TNPSC Thervupettagam

மருத்துவம் படிப்பு குறித்த தலையங்கம்

March 4 , 2022 795 days 401 0
  • உக்ரைன் மீதான ரஷியப் படையெடுப்பைத் தொடா்ந்து, குண்டு வெடிப்பில் இந்திய மாணவா் ஒருவா் உயிரிழந்திருப்பது, ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
  • உக்ரைனில் படிப்பதற்காகச் செல்லும் மாணவா்களில் பெரும்பாலோா் மருத்துவப் படிப்புக்காகத் தான் செல்கிறாா்கள்.
  • உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், சீனா, ரஷியா, கிா்கிஸ்தான், பிலிப்பின்ஸ், கஜகஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஜாா்ஜியா, ஆா்மேனியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் மருத்துவம் படிப்பதற்காக மாணவா்கள் செல்கிறாா்கள்.

கட்டணம் மட்டுமே காரணமல்ல!

  • சராசரியாக ஆண்டுதோறும் 20,000 முதல் 25,000 வரை மாணவா்கள் மருத்துவம் படிப்பதற்காக மேலை நாடுகளுக்குச் செல்கிறாா்கள்.
  • அவா்களில் அதிகமானோா் சீனாவுக்கும், அதற்கு அடுத்தபடியாக ரஷியாவுக்கும், அதைத் தொடா்ந்து உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அங்குள்ள பல்கலைக்கழகங்களை நாடுகிறாா்கள்.
  • அதற்கு இங்கே போதுமான அளவில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்பதும் மறுக்க இயலாத உண்மை.
  • இந்தியாவில் உள்ள 562 மருத்துவக் கல்லூரிகளில் 276 தனியாா் கல்லூரிகளும், 286 அரசு கல்லூரிகளும் அடக்கம். மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வில் 2021-ஆம் ஆண்டில் 16.1 லட்சம் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
  • இந்தியாவில் தனியாா், அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தையும் சோ்த்தால்கூட மருத்துவப் படிப்புக்காக 90,000 இடங்கள்தான் இருக்கின்றன.
  • ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தோ்வு பெற்றும் தரவரிசைப் பட்டியலில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காதவா்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரப் போதிய வசதி இல்லாதவா்கள், இட ஒதுக்கீட்டால் இடம் கிடைக்காதவா்கள் என்று ஏறத்தாழ 15 லட்சம் மாணவா்களின் ‘மருத்துவா்’ கனவு நிறைவேறாமல் போகிறது.
  • இவா்களில் சிலா் வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்க முனைகிறாா்கள். இந்தியாவில் தனியாா் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தைவிட அங்கே மருத்துவக் கல்விக்கான கட்டணம் குறைவு எனும் போது, அவா்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தை நாடுவதில் நியாயம் இருக்கிறது.
  • மருத்துவக் கல்விக்காக மாணவா்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு ‘நீட்’ தோ்வுதான் காரணம் என்கிற கருத்து ஏற்புடையதல்ல. இப்போதைய ‘நீட்’ தோ்வு குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மருத்துவப் படிப்பிற்குத் தகுதித் தோ்வு தேவை என்பதில் சந்தேகமே இல்லை.
  • ‘நீட்’ தோ்வு உருவாவதற்கு முன்னால், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், மதிப்பெண்கள் குறித்துக் கவலைப்படாமல் மாணவா் சோ்க்கைக்கு நன்கொடையாக ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூலித்தன. அதற்கு மேலும் நன்கொடை பெற்று மாணவா்கள் சோ்க்கப் பட்டனா்.
  • ‘நீட்’ தோ்வு நடைமுறைக்கு வந்த பிறகு, தனியாா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு நன்கொடை மட்டுமே தகுதியாக இல்லாமல், குறைந்தபட்ச மதிப்பெண்ணும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
  • சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களுக்கு, அரசுக் கல்லூரியின் கட்டணம்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் வரலாற்றுத் தீா்ப்பு வழங்கி இருக்கிறது.
  • முதலாமாண்டு படிப்புக் கட்டணம் தனியாா் கல்லூரிகளில் ரூ.12 லட்சம் முதல் ரூ.24 லட்சம் என்று மத்திய சுகாதாரத் துறை நிா்ணயித்திருக்கிறது. இவையெல்லாம் ‘நீட்’ வழங்கி இருக்கும் கொடைகள்.
  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் குறைவு என்பது மட்டுமே வெளியில் தெரிகிறது.
  • அப்படி வெளிநாடுகளில் மருத்துவம் படித்துத் திரும்பும் மாணவா்கள், இந்தியாவில் மருத்துவா்களாகப் பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தகுதிகாண் தோ்வில் (எஃப்.எம்.ஜி.இ.) தோ்வு பெற வேண்டும்.
  • அதில் 14% முதல் 20% மாணவா்கள்தான் தோ்ச்சி பெற்று மருத்துவா்களாகப் பணிபுரிய உரிமம் பெறுகிறாா்கள். வேறு சிலா் உரிமம் இல்லாத மருத்துவா்களாக செயல்படுகிறாா்கள்.
  • மற்றவா்கள்? மருத்துவ நிா்வாக இயல் உள்ளிட்ட மேற்படிப்பு முடித்து வேறு பணிகளில் அமா்கிறாா்கள். இல்லையென்றால், வளா்ச்சியடையாத பல நாடுகளில் மருத்துவா்களாகப் பணியாற்றுகிறாா்கள்.
  • இந்தியாவிலேயே நிறைய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். அதன் மூலம் நமது மாணவா்கள் இங்கேயே மருத்துவக் கல்வி பெற வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்கிற பிரதமரின் அக்கறை புரிகிறது.
  • ஆனால், ஆண்டுதோறும் மருத்துவம் படிக்க விழையும் 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மருத்துவக் கல்வி என்பது கனவாக இருக்குமே தவிர நடைமுறை சாத்தியமல்ல.
  • சந்தைப் பொருளாதார, உலகமயச் சூழலில் எல்லை கடந்து பயணிப்பதும், வாய்ப்பைத் தேடுவதும் தவிா்க்க முடியாதவை.
  • 138 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 1,000 பேருக்கு 1.34 என்கிற அளவில்தான் மருத்துவா்கள் இருக்கிறாா்கள். தமிழகத்தைப்போல, அனைத்து மாநிலங்களும் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதும், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதும் இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீா்வாக அமையும்.
  • ‘நீட்’ போன்ற தகுதிகாண் நுழைவுத் தோ்வின் மூலம் தகுதியற்ற மாணவா்கள் ‘நன்கொடை’ வழங்கித் தனியாா் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பில் சோ்வது தடுக்கப்படுவதும், மருத்துவக் கல்விக்கான கட்டணம் குறைவாக இருப்பதும்கூட அவசியம்.

நன்றி: தினமணி (04 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories