- மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாம் இடத்தில் கர்நாடகமும், மூன்றாம் இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன. 2021-22 நிதியாண்டு வரை இம்மாநிலங்களுக்கு அடுத்த இடத்திலேயே இருந்துவந்த தமிழ்நாடு, 2022-23 நிதியாண்டிலிருந்து முன்னணியில் இருந்துவருகிறது.
- 2023-24 நிதியாண்டில் ரூ.2,912 கோடி மதிப்புள்ள மின்னணுப் பொருள்களைத் தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் 32.84%. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்த மாநிலம் என்ற பெருமையைத் தமிழ்நாடு அடைந்துள்ளது.
- ஃபாக்ஸ்கான், டாடா எலெக்ட்ரானிக்ஸ், சல்காம்ப், பெகட்ரான் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் பல சிறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றன.
- தொழில் துறையில் உலக அளவிலும் தேசிய அளவிலும் பெரும் முதலீடுகளைக் கொண்டுவருவதில் தமிழ்நாடு அரசு காட்டும் முனைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம். ‘தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளால் உற்பத்தி மேம்பாட்டுக்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது. வலுவான பொருளாதார வளர்ச்சியுடன், அதிக வேலைவாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகும்’ எனத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
- மேலும், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் திறனுக்கு ஏற்ப வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தகுந்த சூழலே இல்லாத மாநிலங்களுக்கு முக்கியமான வேலைத்திட்டங்கள் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட அணுகுமுறை விரைவில் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டு மின்னணுப் பொருள்கள் மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020இல் வெளியிடப்பட்டது. 2025க்குள் 100 கோடி அமெரிக்க டாலர் உற்பத்தி (இந்திய அளவில் 25%) என்கிற இலக்கை இக்கொள்கை கொண்டிருந்தது. நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை, வேலை பெறுவோர் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்துத் தொழில் தொடங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அக்கொள்கையில் இடம் உள்ளது.
- வான வாடகையில் நிலம், குறைந்த விலையில் மின்சாரம், குறிப்பிட்ட காலத்துக்கு வரிச்சலுகை போன்ற வசதிகள் நிறுவனங்களுக்கு அரசு மூலம் வழங்கப்படுவதுதான் நடைமுறை. தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்வதும் உண்டு. மாநிலத்தின் கருவூலத்தை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அணுகுமுறை மிக அவசியமானது.
- ன்னொரு பக்கம், நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாடும் தொடர வேண்டும். பெரும்புதூரில் கைபேசி உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நோக்கியா நிறுவனம், 2014இல் மூடப்பட்டது. வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டிய ரூ.21,000 கோடியை அந்நிறுவனம் செலுத்தாமல் இருந்ததே இதற்குக் காரணம். மாநில வணிக வரித் துறைக்கும் நோக்கியா ரூ.2,400 கோடி பாக்கி வைத்திருந்தது.
- ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதன்வழியே ஊதியச் செலவைக் குறைப்பது, தொழிலாளர் சங்கம் வைக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.
- தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியுடன், அரசுக்கான வரி வருவாய், தொழிலாளர் உரிமை, சுற்றுச்சூழல் நலன் ஆகியவையும் இந்தத் தொழில் வளர்ச்சியின் இடையே உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 04 – 2024)