TNPSC Thervupettagam

மாற்றத்துக்கான நேரம்!

May 24 , 2021 1076 days 532 0
  • இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது உலக சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு 2020.
  • உலக வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றங்களும் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லாமல் இருப்பது பேதைமை.
  • 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வில், இந்தியா 168-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (142), நேபாளம் (145), வங்கதேசம் (162) ஆகியவற்றைவிட நாம் அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொள்கிறோம் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய புள்ளிவிவரம்.
  • 2006-இல் சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் 100-க்கு 47.7 இருந்ததுபோய், 2020-இல் 27.6-ஆக நமது மதிப்பீடு குறைந்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
  • பெரு நகரங்களில் காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்துத்துறை என்பது உலகளாவிய அளவில் உறுதி செய்யப்பட்ட உண்மை.
  • உலகின் மிக அதிகமான காற்று மாசுபாடு உள்ள 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன.
  • அதற்கு முக்கியக் காரணம் போக்குவரத்து வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.
  • அதனால்தான் மத்திய அரசு இப்போது மின்வாகனங்களை ஊக்குவிப்பதில் ஆா்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது. இதுவொரு சரியான அணுகுமுறை.
  • உலகிலுள்ள பல நாடுகளும் இந்த அணுகுமுறையைக் கையாளத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா முன்னுதாரணமாகப் பல வரிச் சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி மின்வாகனங்களை ஊக்குவிக்க முற்பட்டிருக்கிறது.
  • அமெரிக்காவைத் தொடா்ந்து ஐரோப்பாவிலும் மின்வாகனத்துக்கான வரவேற்பு அதிகரித்திருப்பது மட்டுமல்ல, அதற்குத் தேவையான பேட்டரி தொழில் நுட்பத்திலும் உலக நாடுகள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.
  • அமெரிக்காவில் மின்வாகன உற்பத்திக்கு ஊக்கமளித்திருப்பது டெஸ்லா மோட்டா நிறுவனம். நரேந்திர மோடி அரசு இந்தியாவிலும் தொழிற்சாலை அமைப்பதற்கு டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்றாலும்கூட, பல ஒழுங்காற்று விதிமுறைகள் தடையாக இருக்கின்றன.
  • மேலும் பெட்ரோல் - டீசல் வாகன உற்பத்தியாளா்களின் அழுத்தமும் மின்வாகன உற்பத்திக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.

மரபு சாரா எரிசக்தியும் மின்வாகனங்களும்

  • இருபது ஆண்டுகளுக்கு முன்னா், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையை வலுப்படுத்துவது என்கிற கொள்கை முடிவை எடுத்தபோது, காற்றாலை மின்சக்தித்துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டது.
  • இப்போது சீனா, அமெரிக்கா, ஜொ்மனிக்கு அடுத்தபடியாக உலகில் மிக அதிகமாக காற்றாலை மின்சக்தியைத் தயாரிக்கும் நாடாக இந்தியா வளா்ந்திருக்கிறது. இன்றைய நிலையில் நமது காற்றாலை மின்சக்தி உற்பத்தி 37.66 ஜிகா வாட்.
  • அதேபோல, சூரிய மின்சக்திக்கு முன்னுரிமை வழங்கி மரபு சாரா எரிசக்தித்துறைக்கு ஊக்கமளிப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
  • 2014 முதல் வீட்டுக் கூரைகளில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தித் தகடுகளும், மின்பகிமான நிலையங்களுடன் இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களும் ஊக்குவிக்கப்பட்டன.
  • அதன் விளைவாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் 2.6 ஜிகா வாட்டாக இருந்த சூரிய மின்சக்தி உற்பத்தி, இப்போது 34 ஜிகா வாட் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. சூரிய மின்சக்தி உற்பத்தியில் நாம் 5-ஆவது இடத்தில் இருக்கிறோம்.
  • இந்தியாவின் மொத்த எரிசக்தித் தேவையில் சுமார் 24% அளவுக்கு சூரிய மின்சக்தியால் ஈடுசெய்ய முடிகிறது என்பது அபரிமிதமான வளா்ச்சி. அதற்குக் காரணம், மத்திய அரசு வழங்கும் பல்வேறு மானியங்களும் உதவித் தொகைகளும்தான்.
  • மரபு சாரா எரிசக்தித்துறையின் வெற்றியைப்போலவே மின்வாகன உற்பத்தித்துறையையும் வெற்றியடையச் செய்வதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்கத் தொடங்கியிருக்கிறது.
  • இதற்கு மானியம் வழங்குவதற்காக ‘ஃபேம்’ (ஃபாஸ்டா் அடாப்ஷன் அண்ட் மேனுபேக்சரிங் ஆஃப் எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸ் இன் இந்தியா) என்கிற திட்டம் ஏப்ரல் 1, 2015-இல் தொடங்கப்பட்டது.
  • 2019 மாச் 31-க்குள் அதற்கான எல்லா வழிமுறைகளையும் முன்னேற்பாடுகளையும் விரைவுபடுத்துவது என்பதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம்.
  • அதன்படி, மின்வாகனங்களுக்கான வரவேற்பை அதிகரிப்பதற்காக ரூ.495 கோடி ஒதுக்கப் பட்டது.
  • ஆனால் அந்த வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டது வெறும் ரூ.30 கோடி மட்டுமே. அதனால், இந்தியாவில் இப்போது 2,79,283 மின் வாகனங்கள் இயங்குகின்றன. ஆனால் 341 மின்னேற்றும் நிலையங்கள்தான் நிறுவப்பட்டிருக்கின்றன.
  • அடுத்தாற்போல, ‘ஃபேம்-2’ 2019 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. அதற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மின்னேற்றும் நிலையங்களை அமைப்பதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மின்னேற்றும் நிலையங்கள் அமைக்கப்படுவது அதிகரித்தால்தான் மின்வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும்; மானியம் மட்டுமே போதாது.
  • சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீட்டில் இந்தியா முன்னேற வேண்டுமானால், மரபு சாரா எரிசக்திக்கும் மின்வாகனங்களுக்கும் ஊக்கமளிப்பதுதான் சரியான அணுகுமுறை.
  • நிதி ஒதுக்கீடு, மானியங்கள், முறையான திட்டமிடல், சரியான கண்காணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்!

நன்றி: தினமணி  (24 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories