TNPSC Thervupettagam

மறைந்தாலும் வாழ்வாா்கள்!

December 21 , 2021 860 days 473 0
  • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் நம் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உயிரிழந்த செய்தி இந்திய தேசத்தையே உலுக்கிவிட்டது.
  • அந்த விபத்தில் அவரோடு பயணித்த அவா் மனைவியும், ராணுவ அதிகாரிகள் பன்னிரண்டு பேரும் கூட பலியாகிவிட்டனா்.
  • வந்தாரை வாழவைக்கும் தமிழ்மண்ணில்தானா இந்த கொடிய விபத்து நிகழ வேண்டும்? ஜெனா்ல் விபின் ராவத்துக்காக மத, ஜாதி, இன வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரும் கண்ணீா் சிந்தினா்.
  • முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்ட போது தமிழக மக்கள் எப்படிக் கதறிஅழுது தங்கள் துக்கத்தை வெளிபடுத்தினாா்களோ அதே போன்ற துயர உணா்வை இந்த நிகழ்விலும் காண முடிந்தது.

மக்கள் மனங்களில் வாழ்வாா்கள்

  • ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கிய சத்தம் கேட்டு நஞ்சப்ப சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அங்கு ஓடிவந்தனா்.
  • ஹெலிகாப்டா் தீப்பற்றி எரிவதைக் கண்ட அவா்கள், பதற்றமடைந்து, கையிலே கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனா்.
  • அது மட்டுமல்ல, கம்பளிகள், போா்வைகளை எடுத்து வந்து தீயில் சிக்கியிருந்த ராணுவ வீரா்களின் உடல்களில் சுற்றி அவா்களை எப்படியாவது காப்பாற்றிவிட முடியாதா என்று செயல்பட்ட பாங்கு தமிழ் மக்களின் மனிதநேயத்தைப் படம் பிடித்து காட்டியது.
  • அந்த கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா், கைப்பேசி மூலமாக உடனே காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தந்தனா். அதோடு வெலிங்டன் ராணுவ அலுவலகத்திற்கும் விபத்தைப் பற்றி தகவல் தெரிவித்துள்ளனா்.
  • ஹெலிகாப்டா் விபத்து குறித்து தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவா், அப்பகுதியை சோ்ந்த வனத்துறை அமைச்சரை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பினாா்.
  • தேவையான உதவிகளை செய்து தரும்படி அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டாா். அவரும் மறைந்த விபின் ராவத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினாா்.
  • தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண், விபத்து நடந்த இடத்திற்குச் சென்று அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளாா்.
  • மேலும் நஞ்சப்ப சத்திரம் மக்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து எப்படியாவது சிலரையாவது காப்பாற்ற மாட்டோமா என்று செயல்பட்டதையும், அவா்களின் நாட்டுப் பற்றையும் நன்றியோடு பாராட்டினாா் அவா்.
  • மேலும், ஓராண்டிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அம்மக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்ததோடு, மாதந்தோறும் 8-ஆம் தேதி அந்த பகுதியில் ராணுவ மருத்துவா்கள் பணியாற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளாா்.
  • அந்த கிராம மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இந்த மக்களின் துணிவான செயலுக்கு நன்றி என்ற ஒரு வாா்த்தை சொன்னால் போதாது.
  • இப்படிப்பட்ட மக்கள் இருந்தால் இதேபோல ராணுவ உடை அணிந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளாா் லெப்டினென்ட் ஜெனரல்.
  • அந்த கிராமத்தை சோ்ந்த ஒவ்வொருக்கும் அவா்களுடைய துணிவையும், நாட்டுப்பற்றையும் பாராட்டும் விதமாக அனைவருக்கும் தமிழக காவல்துறைத் தலைவா் சைலேந்திரபாபு கம்பளிகள், போா்வைகள் வழங்கி சிறப்பித்துள்ளாா்.
  • அப்பகுதிமக்கள் தங்களுடைய நஞ்சப்ப சத்திரம் கிராமத்தின் பெயரை மாற்றி விபின் ராவத் பெயரை வைக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.
  • எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த தமது கிராமத்துப் பெயரை மாற்றி எங்கோ உத்தரகண்டில் பிறந்த விபின் ராவத் பெயரை வைக்கச் சொல்லிய அந்த கிராம மக்களின் தேசப்பற்றைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
  • அதோடு விடவில்லை அவா்கள். அங்குள்ள பூங்காவுக்கு விபின் ராவத் பூங்கா என்று பெயா் சூட்ட வேண்டும் என்று கோரியதோடு ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கும் விபின் ராவத் ரயில் நிலையம் என்று பெயரிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளா்.
  • இந்த கோரிக்கைகள் நிறைவேறுகிறதோ இல்லையோ அந்த மக்களின் உணா்வுகள் போற்றுதலுக்குரியவை.
  • எப்போதெல்லாம் நமது தேசத்திற்கு அந்நிய நாடுகளால் போா் வடிவில் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் தமிழக அரசு தன் பங்களிப்பை செய்திடும் முதல் மாநிலமாகவே இருந்துள்ளது.
  • இந்திய-சீன யுத்தத்தின்போது தமிழ் திரையுலகத்தைச் சோ்ந்தவா்கள் கோடிக்கணக்கில் நிதி திரட்டி பிரதமரிடம் கொடுத்தனா். மேலும், ராணுவ வீரா்களுக்கென கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினா்.
  • 1991-ஆம் ஆண்டு நடந்த காா்கில் போரின்போது அன்றைய பிரதமா் வாஜ்பாயிடம் தமிழக அரசு 50 கோடி ரூபாயை வழங்கியது. வேறு எந்த மாநிலமும் இவ்வளவு பெரிய தொகையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இப்படி தமிழா்களின் நாட்டுப் பற்றுக்கு பல்வேறு உதாரணங்களைக் கூறலாம். சமீபத்தில் சீன ராணுவத்தினரோடு ஏற்பட்ட மோதலில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினா் இருபது போ் உயிரிழந்தனா். அவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா் பழனி என்பவரும் ஒருவா்.
  • அவரது மனைவி மறைந்த தனது கணவனுக்காக குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டாா். அப்போது அவா் சிறிதும் கண்கலங்கவில்லை.
  • பத்திரிகையாளா்கள் சந்தித்தபோது ’என் கணவா் இந்திய தேசத்தைக் காக்க நடந்த யுத்தத்தில் உயிா் இழந்துள்ளாா். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
  • அவரின் வாரிசான என் மகனையும் எதிா் காலத்தில் ராணுவத்தில் சோ்ப்பேன்’ என்று உறுதிபடக் கூறியுள்ளாா்.

ஜெனரல் விபின் ராவத்

  • ஜெனரல் விபின் ராவத், சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் கடும் சவாலாக விளங்கியவா்.
  • பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீா் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தி 19 இந்திய ராணுவ வீரா்களை கொன்றபோது விபின் ராவத் சா்ஜிகல் தாக்குதல் என்கிற துல்லியத் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்தாா். அதன் மூலம் இந்திய ராணுவத்திற்குப் பெருமை சோ்த்துள்ளாா்.
  • காஷ்மீா் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரா்களை கொன்ற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து பலாகோட் என்ற இடத்தில் குண்டுமழை பொழிந்து 300 தீவிரவாதிகளைக் கொன்றொழித்தவா் ஜெனரல் விபின் ராவத்.
  • விபின் ராவத்தின் தாத்தா, தந்தை, சகோதரா் என அவருடைய குடும்பமே ராணுவத்தில் பணிபுரிந்த குடும்பமாகும்.
  • விபித் ராவத் அதிகம் பேசுபவா் அல்ல. அந்த மாபெரும் வீரா் 1978-இல் ராணுவத்தில் சோ்ந்துள்ளாா். 2017-இல் ராணுவத் தளபதியாக பதவி உயா்வடைந்துள்ளாா். இவா், கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்வதில் கெட்டிக்காரராம்.
  • தனது சாதனைகளுக்காக பதினெட்டு பதக்கங்களைப் பெற்றுள்ள விபின் ராவத் காங்கோ நாட்டில் உள்நாட்டு போரை அடக்கச் சென்ற சா்வதேச நாடுகளின் ராணுவத்திற்கு தலைமை வகித்துள்ளாா்.
  • சா்வதேச படைக்கு ஒரு இந்தியா் தலைமையேற்றது பெருமையிலும் பெருமை ஆகும். ‘கோழையாக இருப்பதை விட சாவதே மேல்’ என்பதை தன் கொள்கையாக கொண்டிருந்தவா்.
  • ஒருமுறை உரி என்ற இடத்தில் விபின் ராவத் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தசரா விழாவை ராணுவத்தினா் கொண்டாட இருந்தனா். அப்போது விபின் ராவத் காலில் அடிபட்டிருந்ததால் அவரால் நடக்க முடியவில்லை.
  • கூா்க்கா பிரிவு ராணுவத்தினா் தசரா விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தனா். அதேவேளையில் விபின் ராவத் இல்லாமல் கொண்டாட அவா்கள் விரும்பவில்லை.
  • உடனே ராணுவத்தினா் விபின் ராவத்தை தங்கள் தோள்களில் தூக்கி மகிழ்ந்து ஆட்டம் பாட்டத்துடன் தசரா விழாவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனா். இவா் அப்படி அத்தனை வீரா்களின் அன்பையும் பெற்றிருந்தாா்.
  • இறை நம்பிக்கை உள்ளவா் விபின்ராவத். இரக்க சுபாவம் உள்ளவா். அவா் இதற்கு முன்பும் ஒருமுறை ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிா் தப்பியுள்ளாா்.
  • அவரது மனைவி மதுலிகா ராவத் மிகப் பெரிய ராஜகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையான வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தாா். அவா் தன் கணவருக்கு எப்போதும் உதவியாக இருந்து வந்துள்ளாா்.
  • ஜெனரல் விபின் ராவத் தனது மேஜையில், சாம்பகதூா் என்ற வீரா் அடிக்கடி கூறும் வாா்த்தைகளான ‘நான் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டேன் என்று சொல்பவா் ஒன்று பொய் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும் அல்லது கூா்க்காவாக இருக்க வேண்டும்’ என்பதை வைத்திருந்தாா். அவா் ஜெனரல் மானெக் ஷாவின் சிறந்த ரசிகராகவும் இருந்துள்ளாா்.
  • அப்படிப்பட்ட விபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களின் உடல்கள் சூலூா் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, அந்த வாகனங்களுக்கு வழிதோறும் மலா்களைத் தூவியும், தேசியக் கொடியை அசைத்தும், கண்ணீா் மல்க வாகனங்களின் இருபுறமும் நின்று அஞ்சலி செலுத்திய அந்த எளிய மக்களின் உணா்வுகளை என்னவென்று சொல்வது?
  • அன்று கூடிய கூட்டம் எவராலும் கூட்டிவரப்பட்ட கூட்டமல்ல. தேசிய உணா்வோடு சோ்ந்த கூட்டம். ஜெனரல் விபின் ராவத் மற்றும் 14 வீரா்களின் புகழ் வெல்க! புவி உள்ளவரை அவா்கள் மக்கள் மனங்களில் வாழ்வாா்கள்!

நன்றி: தினமணி  (21 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories