TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட ஆபத்தான உணவுக்கு மறைமுக அனுமதி?

February 4 , 2022 820 days 393 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), அதன் அடிப்படைப் பணியான, பாதுகாப்பான - ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் உறுதிப் படுத்துவது சார்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
  • மரபணு மாற்றப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறைகள் என்ற பெயரில், மற்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட உணவு இந்தியாவிலும் அங்கீகரிக்கப் பட வாய்ப்புள்ளது.
  • ஒருபுறம் பிரதமர் மோடி வேதியியல் ஆய்வகங்களிலிருந்து விவசாயத்தை வெளியேற்ற வேண்டும், இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நேரத்தில்தான் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு ஆதரவான இந்த விதிமுறை முன்மொழியப் பட்டுள்ளது!
  • மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய வரைவு விதிமுறைகளை உணவுப் பாதுகாப்பு ஆணையம் 2021 நவம்பர் 15-ம் தேதி அறிவித்தது. வரைவு விதிமுறைகளுக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கின.
  • தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இந்த வரைவு விதிமுறைகளை வெளியிட வேண்டும், மக்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 5 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விவாதம்

  • உலகின் மொத்த பயிரிடும் பரப்பில் 3% மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். உலகின் பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்/உணவைத் தடைசெய்துள்ளன.
  • மரபணு மாற்றப்பட்ட உணவு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது எனப் பல அறிவியல் ஆய்வுகள் பதிவுசெய்துள்ளன.
  • மரபணு மாற்றப்பட்ட உணவானது நோய் எதிர்ப்புத் திறன், இனப்பெருக்க நலன், முக்கிய உறுப்புகள் - அவற்றின் செயல்பாடு, ஓர் உயிரினத்தின் வளர்ச்சி போன்றவற்றோடு சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது.
  • அத்தகைய உணவால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பல நாடுகளில் அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவற்றைத் தாண்டி வர்த்தகப் பாதுகாப்பு, விவசாயிகளின் விதை இறையாண்மை, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றுக்கும் இவை ஆபத்தாகவே உள்ளன. இந்த ஆபத்துகள் குறித்து 400-க்கும் மேற்பட்ட ஆய்வுகள், பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வறிக்கைகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்/உணவின் தீய விளைவுகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
  • மரபணு மாற்றப்படாத இந்திய உணவுக்கான கூட்டமைப்பும், பல நாடுகளைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய நஞ்சு உணவு தேவையில்லை என்று அறிவித்துள்ளன.
  • ஆனால், உணவுப் பாதுகாப்பு ஆணையமோ மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றி விழிப்புணர்வு இல்லாத, அந்த உணவை விரும்பாத மக்கள் மீது பாதுகாப்பற்ற உணவைத் திணிப்பதற்கான எளிதான வழிமுறைகளை முன்மொழிந்துள்ளது.
  • 2006 மே, ஜூலை மாதங்களில் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
  • மரபணு மாற்றப்பட்ட உணவு, பொதுவாகவே உணவு முறைகளின் கார்ப்பரேட்மயமாக்கல் குறித்தும் அவர்கள் கவலையை வெளியிட்டிருந்தனர்.
  • ஏழைகளுக்கான உணவு, நஞ்சில்லா உணவு, இயற்கை உணவு உற்பத்தி செய்பவர்களுக்கு ஆதரவு போன்றவற்றை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.
  • ஆனால், நிறைவேற்றப்பட்ட சட்டத்திலோ பிரிவு 22-ன்கீழ், மரபணு மாற்றப்பட்ட உணவு, இயற்கைமுறை உணவு ஆகிய இரண்டும் ஒரே விதியில் இணைக்கப்பட்டிருந்தன!

