TNPSC Thervupettagam

முதல் முறை வாக்களித்த நரிக்குறவர்களின் வாழ்வு மேம்படுமா?

March 15 , 2022 796 days 430 0
  • தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக நரிக்குறவர்கள் (வாக்ரிகள்) மற்றும் மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு உற்சாகமாக வந்தனர்.
  • அவர்கள் முதல் முறையாக வாக்களிக்க வந்திருந்ததால், அவர்களுக்கு வேண்டிய பயிற்சியும் வழிகாட்டுதலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் கொடுக்கப்பட்டன.

நரிக்குறவர்கள்

  • நரிக்குறவர்கள் உள்நாட்டுப் பகுதியில் வாழும் மக்கள். பெரும்பாலும் அவர்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கி வசிப்பதில்லை. அடிக்கடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பவர்கள்.
  • வேட்டையாடுதல், கைவினைப் பொருட்களைச் செய்து பொது இடங்களில் விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள். தங்களுக்கென்று சொந்த இடம், சொந்த வீடு எதுவும் இல்லாதவர்கள்.
  • சாலை ஓரத்திலும், ரயில் நிலையங்களிலும், பாலங்களுக்கு அடியிலும், அரசுக்குச் சொந்தமான பொதுவெளியிலும் சின்னச் சின்னக் குடிசைகள் போட்டு வாழ்கின்றனர்.
  • ஒரு இடத்தில் நிரந்தரமாக இவர்கள் இருப்பதில்லை என்பதால், அரசாங்கம் தரும் எந்த விதமான அடையாள அட்டையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
  • தாசில்தார் அலுவலகத்தில் இவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று எது கேட்டுப் போனாலும் நிரந்தர முகவரியுடன் கூடிய எந்த விதமான அத்தாட்சியும் இல்லையென்பதால், தர முடியாது என்று சொல்லிப் பல நேரங்களில் அரசு அதிகாரிகள் நிராகரித்துவிடுகிறார்கள்.
  • மேலும், அரசு கொடுத்திருக்கும் அட்டவணையில் எந்தப் பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரியவில்லை என்று சொல்லியும் அவர்களைக் குழப்பி, திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
  • கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜெய்பீம்’ திரைப்படம், இருளர் என்ற பழங்குடி இன மக்கள் எப்படித் தங்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடினார்கள் என்பதை அழகாகச் சித்தரித்திருந்தது.
  • அதன் பிறகு, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகள் பழங்குடியினர் இருக்கும் பகுதிக்கே சென்று சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை வழங்குவதைப் பார்க்க முடிந்தது.
  • இதனுடைய நீட்சியாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நரிக்குறவர்களுக்கும் பழங்குடியினருக்கும் எல்லா அடையாள அட்டைகளும் துரிதமாக வழங்கப்பட்டுள்ளன.
  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் தங்களுக்குக் கீழ் செயல்படும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய அதிகாரிகளின் துணையுடன் சிறப்பு முகாம்களை நடத்தினார்கள்.
  • அப்படிச் சிறப்பு முகாம் நடத்தியதில் பத்தே நாட்களுக்குள் நரிக்குறவர்களுக்கு வேண்டிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன.
  • எனவே, ஆறு மாதங்கள், ஒரு வருடம் என முயற்சி செய்தும் கிடைக்காத இந்த அடையாள அட்டைகள் 10 நாட்களுக்குள் கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியமாக அவர்களுக்குப் பட்டது.
  • இந்த நரிக்குறவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்பு, அரசு தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்; சொந்தமாக வீடு கட்டித் தர வேண்டும்; பிள்ளைகளின் படிப்புக்கு உதவ வேண்டும், அதன் மூலம் தங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள்.
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களோடு உரையாடியபோது, ‘‘உங்களுக்கு நிரந்தர வீடு வேண்டுமென்றால், நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.
  • பொது இடங்களில் பொருட்களை விற்பதற்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது.
  • அதேபோல, பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம்செய்து வைப்பதை நிறுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளையும் முன்வைத்தார். வருங்காலத்தில் இவையெல்லாம் நிறைவேறினால், அவர்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரும்.
  • திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குள் வருகின்ற நான்கு பழங்குடியினர் கிராமங்கள் சமீபத்தில் தான் நகர்ப்புற எல்லைக்குள் சேர்க்கப்பட்டன.
  • இங்கு வாழும் மக்கள் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முன்வந்தனர். இவர்கள் முதல் முறையாக வாக்களித்ததால் கிராமத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற ஆசையோடும் கனவுகளோடும் இருக்கிறார்கள்.
  • வாக்களித்த பின்பு, அந்த மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து இயல்பாகக் கோரிக்கைகளை முன்வைத்தது கவனிக்கத்தக்கது.
  • காட்டுக்குள் எங்கள் கிராமம் இருப்பதால் சரியான சாலை வசதி கிடையாது; மருத்துவ வசதி, கல்வி வசதி என்று எதுவும் கிடையாது.
  • குறிப்பாக, எங்கள் குழந்தைகள் நகரத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்தவர்கள்; கரோனா பொதுமுடக்கக் காலத்தில் திடீரென்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
  • ஆனால், வீட்டில் இணையதள வசதி இல்லாததால், அவர்களால் எந்த இணையவழி வகுப்புகளிலும் இணைய முடியவில்லை.
  • எனவே, எங்களுக்குக் கைபேசி அலைவரிசை கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தால், அது மிகப் பெரிய நன்மை பயக்கும் என்றெல்லாம் கூறினார்கள்.
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதே அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன, அடிப்படைத் தேவைகள் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் நரிக்குறவர்கள், பழங்குடியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும்.
  • அப்படிக் கணக்கெடுப்பு நடத்தும்போதுதான் எவ்வளவு பேரிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருக்கின்றன என்பதைப் பரிசோதிக்க முடியும். அடையாள அட்டை இல்லாத ஒவ்வொருவருக்கும் உடனடியாக அது வழங்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் அவர்களுக்கு ஒரு நிரந்தர அடையாளமும், நிரந்தர அங்கீகாரமும் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் முக்கியமான உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குச் சரியாகச் சென்று சேரும்.
  • இதன் மூலம் அவர்களுக்குச் சமூகத்தில் மற்றவர்களோடு சரிசமமாக நிற்பதற்கும், மாண்போடு வாழ்வதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படும்.
  • பாரம்பரியமாக, அவர்கள் செய்துகொண்டிருந்த தொழிலிலிருந்து விடுபட்டு, அவர்களுடைய பிள்ளைகள் அடிப்படைக் கல்வி பெறுவதற்கும், உயர் கல்விக்குச் செல்வதற்கும் நிச்சயமாக அது வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி: தி இந்து (15 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories