TNPSC Thervupettagam

மனி​த​ரு‌க்கு ம‌ட்டு​ம‌ல்ல பூமி!

May 16 , 2022 683 days 390 0
  • அண்மையில், எங்கள் கோவை நகரின் பல இடங்களில் காணப்பட்ட சுவரொட்டி விளம்பரம் ஒன்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பத்து மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளும் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு குறித்த சுவரொட்டி அது.
  • மனிதர்களைப் படைத்த அதே கடவுள்தான் காட்டுப்பன்றிகளையும் படைத்திருக்கிறார். இவ்வுலகில் வாழ மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை காட்டுப் பன்றிகளுக்கும் உண்டு. அப்படியிருக்க, காட்டுப் பன்றிகளை ஒழிக்க நமக்கு என்ன அதிகாரம் உள்ளது?
  • சில மாநிலங்களில், குறிப்பிட்ட விலங்கினங்களை "தொந்தரவு' (வெர்மின்) என்று மாநில அரசுகளே அறிவித்து அவற்றை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதித்து இருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி இருக்கிறது. கேரளத்தில் மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், காட்டுப் பன்றிகளால் தங்களுக்கு அடிக்கடி பயிர்ச் சேதமும் சில சமயங்களில் உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது என்று கூறி, அவற்றைச் சுட்டுக் கொல்ல தங்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
  • 2021ஜூலையில் கேரள உயர்நீதிமன்றம் காட்டுப் பன்றிகளை "தொந்தரவு' என்று அறிவித்து அவற்றை குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேட்டையாடிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு "அப்படி அனுமதி அளித்தால் பல விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும்' என்று கூறி அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது.
  • பல ஆண்டுகளுக்கு முன்னரே, உத்தரகண்ட், பிகார், கோவா, ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்கள், குறிப்பிட்ட சில விலங்கினங்களை சுட்டுக் கொல்ல விவசாயிகளுக்கு அனுமதியளித்தன. "நீல்காய்' என அழைக்கப்படும் ஒரு வகை மாடுகள் விளைநிலங்களில் புகுந்து பெருமளவில் பயிர்ச் சேதத்தை உண்டாக்குகின்றன என்ற காரணத்தால் பிகாரில் மூன்றே நாட்களில்  இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நீல்காய் மாடுகளை அரசே சுட்டுக் கொன்றது.
  • இதைப் போன்றே ஹிமாசல பிரதேசத்தில் "ரீஸஸ்' வகைக் குரங்குகள் பெருமளவில் வேட்டையாடப்பட்டன. மேற்கு வங்கத்தில் யானைகளால் அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது என்று காரணம் கூறி, மாநில அரசு யானைகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி கோரியது. ஆனால், மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இப்போது தமிழகத்துக்கு வந்திருக்கிறது சோதனை. "காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு' நடத்தி விவசாயிகள் கோரிக்கை வைக்க, மாநில வனத்துறை அமைச்சரும் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
  • இவ்வாறு இந்தியா முழுவதிலும், காட்டுப்பன்றி, யானை, முள்ளம்பன்றி, காட்டெருமை, சாம்பார் மான், லங்கூர் குரங்கு, பான்னெட் குரங்கு, குரைக்கும் மான், மலபார் அணில், மயில், சருகு மான், மௌஸ் டீர் எனப்படும் சிறிய வகை மான், ஒரு வகை முயல் ஆகிய பன்னிரண்டு விலங்கினங்களை "தொந்தரவு' என வகையறுத்துச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • இந்த பிரச்னை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களைச் சுற்றி சூரிய மின்வேலிகளை அமைத்துக் கொள்வதால், காட்டுப் பன்றிகள், யானைகள் போன்ற மிருகங்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இவ்வேலிகள் "பல்ஸ் கரண்ட்' எனப்படும் "குறைந்த நேரத்தில் அதிர்வைக் கொடுக்கும் மின்சாரம்' உள்ளவை. அதனால் விலங்குகள் பயந்து ஓடக்கூடுமே தவிர உயிரிழக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இதுவும் பல இடங்களில்  தவறாகப் பயன்படுத்தபடுகிறது.
  • வேளாண் நிலங்கள் அல்லாமல், காடுகளின் ஓரங்களில் கட்டப்படும் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கும் சூரிய மின்வேலிகளை அமைப்பதால் விலங்குகளுக்கான பாதைகள் தடுக்கப்படுகின்றன. இதனை நீக்கும் வகையில் தமிழக அரசு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இனிமேல் சூரிய மின்வேலிகள் அமைப்பவர்கள் அவற்றை முறையாக பஞ்சாயத்துகளில்  பதிவு செய்ய வேண்டும் என்றும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மின்வேலிகள், அவற்றின் திறன், அவற்றின் வகை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அப்படிச் செய்யத் தவறினால் அவை சட்ட விரோத வேலிகளாகக் கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
  • அதே அரசின் அங்கத்தினரான ஒரு அமைச்சரோ முரண்பாடாக, "குவாரிக்காரர்களின் நலன்களைக் காத்திடவும், அரசின் வருவாயைப் பெருக்கிடவும், சரணாலயம் உள்பட காப்புக் காடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை குவாரி செயல்பாடுகளுக்கான தடையைப் போக்க உரிய திருத்தம் கொண்டுவரப்படும்' என்று ஒரு விபரீதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அப்படியானால் விலங்குகளின் நலனை யார் காப்பது?  
  • சில வடமாநிலங்களில் பயிரைத் தேடி வரும் விலங்குகளை பயமுறுத்த குறுந்தகடுகளைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அவற்றின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளியினைக் கண்டு மிருகங்கள் அச்சம் கொண்டு விலகி ஓடிவிடுவதால் பல விவசாயிகள் இந்த எளிய பாதுகாப்பு முறையைக் கையாளுகின்றனர். அஸ்ஸôம் போன்ற மாநிலங்களில் விளை நிலங்களின் ஓரத்தில் சூரிய மின்வேலிகள் அமைப்பதோடல்லாமல் தேனீப் பெட்டிகள் வைத்து தேனீக்களை வளர்க்கின்றனர்.
  • இத்தேனீப் பூச்சிகளின் ரீங்காரம் யானைகளை விரட்டி விடுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். வனங்களை ஒட்டி வேளாண் நிலங்கள் இருக்கும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வனத்துறையே யானைகள் உள்ளே நுழையாத வண்ணம் குழிகளைஅமைக்கிறது.
  • இவை எல்லாவற்றையும் தாண்டி விலங்குகள் நிலங்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் வருவது குறைந்தபாடில்லை. இருபது வருடங்களுக்கு முன் இப்படியெல்லாம் நடக்கவில்லையே, இப்போது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. அப்போதெல்லாமம், மனிதன் தன் உணவுத் தேவைக்காக ஊருக்குள் அளவான இடத்தில் பயிரிட்டான்; வன விலங்குகளுக்கும் போதிய அளவு வனங்களும் அவற்றில் பஞ்சமில்லாத அளவு உணவும் தண்ணீரும் இருந்தன.
  • அதனால் அவரவர் இடத்தில் அவரவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மனிதன் காட்டுக்குள் நுழைந்தான்; விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன அவ்வளவுதான்.    
  • கானுயிர் வல்லுநர்கள் இந்த பிரச்னை குறித்து ஆராய்ச்சிகள் செய்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இந்நடவடிக்கைகளை எதிர்த்துத் தொடுக்கும் வழக்குகளினால் நீதிமன்ற உத்தரவுகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. இல்லையென்றால் நம் நாட்டின் காடுகளும், விலங்குகளும் பெருமளவு காணாமல் போயிருக்கும்.
  • இக்கானுயிர் வல்லுநர்கள் "மத்திய அரசின் வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் இந்திய வனங்களில் சில குறிப்பிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் அவற்றின் வாழ்க்கைக்குத் தேவையான வனப்பரப்பு அதிகரிக்கவில்லை. எண்ணிக்கை கூடியதால் மட்டுமே விலங்குகள் வேளாண் நிலங்களுக்குள் நுழைகின்றன என்பது சரியன்று. மனித ஊடுருவல், காடுகளின் பரப்பளவு குறைதல், உணவு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிற காரணங்களும் இருக்கலாம்.
  • குறிப்பிட்ட ஒரு விலங்கினத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் உணவுச் சங்கிலியில் அவ்விலங்கை இரையாகக் கொள்ளும் பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். உதாரணமாக, காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதென்றால், அங்கு சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். அதற்குக் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொன்றால், வேறு வனப் பகுதியிலிருந்து வேறு காட்டுப் பன்றிக் கூட்டம் ஒன்று இங்கு வந்து சேரும். சிறுத்தைகள் மாற்று இரையாக ஊருக்குள் இருக்கும் கால்நடைகளைத் தேடி வரும். காட்டின் உணவுச் சங்கிலி மிக மோசமாக பாதிக்கப்படும்' என்கின்றனர்.
  • பெரும்பாலான கானுயிர் வல்லுனர்களின் கருத்து இவ்வாறிருக்க, பிரபல சூழலியல் வல்லுநர் மாதவ் காட்கில் ஒரு  பேட்டியில் அதிர்ச்சி தரும்படியான சில கருத்துகளைக் கூறியுள்ளார். "காட்டுப் பன்றியோ யானையோ புலியோ எந்த விலங்காக இருந்தாலும், அது இயற்கை வளமாகக் கருப்பட வேண்டும். மக்கள் அவ்வளத்தை அளவாக அறுவடை செய்து பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவ்வளத்தைக் காக்க மக்கள் முற்படுவார்கள். காட்டுப் பன்றியின் இறைச்சி சத்து நிறைந்தது எனும்போது, விவசாயிகள் அவற்றைக் கொன்று உணவாகக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
  • ஏற்கெனவே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த அவரது பரிந்துரைகளை மத்திய - மாநில அரசுகள் புறக்கணித்து விட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • விவசாயிகள் உணர்ச்சிவயப்பட்டுப் போராடலாம்; ஆனால் அரசு உணர்வுபூர்வமாக செயல் படக்கூடாது. எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த விலங்கினங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது, ஏன் கூடியுள்ளது போன்ற தகவல்களை தொழில்நுட்பத்தின் துணையோடு சேகரிக்க வேண்டும். கானுயிர் வல்லுநர்களை கலந்தாலோசித்து வன விலங்குகளின் உரிமைகளையும் பாதுகாத்து, மனிதர்களின் உரிமைகளுக்கும் சேதம் ஏற்படாத வண்ணம் நன்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பூவுலகு நமக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம்.

நன்றி: தினமணி (16 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories