TNPSC Thervupettagam

மீண்டும் ஓங்கி ஒலிக்குமா வானொலி?

February 12 , 2022 813 days 526 0
  • ஒரு தகவலை மற்றவர்களுக்கு கொண்டு செல்வதில் முன்னோர்கள் பல முறைகளை கையாண்டு வந்த நிலையில், அதனை எளிதாக்க அறிவியல் தொழில்நுட்பத்தால் கிடைத்த முதல் ஊடகம் என்ற ஒரு சிறப்புக்குரிய அடையாளத்தை பெற்றது வானொலியாகத்தான் இருக்க முடியும்.
  • வானொலியின் தந்தை என்று அழைக்கப்படும் இத்தாலி விஞ்ஞானி மார்க்கோனி என்பவரால் 1888-ல் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம் 1901-ல் முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
  • ஸ்பெயின் நாட்டின் கோரிக்கையின் விளைவாக யுனெஸ்கோவின் 36-வது மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் 1927-ல் தனியார் நிறுவனத்தால் மும்பை, கொல்கத்தாவில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.
  • 1936 ஆம் ஆண்டு மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டு, பின்னாளில் தன்னாட்சி வழங்கப்பட்ட பிரசார் பாரதியின் அங்கமாக மாறியது.

வானொலி மீளட்டும்

  • இன்றைக்கு 208 ஒலிபரப்பு நிலையங்களோடு செயல்படும் அகில இந்திய வானொலி 24 இந்திய மொழிகளில் உள்நாட்டு ஒலிபரப்பையும் "ஆங்கிலம்', "பிரெஞ்சு', "ரஷிய' போன்ற அயல்நாட்டு மொழிகளிலும்,16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பண்பலை, சிற்றலை, மத்திய அலை வரிசைகளில் நிகழ்ச்சிகள் ஒலி பரப்பாகின்றன.
  • தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில், உதகமண்டலம், கொடைக்கானல் (பண்பலை) மற்றும் காரைக்கால் (பண்பலை) ஆகிய இடங்களில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன.
  • சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்புவரையில் இல்லம்தோறும் இருந்த வானொலிப் பெட்டிகள் வாழ்வின் ஓர் அங்கமாக திகழ்ந்தன.
  • வயல் வெளியில் வேலை செய்வோர், கால்நடைகள் மேய்ப்போர் தொடங்கி பல தரப்பான நேயர்களின் ஈர்ப்பைப் பெற்ற ஊடகம் அது.
  • அத்துடன், ஆர்வ மிகுதியுடையோர் தோள்களில் ரேடியோ பெட்டிகள் சொகுசாய் பயணம் செய்த காட்சிகளை எளிதில் மறந்து விடமுடியாது.
  • வானொலி ஏதோ ஒரு பொழுதுபோக்காக இல்லாமல் மொழி ஆளுமையை கற்றுத்தந்தவை. செய்திகள், நாடகம், கதை, கவிதை, உரைசித்திரம், ஒலிச்சித்திரம், திரைப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களை மக்களின் மனங்களில் அரங்கேற்றிய பெருமை வானொலிக்கு உண்டு.
  • தமிழகத்தில் பல நாட்டுப்புறக் கலைஞர்களை வெளிக்கொண்டு வந்த பங்களிப்பையும் செய்துள்ளது.
  • இந்தியாவை பொருத்தவரை வேளாண்மையில் கண்டுள்ள வளர்ச்சிகளுக்கு பின்னணியில் அகில இந்திய வானொலி நிலையங்களின் பண்ணை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளுக்கு பெரும் பங்குண்டு.
  • உலக செய்திகளுக்கு சிறப்பு பெற்ற லண்டன் பிபிசி-யின் சேவை, அதன் ஊடே வரும் தமிழோசை நிகழ்ச்சிகளுக்காக நேயர்கள் காத்துக்கிடந்த காலமும் உண்டு.
  • பிபிசி தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் தொடங்கப்பட்ட வானொலிதான் ஆசியா பகுதியில் முதன்மையானது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் சேவைகள் தமிழின் ஆளுமையை வெளிக்காட்டுவதாக இருந்தது.
  • வீடுகள் நிறுவனங்களில் பயன்பாடு அதிகரித்துள்ள மின்சாதனங்களால் ரேடியோ எனப்படும் வானொலிப் பெட்டியை தெளிவாக கேட்பதில் பிரச்னைகள் உள்ளன.காலப் போக்கில் வானொலி பெட்டிகளே அரிதாகி வருகிறது.
  • சர்வ வல்லமை பெற்றுள்ள தொழில்நுட்ப ஊடகங்கள் பேரிடர் காலங்களில், தொழில்நுட்ப பிரச்னையின் போதும் முடங்கும் நேரத்தில் வானொலி மட்டுமே துணை நிற்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • எடுத்துக் காட்டாக 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி தாக்கத்தின்போது சமூக ஊடகங்கள், கைப்பேசி போன்ற தகவல் பரிமாற்றங்கள் முடங்கின.
  • அப்போது நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வானொலி சேவை முழு வீச்சில் கை கொடுத்தது. குறிப்பாக, காரைக்கால் (பண்பலை), திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு மக்களுக்கு பயனளித்தன.
  • அதேபோல, 2018-ல் ஏற்பட்ட கஜா புயலின்போது கைப்பேசி கோபுரங்கள் நிலை குலைந்தன.
  • மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சிகள், கைப்பேசி சேவை, சமூக வலைதளங்கள் புயலின் பாதிப்பு அதிகமாக இருந்த இடங்களில் சுமார் 40 நாள்கள் வரையில் முடங்கியன.
  • ஆனால், வானொலி சேவையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் அலைவரிசை ஒலிபரப்பானது.
  • புயல் தொடர்பான தகவல்கள் தடையில்லாமல் கிடைத்தன. காவல் உள்ளிட்ட அரசு துறைகளுக்கும் உதவியாக இருந்தது. ஆனால், பெரும்பாலான வீடுகளில் வானொலி பெட்டிகள் இல்லை என்பது வேதனையானது.
  • வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் பழக்கம் இளைய தலைமுறையினரிடையே அரிதாகி விட்டது.
  • இதற்கு பல காரணிகள் இருக்கலாம். அவற்றில், காலத்துக்கு ஏற்ப வானொலியும் தன் தொழில்நுட்ப பயன்பாட்டையும், நிகழ்ச்சிகளையும் மாற்றிக்கொள்ளாததையும் முதன்மையானதாக குறிப்பிடலாம்.
  • மண் சார்ந்த படைப்புகள், படைப்பாளிகளுக்கான தேடல் தொடரவும், தொழில் வளர்ச்சி சார்ந்த நுட்பங்கள், விழிப்புணர்வுகள் மேம்படவும் அனைத்து நிலையங்களும் வழக்கம் போல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதை ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
  • தனியார் பண்பலைகளின் அதிகரிப்பை ஆரோக்கியமான போட்டியாக கருத்தில் கொள்வதும், அரசு வானொலிகளின் நிகழ்ச்சிகளையும், கேட்கும் திறன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதும் அவசியமானது.
  • மஞ்சப்பைகள், பாரம்பரிய உணவு முறைகள், மருத்துவம் போன்றவை மீண்டும் பேசப்படுவதைப் போல வானொலியும் மீண்டும் முக்கியத்துவம் பெறுவது அவசியம்.
  • நாளை (பிப்.13) உலக வானொலி தினம்.

நன்றி: தினமணி (12 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories