TNPSC Thervupettagam

மிரட்டும் மருத்துவக் கழிவுகள்!

October 11 , 2021 949 days 515 0
  • இந்தியா எதிர்கொள்ளும் எத்தனையோ பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மருத்துவக் கழிவுகள். இந்தியாவின் எந்தவொரு பெருநகரத்துக்குப் போனாலும் மருத்துவமனைகளின் அருகே தூக்கியெறியப்பட்ட மருத்துவக் கழிவுகளை பார்க்க முடிகிறது.
  • பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைகள், ஊசி மூலம் மருந்து செலுத்தும் சிரிஞ்சுகள், கையுறைகள், முகக் கவசங்கள், பயன்படுத்தப்படாத, வீணான, காலாவதியான மருந்துகள், பஞ்சு, பேண்டேஜ்கள் என்று மருத்துவக் கழிவுகளால் குப்பைத் தொட்டிகள் எல்லா நகரங்களிலும் நிரம்பி வழிகின்றன.
  • அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன.
  • சென்னையில் மட்டுமல்லாமல், புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு என்று எல்லா பெருநகரங்களிலும் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவெளியில் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகளால் பீதியடைந்திருக்கின்றனர். சிறுநகரங்களும் இதற்கு விலக்கல்ல.
  • பொது நல ஆர்வலர்கள் இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியும்கூட பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் திணறுவதில் வியப்பில்லை.

மருத்துவக் கழிவு மேலாண்மை

  • சாதாரணமாகவே மருத்துவக் கழிவுகள் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்திருக்கிறது. மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதார சீர்கேட்டுக்கு அவை காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
  • கடந்த பத்தாண்டுகளாக ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகள் பொதுவெளியில் கொட்டப்படாமல் அழிக்கப்படுவதும், ஊருக்கு வெளியே மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டப்படுவதும் அதிகரித்திருந்தது. கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு பிரச்னை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
  • 'பயோ மெடிக்கல் வேஸ்ட்' என்று அழைக்கப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு கொவைட் 19-க்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்துவிட்டது.
  • கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு முன்னால் இந்தியாவில் நாளொன்றுக்கு 600 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் காணப்பட்டன.
  • இரண்டாவது அலை உச்சமாக இருந்த மே மாதத்தில் கொவைட் 19 தொடர்பான மருத்துவக் கழிவுகள் மட்டுமே நாளொன்றுக்கு 203 டன் உருவானதைத் தொடர்ந்து மொத்த மருத்துவக் கழிவுகளின் விகிதம் 33% அதிகரித்துவிட்டது.
  • நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்றாற்போல் ஆபத்தான மருத்துவக் கழிவுகளின் அளவும் அதிகரித்தது.
  • மருத்துவப் பாதுகாப்பு உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், நோய்த்தொற்றைக் கண்டறியும் கருவிகள் என கொவைட் 19 நோய்த்தொற்று சிகிச்சை தொடர்பான அனைத்துமே ஆபத்தான, கேடு விளைவிக்கும் பொருள்கள்.
  • ஒருமுறை உபயோகித்ததை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதால் கழிவுகளின் அளவு அதிகரித்தது.
  • இது இந்தியா மட்டும் எதிர்கொள்ளும் பிரச்னை அல்ல. கொவைட் 19 நோய்த்தொற்றின் மையப்புள்ளியான சீனாவும், தீநுண்மியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் உருவாகியிருக்கும் மருத்துவக் கழிவுகளை யாருக்கும் பாதிப்பில்லாமல் அழிப்பதற்கான போதுமான எரியூட்டிகள் (இன்செனரேட்டர்ஸ்) இல்லாமல் தவிக்கிறது.
  • கண்ட இடத்தில் முகக்கவசங்களையும், கழிவுகளையும் வீசி எறிவதால் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை சீனாவும் எதிர்கொள்கிறது.
  • இந்தியாவில் இது தொடர்பாக கீழ்த்தரமான பல நடவடிக்கைகள் காணப்படுவது முகம் சுளிக்க வைக்கிறது. கேரளத்திலிருந்து லாரிகளில் எடுத்துவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கோயம்புத்தூரில் கொட்டப்படுவதைப் பார்த்து மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
  • மாநிலம் விட்டு மாநிலம் மருத்துவக் கழிவுகள் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டு கொட்டப் படுவதை தொடர்ந்து, இப்போது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • 2018-இல் மருத்துவக் கழிவுகள் கையாள்வது, நிர்வகிப்பது குறித்த விதிகள் திருத்தியமைக்கப் பட்டன.
  • இப்போது கொள்ளை நோய்த்தொற்றைத் தொடர்ந்து திருட்டுத்தனமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாகவும் அந்த விதிகளில் திருத்தம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
  • பொதுவாக மருத்துவக் கழிவுகள் மருத்துவமனைகளால் தரம் பிரிக்கப்பட்டு எரியூட்டப்பட வேண்டும் அல்லது அருகிலிருக்கும் எரியூட்டும் மையத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • உருவாகும் மருத்துவக் கழிவுகள் குறித்தும், அவை எங்கே எரியூட்டப்படுகின்றன என்பது குறித்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு அதைப் பதிவிட வேண்டும்.
  • பல மருத்துவமனைகள் எரியூட்டுச் செலவை மிச்சப்படுத்த முனைகின்றன. உருவாகும் கழிவுகளில் ஒரு பகுதியை மட்டுமே எரியூட்டு மையத்துக்கு அனுப்பி, ஏனைய மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கிராமப்புறங்களிலுள்ள நீர்நிலைகளில் கொட்டுகின்றன.
  • இதைக் கண்காணிக்கவும், தடுக்கவும் போதுமான அதிகாரமும், அமைப்பும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை.
  • பெரிய மருத்துவமனைகளில் காணப்படும் எரியூட்டிகள் அல்லாமல் இந்தியாவில் 198 மருத்துவக் கழிவுகள் கையாளும் மையங்கள் (பயோ மெடிக்கல் வேஸ்ட் டிரீட்மெண்ட் பிளான்ட்ஸ்) இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது. அதன்மூலம் நாளொன்றுக்கு 826 டன் மருத்துவக் கழிவுகளைக் கையாள முடியும்.
  • அப்படியிருந்தும் நீர் நிலைகளும், குப்பைக் கூளங்களும் ஆபத்தான, நோய்த்தொற்றைப் பரப்பக்கூடிய மருத்துவக் கழிவுகளால் நிறைந்து வழிகின்றன என்றால் புள்ளிவிவரங்கள் தவறானவை என்பது தெளிவாகிறது.
  • மருத்துவக் கழிவுகளின் மேலாண்மை சீர்படுத்தப்படாமல் தடுப்பூசி போட்டும் பயனில்லை!

நன்றி: தினமணி  (11 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories