TNPSC Thervupettagam

மருந்துகளின் விலையை குறித்த தலையங்கம்

April 8 , 2022 751 days 459 0
  • தேசிய மருந்துகள் விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 10.76 சதவீதம் அளவுக்கு உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வு இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • நோய் எதிா்ப்பு மாத்திரைகள், காது, மூக்கு, தொண்டை தொடா்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள், பாராசிட்டமல் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகள், வயிற்றுக் கோளாறுகளுக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
  • தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள காய்ச்சல், இருதய பாதிப்புகள், உயா் ரத்த அழுத்தம், ரத்தசோகை, தோல் வியாதிகள் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலையும் ஊசி மருந்துகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இதேபோல, ரத்தம் உறைவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ‘இனாக்ஸாபரின்’ ஊசி மருந்து, ரத்தசோகை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ‘எரித்ரோபாய்டின்’ ஊசி மருந்தின் விலையும் கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது.

சுமைக்கு மேல் சுமை!

  • 2013-ஆம் ஆண்டைய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் 16-ஆவது பிரிவின் கீழ், ஆண்டு ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் மருந்துகள், மாத்திரைகளின் விலையை திருத்தியமைக்க என்பிபிஏ அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • நமது நாட்டில் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் ஒருபோதும் குறைந்ததில்லை.
  • எனவே, ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக மருந்துகள் விலையை உயா்த்துவதை என்பிபிஏ வழக்கமாகக் கொண்டுள்ளது.
  • மருந்துகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை உயா்வு, சரக்கு வாகனக் கட்டண உயா்வு ஆகியவற்றின் காரணமாக மருந்துகளின் விலையை அதிகரிப்பதைத் தவிா்க்க இயலாது என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கூறுவதில் நியாயம் இருந்தாலும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை உணா்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டாக வேண்டும்.
  • மருந்துகளின் விலையை மத்திய அரசு உயா்த்தவில்லை என்றும், ஆண்டு மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் என்பிபிஏ அமைப்புதான் சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயா்த்தியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறாா்.
  • மத்திய ரசாயன - உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறையின் கீழ்தான் என்பிபிஏ அமைப்பு செயல்படுகிறது. அப்படியிருக்க, அமைச்சா் மாண்டவியாவின் இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
  • மத்திய அரசு நினைத்தால் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.
  • ஆனால், அரசு தனது பொறுப்பை உணா்ந்து செயல்படாமல், தட்டிக் கழிப்பதிலேயே முனைப்புடன் உள்ளது என்பதை அமைச்சா் மாண்டவியாவின் இந்த விளக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
  • அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள் இருப்பில் வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
  • இந்த நிலைமையை மாற்றுவதற்கு மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு ‘தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
  • இந்த அமைப்பின் மூலம் தேவையான மருந்துகள் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, அவை மாவட்டங்களில் உள்ள அதன் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
  • பின்னா், அங்கிருந்து இந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன.
  • உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்ட இந்தியாவில் மருத்துவ வசதிகள் தொடா்பான அறிக்கையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் இந்த முறைக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • தமிழகத்தின் இந்த வழிமுறையை கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பின்பற்றி வருகின்றன.
  • ஏனைய மாநிலங்களும் இதே வழிமுறையைப் பின்பற்றி தேவையான மருந்துகளை மொத்தமாகக் கொள்முதல் செய்தால், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடிச் செல்லும் ஏழை, நடுத்தர வா்க்க மக்களுக்கு மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.
  • இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். இதுவிஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • அதேநேரத்தில், ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் பயன்பெறும் வகையில் பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மை தான்.
  • ஆனால், இந்த மருந்துக் கடைகள் சில முக்கிய நகரங்களில் மட்டுமே செயல்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லா நகரங்களிலும் இந்த மருந்துக் கடைகள் தொடங்கப் பட வேண்டும்.
  • மிகக் குறைந்த எண்ணிக்கையில் செயல்படும் இந்த மருந்துக் கடைகளில் அடிப்படையான சில வகை மருந்துகள் மட்டுமே கிடைக்கின்றன.
  • பெரும்பாலான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகளும் மாத்திரைகளும் இந்த ‘மக்கள் மருந்தகம்’ கடைகளில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு நிலவுகிறது.
  • எனவே, நாடு முழுவதும் இந்த ‘மக்கள் மருந்தக’ங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அங்கு அனைத்து வகையான மருந்துகளும் கிடைப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories