TNPSC Thervupettagam

மலேரியா தடுப்பூசி இந்தியாவுக்குப் பயன்படுமா?

October 20 , 2021 944 days 691 0
  • முப்பது ஆண்டு கால கடுமையான ஆய்வுக்குப் பின்பு, மலேரியாவுக்குத் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் கொடுத்துள்ள செய்தி அண்மையில் வைரல் ஆனது.
  • RTS,S/AS01 எனும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி. ‘மஸ்குயுரிக்ஸ்’ (Mosquirix) எனும் வணிகப் பெயரில் கிளாக்ஸோஸ்மித்லைன் (GlaxoSmithKline) நிறுவனமும் ‘பாத்’ (PATH) உலக நலச்சேவை அமைப்பும் இணைந்து இதைத் தயாரித்துள்ளன.
  • யுனிசெஃப் உள்ளிட்ட பல அறக்கட்டளைகளின் நிதியுதவியுடன் இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
  • 2001-ல் இந்தத் தடுப்பூசியை ஆய்வு நோக்கில் குழந்தைகளுக்குப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இதன் மூன்று கட்ட ஆய்வு முடிவுகள் திருப்தியாக இருந்ததால், 2015-ல் ஐரோப்பிய மருந்துகள் முகமை (EMA) இந்தத் தடுப்பூசியின் அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்தன.
  • ஆப்பிரிக்காவில் கானா, கென்யா, மலாவி ஆகிய நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட 8 லட்சம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தி முன்னோட்டம் பார்க்கப்பட்டது.
  • அங்கு இதைச் செலுத்திக்கொண்டவர்களில் 10-ல் 4 பேருக்குக் கடந்த 4 ஆண்டுகளாக மலேரியா ஏற்படவில்லை; மரணத்தை நெருங்கிய குழந்தைகளில் 10-ல் 3 பேர் பிழைத்துக் கொண்டனர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
  • இதனால், இப்போது ஆப்பிரிக்கா முழுவதிலும் இதைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி 2019-ல் மட்டும் உலகில் 22.9 கோடிப் பேரை மலேரியா தாக்கியது. 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் மரணமடைந்தனர்.
  • இவர்களில், 2,74,000 பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பதுதான் பெருந்துயரம். அதிலும் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்கக் குழந்தைகளிடம் இந்த மரண விகிதங்கள் மிக அதிகம்.

தடைகளைத் தாண்டிய தடுப்பூசி

  • ‘பிளாஸ்மோடியம்’ எனும் ஒட்டுண்ணிகள்தான் மலேரியாவுக்கு மூல காரணம். இந்தக் கிருமிகள் உள்ள பெண் அனாபிலிஸ் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.
  • அதைச் சரியாக கவனிக்காவிட்டால், கடுமையான ரத்தசோகை ஏற்படும். மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு வரும். உயிருக்கு ஆபத்து நெருங்கும்.
  • மனித இனத்துக்கு இத்தனை ஆபத்துகளை ஏற்படுத்துகிற மலேரியாவுக்குத் தடுப்பூசி தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருந்தன.
  • காரணம், பிளாஸ்மோடியம் கிருமிகளில் ஃபால்சிபேரம், ஓவேல், விவாக்ஸ், மலேரியே என மொத்தம் 4 வகைகள் உள்ளன.
  • ஒவ்வொரு வகைக் கிருமிக்கும் தனித்தனியாகத் தடுப்பூசி தயாரிப்பது கடினம். அடுத்து, தவளை, வண்ணத்துப்பூச்சி போன்றவற்றுக்குப் பல வளர்ச்சிப் பருவங்கள் உள்ளதுபோல் மலேரியா கிருமிகளுக்கும் ஸ்போராசாய்ட், மீராசாய்ட் எனப் பல பருவங்கள் உண்டு.
  • இவற்றில் எந்தப் பருவத்தைத் தடுக்கத் தடுப்பூசி தயாரிப்பது என்பதிலும் ஆய்வாளர்களுக்குத் தடுமாற்றம் இருந்தது.
  • இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி ‘மஸ்குயுரிக்ஸ்’ தடுப்பூசி செயல்முறைக்கு வந்துள்ளது நவீன மருத்துவத்தின் முன்னேற்றத்தையே காட்டுகிறது.

மரபணு மறுஇணைப்பு

  • மலேரியா ஒட்டுண்ணிகளில் நோய்ப் பரவல் புள்ளிவிவரப்படி ஃபால்சிபேரம் வகைதான் அதிக ஆபத்தைத் தருகிறது. ஆப்பிரிக்கக் குழந்தைகளிடம் இந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது.
  • எனவே, இந்த வகைக் கிருமிகளுக்கு எதிரான தடுப்பூசியை ‘மரபணு மறுஇணைப்புத் தொழில்நுட்பம்’ (Recombinant DNA Technology) மூலம் தயாரித்தனர்.
  • ஃபால்சிபேரம் கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும் முன்பு ஸ்போராசாய்ட் பருவத்தில் இருக்கிறது. அப்போது அதன் RTS எனும் புரதம் சார்ந்த மரபணுவின் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்துக்கொள்கின்றனர்.
  • பின்னர். ஈஸ்ட் செல் மரபணுவில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் முதலில் பிரித்தெடுத்த மரபணுவை இணைத்துவிடுகின்றனர். இப்படி இணைக்கப்பட்ட புதிய மரபணுவுடன் ஹெபடைட்டிஸ்–பி கிருமியின் S எனும் புரதக்கூறை இணைத்து, ஈஸ்ட் செல்களுக்குள் செலுத்துகின்றனர்.
  • பிறகு, இந்த ஈஸ்ட்டுகளைச் சோதனைச்சாலையில் வளர்த்து, ASO1 எனும் துணைப்பொருளைக் (Adjuvant) கலந்து தடுப்பூசி தயாரிக்கின்றனர்.
  • இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஃபால்சிபேரம் கிருமிகளுக்கு எதிரணுக்கள் (Antibodies) தோன்றிவிடுகின்றன.
  • அதனால் இவர்களுக்கு அடுத்த முறை கொசுக்கடி மூலமாக அந்தக் கிருமிகள் ரத்தத்துக்கு வரும்போது, இந்த எதிரணுக்கள் அவற்றை அழித்து, கல்லீரலுக்குச் செல்வதைத் தடுத்துவிடுகின்றன.
  • இதன் பலனால், மலேரியா ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இப்போதைக்கு இந்தத் தடுப்பூசியை ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவுக்குப் பயன்படுமா?

  • 2019-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 56 லட்சம் பேருக்கு மலேரியா ஏற்பட்டது. இவர்களில் ஃபால்சிபேரம் வகையால் எத்தனை பேருக்கு மலேரியா வந்தது எனும் புள்ளிவிவரம் இல்லை.
  • ‘மஸ்குயுரிக்ஸ்’ தடுப்பூசியைக் கண்டுபிடித்தது மருத்துவச் சாதனைதான் என்றாலும், இப்போதைக்கு இது ஃபால்சிபேரம் மலேரியாவை மட்டுமே தடுக்கும். அதிலும் 40% வரைதான் தடுப்பாற்றல் கொடுக்கும். இனிமேல் இதன் மேம்பட்ட வடிவங்கள் வரலாம்.
  • அப்போது பிறவகை மலேரியா ஒட்டுண்ணிகளைத் தடுக்கலாம். இதைக் குழந்தை பிறந்த 5-ம் மாதம் தொடங்கி 4 தவணைகள் செலுத்த வேண்டும். நான்கு தவணைகளும் சரியாகச் செலுத்திக் கொண்டவர்களுக்குத்தான் ஃபால்சிபேரம் மலேரியா ஏற்படுவதில்லை.
  • ஆகவே, மலேரியா ஒழிப்புக்குத் தடுப்பூசியை மட்டும் நம்பாமல், தெருக்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்துவதும் முக்கியம்.
  • அடுத்து, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்க முன்வந்துள்ளது. நோய்த்தடுப்பாற்றல் தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதால், இதை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மூன்று கட்ட ஆய்வுகள் இங்கும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அவற்றின் தரவுகளைத் தீர ஆய்வு செய்து, இந்தியாவுக்கு இது பயன்படுமா என்பதை 100% உறுதிசெய்து அனுமதிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கொடுப்பதில் அரசு அவசரம் காட்டியதுபோல் ஆகிவிடக் கூடாது என்பது முக்கியம்.
  • இந்தியாவில் பொதுச்சுகாதாரத்துக்குச் சவாலாக இருப்பதில் மலேரியா முக்கியமானதுதான் என்றாலும், 2000-ல் 2 கோடிப் பேருக்கு ஏற்பட்ட மலேரியா இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது என்பதால், தடுப்பூசி அனுமதி தரும் விஷயத்தில் வணிக நோக்கம் முதன்மையாகிவிடக்கூடாது என்பது மிக முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories