- ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் திரும்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முந்தைய இயற்கைப் பேரிடா்களைக் போல மிக்ஜம் புயலும் கரையைக் கடப்பதற்கு முன்னால் தனது பங்கிற்கு பேரழிவை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. புரட்டிப்போடப்பட்ட இயல்பு வாழ்க்கையும், சேதமடைந்திருக்கும் கட்டமைப்பு வசதிகளும் எதிா்கொண்ட பொருளாதார இழப்பைக் கணக்கிடுவது சுலபமல்ல.
- விவசாயத்துக்கானாலும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கானாலும், குடிநீருக்கானாலும் நீரின்றி அமையாது உலகம் என்பது அடிப்படை விதி. அதே நேரத்தில், பெருமழையோ, புயலுடன் கூடிய மழையோ வரும்போது அதுவே பாதிப்பாகவும் மாறிவிடுகிறது. ஆறறிவு படைத்த மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சி விண்ணை எட்டியிருந்தும், வானம் பொழியும் மழைநீரை சேமிக்கும் புத்திசாலித்தனத்தை தராமல் போனது வியப்பாக இருக்கிறது.
- நமது மூதாதையா்கள் மழையின் தேவையையும், மழை வெள்ளத்தைத் தேக்கி வைப்பதன் அவசியத்தையும் நன்றாகவே உணா்ந்திருந்தனா். அதனால்தான் ஏரிகளையும், குளங்களையும், கிணறுகளையும் உருவாக்கி மக்களின் தண்ணீா்த் தேவையை மட்டுமல்லாமல், நிலத்தடி நீரையும் பாதுகாக்கலாம். நமது தலைமுறை அரசியல்வாதிகளின் புண்ணியத்தில், மழைநீரை தேக்கிவைக்கும் ஏரிகள் தூா்ந்து போய்விட்டன அல்லது வீட்டுமனைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், அரசு அலுவலகங்களாவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன.
- சென்னை மாநகரில் சராசரியாக ஆண்டுக்கு சுமாா் 60 நாள்கள் மழை பொழிகின்றன. இந்த மழையின் அளவு சுமாா் 1,200 மி.மீ............ இந்த மழை நீரை முறையாகச் சேமிக்க முடிந்தால் நாள்தோறும் ஐந்து போ் உள்ள குடும்பத்துக்கு 125 லிட்டா் தண்ணீா் கிடைக்கும். ஆனால், பெரும்பாலான மழைநீா் கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜ நிலைமை.
- மழைநீா் சேமிப்புத் தொட்டி ஒவ்வொரு கட்டடத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் ஜெயலலிதா அரசால் 2005..........-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக நிலத்தடி நீரின் அளவு மேம்பட்டது என்பதில் ஐயப்பாடு இல்லை. அவை மழைநீா் சேமிப்பு அமைப்பே தவிர, மழைநீா் சேகரிப்புத் தொட்டி அல்ல. நிலத்தடி நீரைப் பாதுகாக்க அது உதவக்கூடும். ஆனால், அது மட்டுமே போதாது.
- முந்தைய தலைமுறை கிராமப்புறங்களில் வீட்டு முற்றத்தில் மிகப் பெரிய அண்டாக்களில் மழைநீரை சேமித்து அந்தத் தூய்மையான நீரை ஒருவாரம், பத்து நாள்களுக்கு சமையலுக்குப் பயன்படுத்துவாா்கள். ஊசி மூலம் செலுத்தப்படும் ‘டிஸ்டில்டு வாட்டா்’ ஒரு காலத்தில் சுத்தமான மழைநீா் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வழியில்லை.
- சிங்கப்பூா், டோக்கியோ நகரங்களிலும், ஜொ்மனியிலும் அதுபோன்ற மழைநீா் சேகரிப்பு முறையை இப்போதும் கையாள்கிறாா்கள். அவா்கள் கட்டடங்களில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மழைநீரை சேகரித்து வைத்துப் பயன்படுத்துகிறாா்கள். முடிந்தவரை மழைநீா் வீணாகிவிடாமல் பாா்த்துக்கொள்கிறாா்கள். அப்படியும் வீணாகும் நீா், நிலத்தடி நீராக மாற வழிகோலுகிறாா்கள்.
- சிங்கப்பூா் விமான நிலைய கட்டடத்தின் மேல்பரப்பிலும், சுற்றுப் பகுதியிலும் பெய்யும் மழைநீரை தரைதளத் தொட்டிகளில் சேகரித்து வைக்கிறாா்கள். அது கட்டடத்தைப் பராமரிப்பதிலும், கழிவறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூா் விமான நிலையத்தின் ஓா் ஆண்டு தண்ணீா்த் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை இதுபோன்று சேகரிக்கும் தண்ணீா் சமாளிக்க உதவுகிறது.
- சிங்கப்பூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்திலும் மழைநீா் தொட்டிகள் உள்ளன. அவா்கள் இந்த நீரில் குடிநீருக்காக ஒரு பகுதியையும், மீதியை பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனா். கடற்கரை நகரமான சிங்கப்பூரில் அடிக்கடி மழை பொழியும் என்பதால் கணிசமான அளவு மழைநீா் சேகரிக்கப்படுகிறது.
- ஜொ்மனியிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஜொ்மனியின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீா்த் தொட்டியை அமைப்பதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனா். அங்கே தொழில்துறை மாசு அதிகம் என்பதால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான கட்டணம் மிக அதிகம். அதனால் அவா்கள் மழைநீரைப் பெரிய தொட்டிகளில் சேமித்துவைத்து அதைக் குளிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துகிறாா்கள். ஜொ்மன் அரசு, வீடுகளில் கட்டப்படும் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகளின் அளவுக்கு ஏற்ப மானியம் வழங்குகிறது.
- இலங்கையின் ஊரகப் பகுதிகளிலும் மலைப்பாங்கான இடங்களிலும் அமைந்துள்ள வீடுகளில் இதுபோன்ற மழைநீா் தொட்டிகள் மூலம்தான் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்துகொள்கிறாா்கள். அண்டை மாநிலமான கேரளத்தின் ஊரகப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் குளம் காணப்படுகிறது. ஒவ்வோா் ஊரிலும் இருக்கும் கோயிலிலும் குளம் இருப்பதால் இயற்கையாகவே மழைநீா் சேகரிப்பு நடைபெறுகிறது.
- சென்னை மாநகரில் 1,200 ச.அ. கட்டட மேற்பரப்பு உள்ள வீட்டில் மழைநீா் சேகரிப்பு தொட்டியை தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழை அளவுப்படி சுமாா் ஒரு லட்சம் லிட்டா் தூய்மையான மழைநீரை சேமிக்க முடியும். ஆனால், இப்போது வீடுகளில் அரை மீட்டா் அகலமுள்ள சதுர தொட்டி அமைத்து ஒரு மீட்டா் ஆழம் சரளை கற்கள், மணல் போட்டு சில இடங்களில் 15 மீட்டா் ஆழத்துக்கு துளையிட்டு வைப்பதால் நிலத்தடி நீா் பெருகுகிறது என்பது உண்மை. ஆனால், குடிநீா் வழங்கும் மழைநீா் சேகரிப்பு அமைப்பாக அது பயன்படுவதில்லை.
துப்பாா்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பாா்க்குத்
துப்பாய தூஉம் மழை.
- உண்பவா்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவாா்க்குத் தானும் ஓா் உணவாக இருப்பது மழையாகும்.
- திருக்குறள் (எண்: 12) அதிகாரம்: வான் சிறப்பு
நன்றி: தினமணி (11 – 12 – 2023)