நீளும் சர்ச்சைகள்

  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 2021 ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியில், 500 டன் மரபணு மாற்றப்பட்ட அரிசி என்று கண்டறியப்பட்டு நிராகரிக்கப் பட்டது.
  • ஏற்கெனவே, 2012-ல் இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி, மரபணு மாற்றம் செய்யப்பட்டது எனக் கண்டறியப்பட்டது.
  • இப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் சட்டவிரோதமாக வலம்வரும் மரபணு மாற்றப்பட்ட உணவை ஒழுங்குபடுத்துதல் குறித்த கேள்விகளும் குடிமை அமைப்புகளின் புகார்களும் இருக்கும்போதிலும், மரபணு மாற்றப்பட்ட உணவைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிடுவது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையம் கவலைப்படவில்லை.
  • இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பு உறுதியளித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியாக நவம்பர் 2021-ல்தான் வரைவு விதிமுறைகளையே வெளியிட்டுள்ளது.
  • வரைவு விதிமுறைகளில், இரண்டு வகையான மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஒழுங்குபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
  • ஆனால், உணவில் உயிரிப் பாதுகாப்பு (biosafety) சார்ந்த மதிப்பீடு எப்படிச் செய்யப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை.
  • முன்மொழியப்பட்ட விதிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில், மற்ற நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இங்கும் ஒப்புதலுக்கான அடிப்படையாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் குறித்த வழிகாட்டுதலில் பாதுகாப்பு நிபுணர்கள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொழில் துறை, சில்லறை வணிகம், விவசாயிகள், நுகர்வோர் பிரதிநிதிகள், அமைச்சகப் பிரதிநிதிகளை இந்தக் குழு கொண்டுள்ளது.
  • உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடு அடிப்படையில் ஒப்புதலோ நிராகரிப்போ அமையும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடு எப்படி நடைபெறும், நீண்ட கால சோதனை, விரிவான சோதனை முறைகள் என்னென்ன என்பதைக் கோடிட்டுக் காட்டும் எந்த வழிகாட்டுதலும் இல்லை.
  • சுருக்கமாக இந்தக் குழுவுக்குத் தேவையான பாதுகாப்பு சார்ந்த நிபுணத்துவம் சிறிதளவு கூட வெளிப்படவில்லை; சட்ட விரோதமாக மரபணு மாற்றப்பட்ட உணவு விற்பனை பற்றியோ, ஒரு பயிருக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ஏற்படும் கேடுகளைக் கவனிக்கவோ, முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு சார்ந்த முன்னேற்பாடு பற்றியோ எந்தக் குறிப்பும் இந்த வரைவில் இல்லை.
  • உண்மையில், இந்த வரைவு விதிமுறைகள் ஏற்கெனவே EPA 1986-ன் கீழ் உள்ள மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (GEAC) குறைபாடுள்ள ஒழுங்காற்று விதிமுறைகளைக் கூடுதலாகப் பலவீனப்படுத்துகின்றன.

பொறுப்பு அவசியம்

  • இந்திய அரசமைப்பின்படி பொதுச் சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மாநில அரசுகளின் கருத்து, கொள்கைகள் குறித்து இந்த வரைவு விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.
  • பெரும்பான்மை மாநிலங்கள் மரபணு மாற்றப்பட்ட உணவு/பயிர்களை எதிர்க்கின்றன. அத்தகைய மாநிலங்களில் மரபணு மாற்றப்பட்ட உணவை, உணவுப் பாதுகாப்பு ஆணையம் எவ்வாறு தடுக்கப் போகிறது?
  • வேளாண் வணிகம், உணவுத் தொழில் துறையின் மறைமுகத் திட்டத்தை இந்த வரைவு விதிமுறைகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • இதனால் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் மட்டுமே பலன் பெறும். உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகள் ஏற்படுத்தும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம் இது.
  • அத்துடன் மரபணு மாற்றப்பட்ட உணவோ பயிரோ தனக்குத் தேவையில்லை என நினைக்கும் ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்கு உண்டு.
  • எனவே, நமது உணவுத் தட்டுக்கு எது வந்து சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கத் தனிநபராகவோ, அமைப்பாகவோ, விவசாயக் குழுவாகவோ regulation@fssai.gov.in என்னும் மின்னஞ்சலுக்கு சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 5) கருத்தைத் தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
  • அதே நேரம், உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்குக் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. அனுமதிக்கப்படாத மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கும் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும்.
  • ஒரு புறம் மரபணு மாற்றப்பட்ட உணவு எளிதாக நுழைவதற்கு வசதியாக விதிமுறைகளை அறிவித்துள்ள ஆணையம், குழந்தை உணவில் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு அனுமதி இல்லை என்கிறது.
  • குழந்தைகளுக்கு ஒவ்வாத மரபணு மாற்றப்பட்ட உணவு பெரியவர்களுக்கு மட்டும் எப்படிச் சரியாக இருக்கும்? அனைத்து மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கும் இதே முன்னெச்சரிக்கை அணுகுமுறை பின்பற்றப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
  • அப்போதுதான் மக்கள் நலன், சுற்றுச்சூழல், விதை இறையாண்மை, பயிர்ப் பன்மை, உழவர் வாழ்வாதாரம், பொது ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்படும்.

நன்றி: தி இந்து (04 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories