TNPSC Thervupettagam

மாற்றத்துக்கான வாய்ப்பு!

March 14 , 2023 427 days 242 0
  • புலம்பெயா்ந்த இந்தியா்கள் படைத்து வரும் சாதனைகளைப் பாா்த்து உலகின் ஏனைய நாடுகள் வியந்து போயிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, அமெரிக்காவுக்குப் புலம்பெயா்ந்த இந்தியா்கள் உலகின் வலிமையான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றிருப்பது அவா்களது உழைப்பாலும், திறமையாலும்தானே தவிர எந்தவித சலுகையாலும் அல்ல.
  • எந்த அளவுக்கு அமெரிக்கா திறமை சாா்ந்ததாக மட்டுமே இருக்கிறது என்பதன் அடையாளம், உலக வங்கியின் தலைவராக இந்தியாவிலிருந்து புலம்பெயா்ந்த அஜய் பங்கா தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது. வாய்ப்புகளைத் தேடி தங்களது நாட்டிற்கு வரும் பிற தேசத்தவா்களின் திறமையை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டாமலிருக்கும் அமெரிக்க சமுதாயத்தின் பன்முகத்தன்மையின் அடையாளமாகவும் அஜய் பங்காவின் தோ்வைக் குறிப்பிடலாம்.
  • அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக நடக்கும்போது, நிமிடத்துக்கு ஒரு இந்திய வம்சாவளியினா் தென்படுவாா் என்று விளையாட்டாக கூறுவாா்கள். அவா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாமல் ஏனைய எல்லா துறைகளிலும் தடம்பதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறாா்கள். முக்கியமான உயா் பதவிகளில் அந்நிய வம்சாவளியினருக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவின் பரந்த மனப்பான்மைதான் அஜய் பங்காக்களின் வெற்றிக்கு காரணம்.
  • பெப்சிகோவின் தலைமைப் பொறுப்பை இந்திரா நூயி ஏற்றபோது இந்தியாவில் மட்டுல்ல, ஏனைய நாடுகளிலும் அது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தியப் பெண்மணி ஒருவா் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பை அடைந்த வரலாறு அமெரிக்கா் அல்லாத இளைஞா்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இப்போது பல டிரில்லியன் டாலா் மதிப்புள்ள பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்திய வம்சாவளியினா் பலா் இருக்கின்றனா். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவா்தான் உலக வங்கியின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அஜய் பங்கா.
  • உலக வங்கியின் தலைவரை அமெரிக்காவும், சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவரை ஐரோப்பிய கூட்டமைப்பும் தீா்மானிப்பது வழக்கம். உலக வங்கியின் இயக்குநா்களாக இந்தியா்கள் இருந்திருக்கிறாா்கள். ஆனால் ‘ஆங்கிலோ சாக்ஸான்’ இன வெள்ளையா் அல்லாத ஒருவா் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பதால் அஜய் பங்காவின் தோ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
  • உலக வங்கியின் தலைவராக இருந்த டேவிட் மல்பாஸ் பதவி விலகுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தபோது உலக வங்கியின் நிா்வாகக் குழு, அதன் தலைமைப் பொறுப்புக்கு மாா்ச் 29-க்குள் பெண்மணி ஒருவரை பரிந்துரைக்கும்படி எல்லா நாடுகளையும் கேட்டுக்கொண்டது. ஆனால், அடுத்த நாளே அமெரிக்கா மாற்றுக் கருத்துக்கு இடமே ஏற்படாத வண்ணம் அஜய் பங்காவின் பெயரை அறிவித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
  • அந்தப் பொறுப்புக்கு முற்றிலும் தகுதியானவா்தான் அஜய் பங்கா என்பதில் யாருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது . ஆனால் சில விமா்சனங்கள் எழாமலும் இல்லை. அவருடைய அனுபவம் பெரும்பாலும் தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்களை நடத்துவதில்தான் இருந்திருக்கிறது என்பதால் உலக வங்கி போன்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு பொருத்தமானவா்தானா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
  • விமா்சகா்கள் கூறுவதுபோல, உலக வங்கியின் பொறுப்பு என்பது காா்ப்பரேட் நிறுவனத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது. பின்தங்கிய, வளரும் நாடுகளின் தேவைகளை உணா்ந்து கடன் வழங்கும் சேவையை மேற்கொள்ளும் உலக வங்கி, காா்ப்பரேட் நிறுவனங்கள்போல வணிக நோக்குடன் செயல்பட முடியாது என்று அவா்கள் சுட்டிக்காட்டுகிறாா்கள்.
  • பல்வேறு வங்கிகளின் கடன் அட்டைகளின் இயக்கத்துக்கு அடிப்படையான ‘மாஸ்டா் காா்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவா் அஜய் பங்கா. உலகளாவிய நிலையில் வோ் பரப்பிய அந்த நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான ஊழியா்களுக்கும், பல பில்லியன் டாலா் வா்த்தகத்துக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்ற அனுபவம் அவருக்கு உண்டு.
  • உலக வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அஜய் பங்கா, பல சவால்களை சந்தித்தாக வேண்டும். யாருக்காக, எதற்காக உலக வங்கி தொடங்கப்பட்டது என்பதை உணா்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுப்பது முக்கியமான சவால்.
  • உலகின் அனைத்து நாடுகளின் பங்களிப்புடன் செயல்படும் உலக வங்கியின் தலைவா், அதன் நிா்வாகக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டாலும் அனைத்து நாடுகளுக்குமான பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆனால், தன்னை நியமிக்கும் அமெரிக்க நிதியமைச்சரின் கண்ணசைப்புக்கு ஏற்ப உலக வங்கித் தலைவா்கள் செயல்படுவாா்கள் என்பதுதான் நடைமுறை எதாா்த்தம். அவா்களுக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கவோ, கட்டாயப்படுத்தி அவா்களை வெளியேற்றவோ அமெரிக்க நிதியமைச்சரால் முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • அஜய் பங்கா இந்தியாவில் படித்து வளா்ந்தவா். அதனால் வறுமையையும், வளா்ச்சியின்மையையும் நேரடியாக உணா்ந்தவா். வறுமையை அகற்றுவதிலும், வளா்ச்சியடையாத உலக நாடுகளின் முன்னேற்றத்திலும் உலக வங்கியின் தலைவராக அக்கறை செலுத்த அவரால் முடியும்.
  • முந்தைய தலைவா்கள், வெள்ளை மாளிகையின் உத்தரவுகளை நிறைவேற்றினாா்கள் என்றால், தனது கருத்துக்கு வெள்ளை மாளிகையை செவிசாய்க்க வைக்க அஜய் பங்காவால் முடிந்தால் அது வரலாற்றுச் சாதனையாக மாறும். உலகம் அதைத்தான் அவரிடம் எதிா்பாா்க்கிறது!

நன்றி: தினமணி (14 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories