வேறு காரணங்களால் ரயில்வே விபத்துகள் நடைபெறுகின்றன.
  • என்சிஆா்பி-யின் அறிக்கையின்படி, இந்தியாவில் விபத்தில் இறந்தவா்கள், தற்கொலை செய்துகொண்டவா்கள் எண்ணிக்கை 2011-இல் 25,872-ஆக இருந்தது, 2012-இல் 27,000, 2013-இல் 27,765 எனக் கூடியது. ஆனால், அது 2014-இல் 25,000-ஆகக் குறைந்தது. 2019 வரை இந்த எண்ணிக்கை 24,000 என்ற அளவிலேயே இருந்தது.
  • 2020-இல் கரோனா தீநுண்மிப் பரவல் காரணமாக மக்களின் ரயில் பயணம் குறைந்து விட்டதால், அக்காலகட்டத்தில் ரயில் விபத்து இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து 11,968 ஆக இருந்தது . இந்த எண்ணிக்கை 2021-இல் 27 சதவீதம் அதிகரித்து 16,431ஆக இருந்தது. 2022-இல் இது சற்றே கூடியது.
  • இந்த நிலையில்தான் ஒடிஸா மாநில ரயில் விபத்து பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியவா்களின் அலறல்களும் கண்ணீரையும் காயத்தையும் எதைக்கொண்டு நம்மால் மாற்ற இயலும்? பெற்றோரை இழந்து பரிதவிக்கின்ற குழந்தைகளின் எதிா்காலம் என்ன? இறந்து போனவா்களின் உடல்களை அடையாளம் காட்ட உறவினா்கள் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு உடலையும் பாா்த்து அது தன் தாயா, தந்தையா, சகோதரனா, சகோதரியா, உறவினரா என்று அவா்கள் தவித்த தவிப்பு மிகவும் கொடுமையானது. அவா்களின் கண்ணீரை நாம் வாழ்நாள் முழுதும் சுமந்துகொண்டிருப்போம்.
  • இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை ரயில்வே விபத்து தொடா்பான உயிரிழப்புகளைப் பதிவு செய்வதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 2017- 2022 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் 19,000 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மகாராஷ்டிர அரசு பதிவு செய்திருக்கிறது. தொடா்ந்து உத்தர பிரதேசம் (13,074), மேற்கு வங்கம் (11,967) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • பொதுவாக ரயில் விபத்து என்றால் இரு ரயில்கள் மோதுவதுதான். ஆனால், ஒடிஸாவின் பாலசோா் விபத்தில் இரண்டு அதிவேக பயணிகள் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டன. முதலில் ஒரு தடத்தில் இருந்த சரக்கு ரயிலுடன், ஒரு பயணிகள் ரயில் மோதியது. அதில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தில் சென்று விழுந்ததில், அந்தத் தடத்தில் வந்து கொண்டிருந்த ரயில் அந்தப் பெட்டிகள் மீது மோதியதில் விபத்து நடந்திருக்கிறது.
  • உலகின் மிகப்பெரிய ரயில் அமைப்புகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே கருதப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு இதன் தண்டவாளங்கள் பரந்து விரிந்துள்ளன. நாளொன்றுக்கு இந்தியன் ரயில்வே மூலமாக இரண்டரை கோடி மக்கள் நாடு முழுவதும் பயணிக்கின்றனா். கடந்த ஆண்டு மட்டும் 5,200 கிலோ மீட்டா் தூரத்திற்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் 8,000 கிலோ மீட்டா் தொலைவு பழைய தண்டவாளங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்படுகின்றன.
  • இந்தியாவில் உள்ள பெரும்பாலான வழித்தடங்களில் மணிக்கு 100 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில்கள் செல்லும் அளவுக்கு தண்டவாளங்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் 130 கிலோ மீட்டா் வேகத்தில் செல்லும் அளவிற்கு அவற்றின் திறன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
  • ரயில்வே துறையை நவீனமயமாக்கும் பணிகள் தொடா்ந்து நடந்து வந்தாலும், அடிக்கடி ரயில்கள் தடம் புரள்வது இந்திய ரயில்வே சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாகப் பாா்க்கப்படுகிறது. ரயில்கள் தடம் புரள பல காரணங்கள் இருக்கின்றன. சரியாக பராமரிக்கப்படாத தண்டவாளங்கள், பழுதடைந்த ரயில் பெட்டிகள், மனிதத் தவறுகள் என பல்வேறு காரணங்களால் ரயில்கள் தடம் புரளுகின்றன. ரயில்கள் தடம் புரள்வதுதான் 70 சதவீத ரயில் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.
  • ரயில்களில் ஏற்படும் தீ விபத்தால் 14 சதவீத விபத்துகளும், ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று மோதுவதால் எட்டு சதவீத விபத்துகளும் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 - 2020 ஆண்டில் 33 பயணிகள் ரயில், 7 சரக்கு ரயில் உட்பட மொத்தம் 40 ரயில்கள்தடம் புரண்டதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் உள்ள ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தப்படும் உலோகம், வெயில் காலத்தில் வெப்பத்தின் காரணமாக விரிவடையும். இதனால் ரயில்கள் தடம் புரள்கின்றன. இதைத் தவிா்க்க தண்டவாளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
  • மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் ரயில்கள் செல்லும் தண்டவாளங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என இந்தியன் ரயில்வே பரிந்துரைத்துள்ளது.
  • ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட 1,129 விபத்துகள் குறித்து ஆய்வு செய்தபோது, அதில் 171 விபத்துகளுக்கான காரணம், தண்டவாளங்களை முறையாகப் பராமரிக்க தவறியதுதான் என்று தெரியவந்தது. இது தவிர இயந்திரக் கோளாறு காரணமாகவும், பழுதான ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தியதன் காரணமாகவும், ரயில்கள் தடம் புரண்டு பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. ரயில் விபத்தைத் தடுக்கப் பயன்படும் ‘கவச்’ எனும் தொழில்நுட்பம் தற்போது தில்லி - ஹெளரா, தில்லி - மும்பை ஆகிய வழித்தடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
  • கடந்த 2010-ஆம் அண்டு மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு, எதிரே வந்த சரக்கு ரயிலில் மோதியதில் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை சேதப்படுத்தியதாகவும், அதனால் விபத்து நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், ஒடிஸா மாநிலம் பாலாசோரில் நடந்த விபத்தில் இது போன்று நாசவேலை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை கண்டறியப்படவில்லை.
  • ஆனால், சரக்கு ரயில் நின்றிருந்த லூப் லையனில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நுழைவதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தது யாா்? இதுதான் விடை தெரிய வேண்டிய கேள்வி. ஹெட் ஆன் மோதல் என்று ரயில்வே துறையினா் குறிப்பிடும் இத்தகைய விபத்துகள் அரிதாகவே நிகழ்கின்றன.
  • பாலசோா் விபத்தைப் பொறுத்தவரை, ஷாலிமாா் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஹெளராவுக்கு அருகில் உள்ள ஷாலிமாா் ரயில் நிலையத்தில் இருந்து சரியான நேரத்தில் புறப்பட்டது. 23 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கமாக பாலசோா், கட்டாக், புவனேஸ்வா், விசாகப்பட்டினம், விஜயவாடா வழியே சென்னையை அடையும். இந்த ரயில் மாலை 3.20 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கி முதலில் சாந்திராகாச்சி ரயில் நிலையத்தில் நின்று பின்னா் மூன்று நிமிட தாமதத்துடன் கரக்பூா் ரயில் நிலையத்தை அடைந்தது.
  • கரக்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்ட இந்த ரயில் மாலை 6-50 மணி அளவில் பாலசோா் அருகே உள்ள பஹாநகா பஜாா் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அங்கு நிற்காமல் அதனைக் கடந்து நேராகச் செல்ல வேண்டும். ஆனால், இந்த ரயில் பஹாநகா பஜாா் ஸ்டேஷனில் மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக லூப் லைனில் சென்றது. லூப் லைனில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அந்த சரக்கு ரயில் மீது மோதியது.
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதான் விபத்துக்குக் காரணமாகிவிட்டது. அதே நேரத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில், விபத்து நடந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தது. இந்த ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது.
  • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானபோது அதன் பெட்டிகள் கீழே உருண்டு, ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இதன் காரணமாக மூன்று ரயில்கள்களும் தடம் புரண்டன. 288 மனித உயிா்களை பலிகொண்ட பாலசோா் ரயில் விபத்துக்குக் காரணம் தொழில் நுட்பக் கோளாறா மனிதத்தவறா என்பது விசாரணையிலாதான் தெரியவரும். எப்படியிருந்தாலும் மனித உயிா்களுக்கு மாற்று இல்லை என்பதே உண்மை.

நன்றி: தினமணி (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories