TNPSC Thervupettagam

முக்கியத்துவம் வாய்ந்த நீதித் துறை சீர்திருத்தங்கள்

May 13 , 2022 727 days 407 0
  • பிரதமர் மோடி சமீபத்தில் நீதித் துறை தொடர்பில் பேசியிருந்த இரு கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தன; அவருடைய பேச்சு நடைமுறைக்கு வருமானால், இரண்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களாக அமையும். முதலாவது, நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் உள்ளூர் மொழிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்; உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இரண்டாவது, காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும்.
  • விழாவுக்குத் தலைமை வகித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பேச்சும் இதற்கு ஒத்திசைவாக அமைந்திருந்தது. இருவருடைய கருத்துகளும் செயலுக்கு வர வேண்டும் என்றால், அதற்கு உறுதியான நடவடிக்கைகளை இந்த இருவருமே எடுக்க வேண்டும்.
  • அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் காவலராக நீதித் துறையே இருக்கிறது என்பதும், நீதித் துறைச் சீர்திருத்தம் வெறும் கொள்கைசார் விஷயம் மட்டும் அல்ல என்று பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பேசியதும் உறுதியான உண்மைகள். ஆம், மக்களின் உணர்வு இதில் பிணைந்திருக்கிறது. அனைத்து விவாதங்களிலும் மக்களை ஈடுபடுத்த வேண்டும். இந்த நாடு அதன் குடியரசுத்தன்மையை முழுமையாகப் பெற வேண்டும் என்றால், சாமானிய மக்கள் அவர்களுடைய மொழியில் அரசோடு உரையாடும், வாதாடும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அரசின் எல்லாத் துறைகளிலுமே இந்நிலை உருவாக வேண்டும்; இதற்கான தேவையில் நீதித் துறையும் முன்னணியில் நிற்கிறது.

இதற்குத் தடையாக நிற்பது யார்?

  • தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் 1976 முதலாக வழக்காடுமொழியாக தமிழ் இருந்துவருகிறது. நீதிப் பரிபாலனத்தை இது மேலும் ஜனநாயகப்படுத்தி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடர்ந்து போராடிவருகிறது. 2006இல் இது தொடர்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது. ஒன்றிய அரசும், உச்ச நீதிமன்றமும் குறுக்கே நிற்கவில்லை என்றால், தமிழகத்தோடு மேலும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இன்று நீதியாசனத்தில் அமர்ந்திருந்திருக்கும் சூழல் உருவாகி இருக்கும்.
  • அடுத்த விஷயமும் அப்படியானதுதான்.
  • காலாவதியான சட்டங்களை ரத்து செய்திட வேண்டும் என்று பேசிய பிரதமர் மோடி, தன்னுடைய அரசு 2015இல் பொருத்தமில்லாத 1,800 சட்டங்களைக் கண்டறிந்ததையும், அவற்றில் 1,450 சட்டங்களை ரத்து செய்துள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே இதுபோன்ற 75 சட்டங்கள் மட்டுமே மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றவர்இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை முதல்வர்கள் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
  • மாநிலங்களின் அதிகாரத்துக்குட்பட்ட சட்டங்களில் காலாவதியானவற்றை ரத்து செய்ய மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஒன்றிய அரசால் காலாவதியானவை என்று அடையாளம் காணப்பட்ட 1,800 சட்டங்களில், 1,450 சட்டங்கள் மட்டுமே ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டன என்றால், மிச்சம் 350 சட்டங்கள் ஏன் ரத்து செய்யப்படவில்லை என்பதையும் கூறியிருக்கலாம். நாட்டுக்குத் தேவையில்லை என்றாலும், ஆட்சியாளர்களுக்கான  தேவையின் பொருட்டே காலாவதிச் சட்டங்கள் நீடிக்கின்றன எனும் உண்மை அப்போது வெளியே வந்திருக்கும்.
  • ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக எவ்வளவு நீண்ட போராட்டங்கள் இந்நாட்டில் நடந்துவருகின்றன? யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமாலும் கைது செய்யலாம் என்ற அதிகாரத்தை சிறப்புப் படைகளுக்குத் தரும் இந்தச் சட்டமானது காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் அன்றாட வாழ்க்கையை நிலைகுலைத்திடும் அளவுக்குத் தீவிரமான ஒரு விவகாரம். காலனியாதிக்கக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த ஒடுக்குமுறைச் சட்டம் இன்னும் நீடிக்க யார் காரணம்?
  • தேச விரோதத் தடைச் சட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பது ஜனநாயகர்களின் இன்னொரு தொடர் கோரிக்கை. காந்தியையும், திலகரையும்கூட கடித்த சட்டம் இது. ‘குடிமக்களை ஒடுக்க பிரிட்டிஷார் கொண்டுவந்த கொடுங்கோன்மைச் சட்டங்களிலேயே உச்சமானது’ என்று காந்தியால் சாடப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இப்படி ஒரு சட்டம் நீடிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணாவே சென்ற ஆண்டில் கேட்டார்.

இந்தச் சட்டம் நீடிக்க யார் காரணம்?

  • 2010 முதலாக இச்சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்கு உள்ளான 10,938 இந்தியர்களில், 65% பேர் பாஜக ஆட்சிக் காலகட்டத்தில் வழக்கை எதிர்கொண்டவர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று இவர்களில் ‘ஆட்சியாளர்கள் மீதான விமர்சனம்’ எனும் ‘குற்றம்’ சார்ந்து வழக்கை எதிர்கொண்ட 405 பேரில் 95% பேர் பாஜக ஆட்சிக் காலகட்டத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள்.
  • நிதர்சனம் இப்படி இருக்க, வெற்று மேடை முழக்கங்கள் மூலம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்? பிரதமர் மோடி தன்னுடைய பேச்சில் உள்ள அக்கறையை வெளிப்படுத்த காரியத்தில் அதைப் பிரதிபலிக்க வேண்டும்.
  • காலவதியான காலனியாதிக்கக் காலச் சட்டங்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையைக் குடிமக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றால், தேச விரோதத் தடைச் சட்டத்தையும், ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் ரத்து செய்யும் முடிவை முதலில் மோடி எடுக்க வேண்டும். அதேபோல, ஆட்சி நிர்வாகத்தில் சாமானிய மக்கள் அதிகாரத்தோடு ஈடுபட வேண்டும் என்றால், ஒவ்வொரு நிலையிலும் அலுவல் மொழிகளின் பட்டியலில் உள்ளூர் மொழிகள் இடம்பெற வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் (பிரிவு 348-2) திருத்தம் கொண்டுவருவதன் மூலம் நீதித் துறையிலிருந்து அரசு இதை ஆரம்பிக்கலாம்.
  • மாநில அரசுகளுக்கும் இந்த விஷயத்தில் பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த இரு விஷயங்களிலுமே கவனம் செலுத்த முடியும்; இரண்டுமே தமிழ்நாட்டின் அக்கறைகளோடு மிகவும் நெருக்கமானவை.
  • உள்ளூர் மொழியை நீதிமன்ற அலுவல் மொழியாக்குவதை மாநிலங்கள் சார்ந்த ஓர் இயக்கமாக இன்றைய அரசு முன்னெடுக்க முடியும். இந்தி பேசாத மாநிலங்கள் இதில் இயல்பாக முன்னணி வகிக்கக் கூடியவை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களும் இந்த விஷயத்தில் இணைந்துகொள்ளும். ஏனென்றால், ஆங்கிலத்துக்கு இணையான இடத்தை உள்ளூர் மொழிகள் கோருவதற்கான குரல் இது. அதேபோல, தேசிய அளவில் தேசத் துரோகத் தடைச் சட்டத்தின் கீழ் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.
  • பத்தாண்டுகளில் 139 வழக்குகள் தமிழக அரசால் இப்படிப் பதியப்பட்டுள்ளன. முந்தைய அதிமுகவின் அடக்குமுறை நிர்வாகத்தைச் சாடி ஆட்சிக்கு வந்த திமுக, இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் தார்மிக பலத்தைப் பெறலாம்; தேசத் துரோகத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் குரலும் கொடுக்கலாம்.
  • இந்தியச் சுதந்திரம் 75ஆம் ஆண்டை நெருங்கும் சூழலில் நாம் இந்த நாட்டின் குடியரசுத் தன்மைக்கு வலு சேர்க்க ஆற்ற வேண்டிய காரியங்கள் அதிகம்; சட்ட மறுஆய்வும் அதில் முக்கியப் பங்கு வகிக்கட்டும்!

நன்றி: அருஞ்சொல் (13 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories