TNPSC Thervupettagam

மாநிலத் தலைகள் - சிவராஜ் சௌகான்

November 21 , 2023 166 days 128 0
  • முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.
  • தேர்தல் முடிவு எப்படி வந்தாலும், சிவராஜ் சௌகானின் நிலை என்னவாகும்.
  • மத்திய பிரதேசத்தின் மிகப் பெரிய கேள்வி இதுதான்.
  • மாநிலத்தின்  நீண்ட கால முதல்வர் அவர். காங்கிரஸின் கோட்டையாக இருந்த மத்திய பிரதேசத்தை பாஜக பக்கம் திருப்பியவர். இந்தத் தேர்தலில் கட்சியின் தலைமை சௌகான் தன்னுடைய முதல்வர் முகம் அல்ல என்பதைப் பல வகைகளிலும் சொல்லிவிட்டது. ‘மார்க தர்ஷ்க் மண்டல்’ என்று அத்வானி போன்று முடங்குவதற்கு சௌகானுக்கு இன்னும் வயதாகிவிடவில்லை; அரசியலருக்கு நம் நாட்டில் 63 பெரிய வயது இல்லையே? ‘சௌகான் பதுங்கி தாக்குவார்’ என்கிறார்கள்.
  • செய்யக்கூடியவர்தான்; ஒருகாலத்தில் மோடிக்கு இணையாகப் பேசப்பட்டவர்.

சாமானியரின் வருகை

  • பாஜகவுக்குள் எளிய பின்னணியிலிருந்து வந்த தலைவர்களில் ஒருவர் சௌகான். மத்திய பிரதேசத்தின் சிஹார் கிராமத்தில் 1959இல் ஒரு விவசாயக் குடும்பத்தில், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் பிறந்தவர். சௌகான் சார்ந்த கிரார் சமூகம் அப்படி ஒன்றும் எண்ணிக்கை பலம் மிக்கது இல்லை.
  • நன்றாகப் படிக்கக் கூடியவர். போபாலில் உள்ள பரகத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் படித்தார் சௌகான். அதிக மதிப்பெண்களுக்காகத் தங்கப் பதக்கம் வென்றார். விவசாய வேலைகளிலும் நல்ல தேர்ச்சி உண்டு. இளவயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பினால் தாக்கம் பெற்றவரை மாணவர் சங்க அரசியல் உள்வாங்கியது. நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையையும் சிறை வாழ்க்கையையும் எதிர்கொண்டார். 

மத்தியிலிருந்து மாநிலத்துக்கு

  • காங்கிரஸ் ஆட்சி வலுவானதாக அப்போது மத்திய பிரதேசத்தில் இருந்தது. தன்னுடைய 31வது வயதில் சட்டமன்ற உறுப்பினரானார் சௌகான். அவருடைய பேச்சுத் திறனைப் பார்த்த தேசிய தலைவர்கள் டெல்லி அரசியல் நோக்கி அவரைத் திருப்பினார்கள். விதிஷா மக்களவைத் தொகுதியிலிருந்து ஐந்து முறை பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் சௌகான்.
  • மத்திய பிரதேசத்தை 2000 தொடக்கத்தில் பாஜக வென்றது. மேலிடத்தால் முதல்வர் பதவியில் நியமிக்கப்பட்ட உமா பாரதி, பாபுலால் கௌர் ஆகியோர் சொதப்பினார்கள். சிக்கலான ஒரு தருணத்தில் மாநில அரசியல் நோக்கி சௌகானை அனுப்பியவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்.
  • சௌகான் தன்னுடைய நிர்வாகத் திறனால் பாஜகவின் கோட்டையாக மத்திய பிரதேசத்தை ஆக்கினார்.

பிமாருவின் ‘ம’

  • சௌகான் பொறுப்பேற்ற காலகட்டத்தில் மாநிலம் புதிய நெருக்கடியை எதிர்கொண்டது. மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டபோது, நிலக்கரிச் சுரங்கங்கள் உள்பட கணிசமான வளங்களை இழந்திருந்தது. ‘பிஜ்லி (மின்சாரம்), பானி (தண்ணீர்), சடக் (சாலை இணைப்பு) - மூன்றுக்கும் நான் உத்தரவாதம்’ என்று சொன்ன சௌகான் தன்னுடைய ஆட்சியில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தினார். மின்னுற்பத்தி திட்டங்களுக்கும், பாசனக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் முன்னுரிமை தந்தார்.  மாநிலத்தில் வேளாண் வளர்ச்சி பெருகியது.
  • சமூக – பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியிருந்த பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தர பிரதேசத்தை ‘பிமாரு’ என்று அந்த மாநிலங்களின் முதல் எழுத்துகளால் சுருக்கமாக அழைத்தனர். பிமாரு நிலையிலிருந்து மத்திய பிரதேசம் மீள சௌஹான் முக்கியக் காரணம். ஏழைகளுக்கு ஒரு ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசி, ஏழைப் பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால உதவி, ஏழைக் குடும்பங்களுக்கு கட்டணமில்லா மின்சாரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்று மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியவர் சௌஹான்.

நதிநீர் இணைப்பு

  • சௌகானுடைய ஆட்சிக் காலத்தில்தான் நர்மதை நதியிலிருந்து ஷிப்ரா நதிக்குத் தரைக்கடியில் குழாய்களைப் புதைத்து உபரி நீரைக் கொண்டுசென்று நதிநீர் இணைப்பைச் செய்து முடித்தனர். இதனால் ஷிப்ரா நதிப் பாசனப் பகுதிகள் செழுமை அடைந்ததுடன் கோதுமை விளைச்சலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாபைப் பின்னாளில் பின்னுக்குத் தள்ளியது மத்திய பிரதேசம். 80,000 கி.மீ. நீளத்துக்கு மாநிலத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டன. ஏராளமான கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்பட்டன.
  • 2011-12இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே, நாட்டின் கோதுமைக் களஞ்சியம் மத்திய பிரதேசம் என்று பாராட்டி மாநிலத்துக்கு விருது வழங்கியது. 2017வது ஆண்டில் உச்சபட்சமாக 30 லட்சம் ஹெக்டேரில் (ஒரு ஹெக்டேர் இரண்டரை ஏக்கர்) சாகுபடி நிகழ்ந்தது. எட்டு ஆண்டுகளில் மூன்றரை மடங்கு உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது.
  • 2014 மக்களவைத் தேர்தலில் மோடி பாஜக முகம் ஆக்கப்பட்டபோது, மோடியைக் காட்டிலும் சௌகான் சிறந்த நிர்வாகி என்று சொன்னார் அத்வானி. பல பத்திரிகைகள் ஒப்பாய்வு அடிப்படையில் அது சரிதான் என்றன.

பின்னடைவு

  • மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டப் பகுதியில் கையாளப்பட்ட நுண்பாசனத் தொழில்நுட்பத்துக்கு தேவாஸ் மாதிரி என்றே பெயரிட்டுப் பாராட்டினர். அதன் காரணமாக மாநிலத்துக்குள் புதிய பசுமைப் புரட்சி ஏற்பட்டது. 2011-12இல் உணவு தானியங்களின் உற்பத்தி 200 லட்சம் டன்கள் என்ற சாதனையை எட்டியது. 2014-15 நிதியாண்டின்போது நாட்டிலேயே உச்சபட்ச ஜிடிபி 10.19% மத்திய பிரதேசம். மாநிலத்தில் ஏற்பட்டது. ஆனால், இந்த வளர்ச்சி இப்படியே நீடித்து அது பிற துறைகளிலும் பரவுவதற்குப் பதிலாக தேக்க நிலையிலேயே இருக்கிறது.
  • சௌஹானே தொடர்ந்து முதல்வராக இருப்பதால், அரசு நிர்வாகம் வேகம் குறைந்துவிட்டது. கட்சியிலும் இது பிரதிபலிக்கிறது. அவருடைய மனைவி சாதனா, முதல்வருடைய இல்லத்தில் இருந்தபடியே நிர்வாகத்தில் தலையிட்டதன் காரணமாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. அரசு வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வு எழுவதில் பெரிய அளவில் ஆள்மாறாட்டம் செய்வது, பணம் கொடுத்து வேலைகளுக்கு நியமன ஆணைகளைப் பெறுவது போன்ற மோசடிகள் நிறைய நடந்தன.
  • எல்லாவற்றிலும் மோசம், வியாபம் ஊழல் குற்றச்சாட்டுகள். இது சௌஹானுக்குப் பெரிய களங்கமாகவும் அரசியல் பின்னடைவாகவும் மாறியது. வியாபம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை.
  • 2018 தேர்தலில் பாஜக தோல்விக்கு இது வழிவகுத்தது. ஆனாலும், காங்கிரஸில் நடந்த பிளவைப் பயன்படுத்தி, சிந்தியாவுடன் வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக மீண்டும் சௌகானை முதல்வர் பதவியில் அமர்த்தியது. மாநிலத்தில் பாஜக மீதுள்ள அதிருப்தியைப் போக்க சௌகானை டெல்லி நோக்கி இழுக்க மோடி-ஷா விரும்புகின்றனர்.  

புறக்கணிப்பு

  • இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியே முன்னிறுத்தப்பட்டார். கட்சியின் நான்காவது வேட்பாளர் பட்டியலில்தான் சௌகானுடைய  பெயர் அறிவிக்கப்பட்டது. பெரும் அதிருப்தி ஆட்சி மீது நிலவுகிறது. ஒருவேளை பாஜக வென்றாலும், சௌகான் முதல்வராக மாட்டார் என்று கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
  • அரசியலில் சரியான தருணங்களை உருவாக்கத் தெரிந்தவரான சௌகான் எதுபற்றியும் கவலைப்படாதவர் போன்று தன் பணிகளில் தீவிரமாக இருந்தார். ‘டெல்லிக்குப் போவதில் சௌகானுக்கு விருப்பம் இல்லை; பொறுப்பு தானாகத் தன்னைத் தேடி வரும் என்று அவர் நம்புகிறார்’ என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இன்னும் ஆறு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வருகிறது அல்லவா, மோடிக்கு அப்போது சௌகான் நிச்சயம் தேவைப்படுவார்!

நன்றி: அருஞ்சொல் (21 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories