TNPSC Thervupettagam

மாற்றம் தேவை

January 19 , 2023 474 days 309 0
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டும் எருது விடும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
  • விலங்கின ஆர்வலர்களின் எதிர்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், உரிய வழிகாட்டுதல்களுடன் நீதிமன்ற அனுமதியின் பேரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
  • ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும் காளையர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே போட்டியில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
  • போட்டிக்கிடையில் காயமடையும் வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உடனுக்குடன் முதல் உதவி செய்யப்படுவதுடன், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று தேவையான சிகிச்சை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
  • மாவட்ட ஆட்சியர்களின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைமாடுகள் துன்புறுத்தப் படுகின்றன என்ற புகார்களுக்கு வழியில்லாமல் போயிருக்கிறது என்பது உண்மையே.
  • அதே சமயம் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களின் உயிரிழப்பையும், காயத்தையும் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை. உடனுக்குடன் முதல் உதவி அளிக்கப்படுகின்றது என்பது உண்மைதான் என்றாலும், காயங்களையும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளையும் அறவே தவிர்க்க முடியுமெனில் இந்த ஜல்லிக்கட்டை அனைவரும் வரவேற்பர் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.
  • பொங்கல் திருநாளன்று மதுரை அவனியாபுரத்தில் நடந்தேறிய ஜல்லிக்கட்டில் பலர் காயமடைந்திருக்கின்றனர். குறிப்பாக, இங்கு மாடுபிடி வீரர்கள் மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள் சிலரும் காயமடைந்திருக்கின்றனர். தாங்கள் வளர்த்த மாடுகளாலேயே முட்டப்பட்டு அவர்கள் காயமடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.
  • மாட்டுப் பொங்கலன்று மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அரவிந்தராஜன் என்ற இளைஞர் மாட்டினால் வீசி எறியப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது வேதனையளிக்கும் விஷயமாகும்.
  • அதே போன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அரவிந்த் என்ற பார்வையாளர் மாடு முட்டியதில் உயிரிழந்திருக்கின்றார். செவ்வாயன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். கரூர் மாவட்டம் ஆர்.டி. மலையில் மாடு முட்டியதில் ஒரு கண் பார்வையை இழந்த சிவகுமார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  • மேலும் பல்வேறு ஊர்களிலும் நடைபெறும் எருது விடும் திருவிழாக்களிலும் இவை போன்ற சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கின்றன. இனி வரும் நாட்களில் ஆங்காங்கே நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு, எருதுவிடும் திருவிழாக்களிலாவது உயிரிழப்பும் காயங்களும் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு என்பது நமது தமிழ் மண்ணின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதும், இளைஞர்களின் உடல் வலிமையையும் போராடும் திறனையும் அவ்விளையாட்டு வெளிக்கொணர்கிறது என்பதும் உண்மையே. ஆயினும், இவ்விளையாட்டில் ஈடுபடும் காளைகளைக் காட்டிலும், மனிதர்களுக்கே அதிக அளவில் காயங்களும், உடல் ஊனங்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
  • குறிப்பாகக் கூர்மையான மாட்டுக் கொம்புகளால் ஏற்படும் காயங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்த வல்லன. மாடுபிடி வீரர் ஒருவரின் வயிற்றில் அக்கொம்புகள் ஆழமாகக் குத்துமெனில் வயிற்றினுள்ளிருக்கும் குடல் சரிவதுடன், சிலநேரம் அவ்வீரர் உயிரிழக்கவும் கூடும். இதே போன்று மார்பு, விலா எலும்புகள், தலை ஆகியவற்றில் மாட்டுக் கொம்பு குத்திக் கிழித்தாலும் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்.
  • இந்நிலையில், ஜல்லிக்கட்டு விளையாட்டில் காயங்களையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பதற்கான மாற்று வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
  • சில நூற்றாண்டுகளுக்கு முன்பு குத்துச் சண்டைப் போட்டிகளில், சண்டையிடும் வீரர்கள் இருவரில் ஒருவர் மயங்கி விழும் வரையில் சண்டை நடக்குமாம். காலப்போக்கில் குத்துச் சண்டை விதிகள் பலவும் மாற்றப் பட்டு, வீரர்களின் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் தற்போதைய போட்டிகள் நடைபெறுகின்றன.
  • மல்யுத்தப் போட்டிகளிலும் புள்ளிகளின் அடைப்படையிலேயே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகின்றார். வாள்வீச்சுப் போட்டிகளிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
  • கிரிக்கெட் விளையாட்டில், சென்ற நூற்றாண்டில் பெரும்பகுதிக் காலம் வரையில் பேட்டர்களெல்லாம் வேகப் பந்து வீச்சில் அடிபட்டு விடுமோ என்ற பயத்துடனேயே விளையாடக் கூடிய நிலைமை தலைக்கவசம் அணியத் தொடங்கிய பிறகு மாறத் தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்பொழுது ஸ்டம்புகளுக்கு அருகில் நிற்க வேண்டிய விக்கெட்கீப்பர்களும், களத்தடுப்பாளர்களும் கூட நாளடைவில் தலைக்கவசம் அணியத்தொடங்கினர்.
  • இந்திய வீரர் ராமன் லம்பா 1998-இல் தலைக்கவசம் அணியாமல் களத்தடுப்பில் ஈடுபட்டநேரத்தில் தலையில் பந்து பட்டு உயிரிழந்தார். 2014-ஆம் ஆண்டு ஃபில் ஹூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய இளம் வீரர் தன்னுடைய தலைக்கவசத்திற்கும் கீழே வேகப்பந்து பட்டதால் உயிரிழந்தார். மற்றபடி கிரிக்கெட் விளையாட்டுக் களத்தில் ஒரு வீரர் அடிபட்டு உயிரிழப்பது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
  • இந்நிலையில், ஜல்லிக்கட்டில் களம்காணும் வீரர்களின் வயிறு, மார்புக்கூடு, தலை ஆகிய பகுதிகளைப் பாதுகாக்கும் விதமான உள்ளுறைக் கவசத்துடன் கூடிய சீருடை, தொப்பி அல்லது தலைக்கவசம் ஆகியவற்றை விளையாட்டுத் துறை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் வடிவமைத்து வழங்கிட நமது மாநில அரசு முன்வர வேண்டும்.
  • தற்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஊடக விளம்பரங்களும் அதிகமாக இருப்பதால், இத்தகைய கவச உடைகளுக்கான நன்கொடையாளர்கள் கிடைப்பதும் சாத்தியமே.
  • கரூர் பள்ளப்பட்டி மாடுபிடி வீரர் சிவகுமாரின் மரணமே இவ்வகையிலான கடைசி உயிரிழப்பாக இருக்கட்டும்! சாகசம், கலாசாரம், பண்பாடு எல்லாம் முக்கியமே. மனித உயிர் இவை எல்லாவற்றையும் விட முக்கியமல்லவா?

நன்றி: தினமணி (19 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories