TNPSC Thervupettagam

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பது எப்போது?

December 3 , 2021 883 days 799 0
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளைச் சமூகத்தின் சாபம் என்றே பல்வேறு சமூகங்கள் பாவித்தன.
  • சிகாகோவின் ‘அசிங்கச் சட்டம்’ (Ugly law) மாற்றுத்திறனாளிகள் நகருக்குள் நடமாடத் தடை விதித்திருந்தது.
  • 1930-களில் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கருத்தடை செய்யும் சட்டம் நடைமுறையில் இருந்தது.
  • மாற்றுத்திறனாளிகளின் குழந்தையும் கொல்லப்பட வேண்டும் என்பது நாஜிக்களின் நடைமுறையாக ஜெர்மனியில் இருந்தது. இந்த இழிநிலை ஒரே இரவில் மாறிவிடவில்லை.
  • முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உலகம் முழுவதும் ஏராளமான படை வீரர்களை ஊனமாக்கியிருந்தன. போருக்குப் பின் நாடு திரும்பிய அவர்களுக்குப் புதிய வாழ்க்கை தேவைப்பட்டது.
  • மறுவாழ்வுக்கான கோரிக்கைகள் எழுந்தன. அவை அரசுகளால் மறுக்கப்பட்டபோது, போராட்டங்களாக மாறின.
  • நாடு காத்த தியாகிகளாகப் போற்றப்பட்ட இவர்களது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகியது. ஊனம் என்பது தனிமனிதப் பிரச்சினையாகக் கருதப்பட்ட நிலை மாறி, அது சமூகப் பிரச்சினையாக உருவெடுத்தது.
  • அதே காலகட்டத்தில் சமூகத்தின் பல அரங்குகளில் ஊனமுற்றவர்கள் பெரும் சாதனை செய்தனர். ஹெலன் கெல்லர், ஃபிராங்ளின் டி. ரூஸ்வெல்ட், ஸ்டீவன் ஹாக்கிங் போன்றோரது நிகரற்ற பங்களிப்பு மாற்றுத்திறனாளிகள் பற்றிய சமூகத்தின் எண்ணத்தை மாற்றியமைத்தது.
  • மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களால் 1948-ல் தொடங்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ‘பாராலிம்பிக்’ (Paralympic) என உருப்பெற்று, உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளிடம் உறைந்து கிடந்த பன்முக ஆற்றலை வெளிச்சம்போட்டுக் காட்டின.
  • எனினும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வையும், சம வாய்ப்பையும் உறுதிப்படுத்தும் சட்டம் எதுவும் வடிவம் பெறவில்லை.

உண்மையான உரிமைக் குரல்

  • அமெரிக்காவில் நடந்த தொடர் போராட்டங்களின் காரணமாக 1973-ல் நிறைவேற்றப்பட்ட மறுவாழ்வுச் சட்டமே மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான முதல் சட்டம்.
  • அடுத்து, பல பத்தாண்டுப் போராட்டங்களுக்குப் பின்னர் 1990-ல் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க மாற்றுத்திறனாளிகள் சட்டமே முழுமையான சட்ட உரிமையை வழங்கியது.
  • 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா. அறிவித்தபோது, மாற்றுத் திறனாளிகளின் பால் உலகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது.
  • பின்னர், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று 1992-ல் ஐ.நா. அறிவித்தது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளின் மீது பெரும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தது.
  • இந்திய அரசமைப்பு அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பையும் அடிப்படை உரிமைகளையும் வகுத்திருந்தாலும்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எனக் குறிப்பான எந்தச் சட்டப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.
  • 1992-ல் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கான பத்தாண்டுகள் (1993-2002) என அறிவிக்கும் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட ‘மாற்றுத்திறனாளிகளின் முழு பங்கேற்பும் சமத்துவமும்’ என்ற அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டது.
  • இதுவே, இந்தியாவின் மாற்றுத்திறனாளிகளின் மீதான முதல் கவனப் பதிவு. இந்த அறிக்கையின்படி, 1995-ல் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம்’ (PWD Act 1995) இயற்றப் பட்டது.
  • இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையம் வெவ்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது.
  • ஆசிய-பசிபிக் பகுதிகளுக்கான சமூகப் பொருளாதார ஆணையம் (ESCAP), தென் கொரியாவின் இன்சன் நகரில் 2012-ல் அரசுகளுக்கு இடையிலான ஓர் உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டியது.
  • இக்கூட்டத்தின் விளைவாக 10 இலக்குகள் முன்வைக்கப்பட்டன. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டது.
  • இந்த 10 இலக்குகளில் ஒன்று அந்தந்த அரசுகள் உரிமைகளை உண்மையாக்குவதற்கான தகுந்த சட்ட வடிவங்களை உருவாக்குவது. ஆனால், இந்தியா அதை நடைமுறைப் படுத்துவதில் சுணக்கம் காட்டியது.
  • பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2016-ல் அப்போது நடைமுறையில் இருந்த மாற்றுத் திறனாளிகள் சட்டத்திற்குப் பதிலாக (PWD Act 1995) மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPWD-2016) என்ற புதிய சட்டத்தை இந்திய அரசு இயற்றியது.
  • இச்சட்டம் நீர்த்துப்போன ஒன்று, இன்சன் நோக்கத்தை ஈடேற்றப் போதுமானதல்ல என்பதே சமூகநல அமைப்புக்களின் கருத்து. இன்சன் உத்தியின் மிக முக்கிய இலக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது.
  • நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது. ஆனால், இந்திய அரசு இதற்காகச் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.
  • உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உரிமை பற்றிய பல நூறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக இருப்பது மத்திய அரசே என்பது அரசு மாற்றுத் திறனாளிகளை எப்படி அணுகுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
  • 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத் திறனாளிகள், இது மொத்த மக்கள்தொகையில் 2.21%. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.42 லட்சம்.
  • இன்றைய நவீன மருத்துவ முறையில், பல்வேறு உடற்குறைபாடுகள் எளிதில் தடுக்கப்படவும் முன்கூட்டியே கண்டறிந்து களையப்படவும் இயலும் என்ற நிலையில், உடற்குறைபாடுள்ள குழந்தைகளின் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.
  • மாற்றுத்திறனாளிகளில் 5% பேரே பட்டதாரிகள் என்பது இது தொடர்பில் நாம் வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
  • கடும் முயற்சிக்குப் பின், அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெற்றவர்களின் பணிச் சூழல்கூட மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.
  • பொருளாதாரத் தற்சார்புதான் மாற்றுத்திறனாளிகளுக்கு மானமிகு வாழ்வை உறுதி செய்யும்.
  • அதற்குக் கல்வியும் வேலைவாய்ப்புமே நிலையான தீர்வு. அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் அருகிவரும் நிலையில், தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • தனது ஒரு பகுதியினரைப் புறந்தள்ளிவிட்டு, சமூகம் முன்னேறிவிட முடியாது. ஒருங்கிணைந்த வளர்ச்சியே நீடித்து நிலைக்கும். மாற்றுத்திறனாளிகளின் சிக்கல், ஒரு சமூகச் சிக்கலாக உணரப்பட வேண்டும்.
  • அதற்கான விழிப்புணர்வு விரிவான இயக்கமாய் மாற்றப்பட வேண்டும். இன்சன் உத்தியின் இரண்டாம் இலக்காய் இருக்கும் அரசியல் அதிகாரம் அளித்தல், இதற்குப் பெரும் துணையாக இருக்கும்.
  • நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களுக்கான உறுப்பினர்கள் எழுப்பும் குரலே உண்மையான உரிமைக் குரலாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories