TNPSC Thervupettagam

முதியோரின் அருமை அறிவோம்

October 1 , 2020 1326 days 1248 0
  • அரிய செயல்களை செய்வதற்கும் சவாலான பணிகளை மேற்கொள்வதற்கும் அனுபவம் மிக்க மூத்தவர்கள் தேவைப்படும் இன்றைய சூழலில், அது குறித்தெல்லாம் அக்கறை இல்லாமல் மூத்தவர்களையும் பெற்றோரையும் புறக்கணிக்கும் மனநிலை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிகமாகவே காணப்படுகிறது.
  • பாலூட்டி, தாலாட்டி, தோளில் சுமந்து, கல்வி கற்க வைத்து, வேலை கிடைக்கும் வரை நம் மனம் கோணாமல் பராமரித்து அதன்பின் திருமணம் செய்வித்து நம் பிள்ளைகளையும் பாதுகாத்து பாசத்திற்கும் பண்பாட்டிற்கும் இலக்கணமாக திகழ்ந்து வருபவர்கள் முதியோராகிவிட்ட நம் பெற்றோர்தான்.
  • வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காக பாடுபட்டு வரும் பெற்றோர்களை, அந்தப் பிள்ளைகள் ஒற்றை வார்த்தையில் "உங்கள் கடமையைத்தானே செய்தீர்கள்' என்று சட்டென பேசி அவர்களின் மனத்தை முறித்துவிடும் போக்கு உண்மையிலேயே வேதனைக்குரியது.
  • எத்தனையோ வயதான பெற்றோர் தங்களின் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் மன தைரியத்தால் இன்றளவும் உழைத்து வருகின்றனர். அவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கூட பிள்ளைகள் சிலர் விட்டு வைப்பதில்லை.
  • சாலையில் செல்லக்கூடிய கார்களை கையசைத்து கூப்பிடும் எண்ணற்ற முதியவர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்பது கண்ணில் நீர் வரவழைக்கக் கூடிய செய்தி.
  • அவர்கள் மழையிலும் வெயிலிலும் கால்கடுக்க எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. இவையெல்லாம் அவர்களின் பிள்ளைகளுக்கு ஏன் புரிவதில்லை?
  • இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் விடுவதைப் பற்றி எந்தவிதமான குற்ற உணர்வும் கொள்வதில்லை.
  • தான் குழந்தையாய் இருந்தபோது பெற்றோர் தன்னை இப்படி ஏதோ ஒரு விடுதியில் சேர்த்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று இவர்கள் யோசிப்பதே இல்லை.
  • இன்னும் சிலர் பெற்றோரைத் தனியாக ஓரிடத்தில் விட்டு விட்டு தாங்கள் வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.
  • இரண்டு பிள்ளைகள் இருக்கும் சில குடும்பங்களில் தாயை ஒரு இடத்திலும் தந்தையை மற்றோர் இடத்திலும் வைத்துக்கொள்ளும் அவலமும் நடந்து வருகிறது.
  • இதையும் தாண்டி ஆறு மாதத்திற்கு ஒருவரும், மற்றொரு ஆறுமாதத்திற்கு இன்னொருவரும் பார்த்துக் கொள்வது என தீர்மானித்து அதன்படி தங்களது வீடுகளில் பெற்றோரைத் தவணை முறையில் பராமரித்து வருகின்றனர்.
  • சில வீடுகளில் முதியவர்களை சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாக நடத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.
  • காலையில் எழுந்து பால் வாங்குவது முதல் ஒரு நாளின் அத்தனை வேலைகளையும் முதியவர்களை இன்றைய தலைமுறையினர் செய்ய வைக்கின்றனர்.

மூத்தவர்களின் அருமை

  • பல நிறுவனங்களில் இரவுநேர காவலாளியாக பணிபுரியும் முதியவர்களை விசாரித்தால் அவர்களின் கண்ணீர் கதை நம் நெஞ்சை உலுக்கி விடும்.
  • பெரும்பாலான இரவு நேரக் காவலாளிகளுக்கு பிள்ளைகள் இருப்பார்கள்.ஒரு காலத்தில் வசதியாக இருந்து, பின்னர் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விற்று படிக்க வைத்ததும் இறுதியாக பிள்ளைகளுக்காக குடியிருந்த வீட்டையும் விற்று அந்தப் பணத்தை வைத்து பிள்ளைகளை நல்ல நிலைக்கு உயர்த்தியதும் புரியும்.
  • பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் வேறு வழியின்றி வயிற்றுப் பிழைப்புக்காகவும், தங்குவதற்காகவும் இரவு நேர காவலாளி பணியை செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருப்பது புரியும்.
  • இதுபோல் நல்ல நிலையில் இருந்த பெற்றோர் பலரும் தற்போது கவனிக்க ஆளின்றி புறந்தள்ளப்பட்டிருப்பதை வீதிதோறும் காண முடியும்.
  • இத்தகைய செயல்கள் பெற்றோரின் மனத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணரக்கூட இன்றைய இளைய தலைமுறையினருக்கு நேரம் இருப்பதில்லை.
  • அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் நமது செயல்பாடுகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைய முதியோர் இல்லத்தில் நமக்காக இன்றே அவர்கள் முன்பதிவு செய்யக் கூடும்.
  • பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளைத் தண்டிப்பதற்கான சட்டம் வந்து விட்டது. ஆனால், பிள்ளைகளின் மீது புகார் செய்யும் அளவிற்கு பெற்றோர் மனம் இன்னும் மாறவில்லை.
  • தங்கள் பிள்ளைகள் மீது புகார் கொடுத்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்களே என்று வருந்துபவர்கள்தான் பெற்றோர்.
  • ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது இருந்து வந்தது. அப்போது பிள்ளைகளை குறிப்பாக, பெண்களை வீட்டில் விட்டு விட்டு நாம் அச்சமின்றி வெளியே செல்லக் கூடிய சூழல் இருந்தது.
  • காலப்போக்கில் கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக் குடும்ப வாழ்க்கை முறை வந்து விட்டது. தனிக் குடும்பத்திலும் வயதான பெற்றோர் இருந்தால் அவர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு நாம் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிந்தது.
  • பிள்ளைகளை, பெரியவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டதுடன் அவர்களுக்கு நல்ல பண்புகளையும் கற்பித்து வந்தார்கள்.
  • இப்போது நாம் வெளியே செல்லத் தயங்குகிறோம். பிள்ளைகளை யாரிடம் விட்டுச் செல்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறோம். உலகில் நடக்கும் நிகழ்வுகளால் யாரையும் நம்ப முடியாமல் தவிக்கிறோம். இதற்காகவாவது, நமது சுயநலம் கருதியாவது பெற்றோரை, முதியோரை நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதியவர்களையும் பெற்றோரையும் அரவணைப்போம். அவர்களிடம் நேசத்தையும், பாசத்தையும் காட்டுவோம். எதிர்கால சந்ததியினருக்கும் மூத்தவர்களின் அருமையைப் புரிய வைப்போம்.
  • இன்று (அக். 1) உலக முதியோர் நாள்.

நன்றி: தினமணி (01-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories